சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது: ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி

பட மூலாதாரம், TNDIPR

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பாஜகவின் முன்னோர்களாக இருந்த அமைப்புகள் இந்திய விடுதலைக்கு கடுகளவும் பங்களிக்கவில்லை என்றும், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலையானார் என்றும் காங்கிரஸ் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளது.

ஆளுநர் என்ன பேசினார்?

பாரதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாகவும் ராமலிங்க வள்ளலாரின் இருநூறாவது பிறந்த நாள், இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவு ஆகியவை முப்பெரும் விழாவாக திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் திங்கட்கிழமையன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 'இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

"நம்முடைய சுதந்திரப் போராட்டம் என்பது பெருமளவில் மக்கள் பங்கேற்ற போராட்டம். அப்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில மொழிகளில் மக்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வது மிக முக்கியமாக பார்க்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் இந்தப் போரட்டத்தில் பங்கேற்றார்கள். பதிவுசெய்யப்பட்டிருக்கும் மைய நீரோட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது, இந்திய தேசிய காங்கிரசைச் சுற்றியே அமைந்திருக்கிறது. அவர்கள்தான் போராட்டத்தை முன்னின்று நடத்தியதால் அப்படி இருக்கலாம். மகாத்மா காந்தி அதற்கு தலைமை ஏற்று நடத்தினார். இந்த இயக்கத்தில் மேலும் பங்கேற்றவர்கள், வரலாற்றின் பின்குறிப்பாகவே இடம்பெற்றார்கள்.

வெகுமக்கள் பங்கேற்ற இயக்கமான இந்திய சுதந்திரப் போராட்டத்தில், வெறும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் மட்டும் பங்கேற்றிருக்க முடியாது. அதிலிருந்தவர்கள் மிகப் பெரிய தலைவர்கள், அதில் சந்தேகமில்லை.

ஆனால், மேலும் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், வேலு நாச்சியார், வீர பாண்டிய கட்டபொம்மன், சிதம்பரம் பிள்ளை, மருது சகோதரர்கள் போன்ற பலர் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் கிடைக்கவில்லை.

சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி அகிம்சை வழியில் நடந்தார். ஆனால், வேறு சிலரால், ஆங்கில ஆட்சியின் கொடுமைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உதாரணமாக, சுபாஷ் சந்திர போஸைப் போன்றவர்கள். அவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.

சர்தார் உத்தம் சிங், பகத் சிங், சந்திரசேகர ஆஸாத், ராஜ்குரு, சுக்தேவ் போன்ற பலர் இருக்கிறார்கள். அவர்களால் ஆங்கில ஆட்சியை ஏற்க முடியாமல் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் புரட்சிக்காரர்கள் எனப் புறம்தள்ளினார்கள். இப்போதைய சுதந்திரப் போராட்ட வரலாறு இவர்களுக்கு நியாயம் செய்யவில்லை.

சுதந்திரப் போராட்டம் 1857ல் துவங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், 1806 ஜூலை 10ஆம் தேதி வேலூர் கோட்டையில் நடந்தது என்ன? அதில் பல ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ்காரர்கள் அதனைக் கலகம் என்று அழைத்தார்கள். அது சுதந்திரப் போராட்டம் இல்லையா? இதுபோல பல இருக்கிறது.

1802ல் பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் எங்கே வருவார்கள்? அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று அழைக்கிறோமா, இல்லை மறந்துவிட்டோமா?

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறும் அவை ஆவணப்படுத்தப்பட்டவிதமும் எண்ணிலடங்காத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நியாயம் செய்வதாகச் சொல்ல முடியாது.

ஆளுநர் ஆர்.என். ரவி

பட மூலாதாரம், Raj Bhavan/Twitter

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறும் அவை ஆவணப்படுத்தப்பட்டவிதமும் எண்ணிலடங்காத சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நியாயம் செய்வதாகச் சொல்ல முடியாது.

புகழப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை நரேந்திர மோதி அரசு ஆவணப்படுத்த ஆரம்பித்தபோதுதான், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் பெயர் வெளியில் வந்தது. அதுவரை அவர், விளிம்பு நிலையில் இருந்தார்.

நான் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தபோது, அதில் 30 பேர்தான் இருந்தார்கள். அப்படியானால், வேலூர் கோட்டையில் இறந்தவர்கள் யார்?

சுதந்திரப் போராட்டம் குறித்த தகவல்கள் தெளிவற்று இருப்பதால்தான், நாடு துண்டாடப்பட்டது. காஷ்மீரின் பெரும் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது" என்று குறிப்பிட்டார் ஆளுநர் ரவி.

ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவியின் கூற்றுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான கோபண்ணா.

"இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியது காங்கிரஸ்தான். 1857க்குப் பிறகு, ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை கையாளக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. திலகர், கோபாலகிருஷ்ண கோகலேவுக்குப் பிறகு, காந்தி தலைமை ஏற்றார். அகிம்சை வழியில் போராடிய போராட்டம்தான் இந்தியாவின் விடுதலைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. இதனை காந்தியின் அகிம்சையும் சத்தியாகிரகமும் பெற்றுத்தந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவி

பட மூலாதாரம், Raj Bhavan/Twitter

விடுதலைப் போராட்டத்தில் இன்றைய பா.ஜ.கவின் முன்னோர்களான இந்து மகா சபையோ, ஆர்.எஸ்.எஸ்-சோ கடுகளவு பங்களிப்பையும் அளித்ததில்லை. சாவர்க்கர், மன்னிப்புக் கடிதம் எழுதி விடுதலை ஆனார். ஜவஹர்லால் 3259 நாட்கள் எந்தந்த சிறையில் இருந்தார் என்பதை காங்கிரஸ்காரர்களால் சொல்ல முடியும். இன்றைய பா.ஜ.க. தலைவர்களோ, தீனதயாள் உபாத்யாயாவோ, ஜனசங்க தலைவர்களோ சிறையில் இருந்ததற்கு ஆதாரம் உண்டா?

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் தவிர, இடதுசாரித் தலைவர்களும் பங்கேற்றனர். பெரியார், ஜீவா போன்றோர் பங்கேற்றார்கள். சுதந்திரப் போராட்டம் என்று நீங்கள் சொன்னால், நேரு, காந்தி, அபுல்கலாம் ஆசாத் என்ற பெயர்கள்தான் நினைவுக்கு வரும். ஜனா கிருஷ்ணமூர்த்தி நினைவுக்கு வரமாட்டார். அதனால்தான் சாவர்க்கருக்கோ, கோல்வால்கருக்கோ இவர்களால் சிலை வைக்க முடியாமல் காங்கிரசைச் சேர்ந்த வல்லபாய் படேலுக்கு சிலை வைக்கிறார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவுச் சின்னம் இருக்கிறது. அவருடைய கதை திரைப்படமாக வந்திருக்கிறது. ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. ஆளுநர் ஆர்.என். ரவி பா.ஜ.கவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்" என்கிறார் கோபண்ணா.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்ற பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசிவருகிறார். அந்தப் பேச்சுகள் பல தருணங்களில் சர்ச்சைகளாக உருமாறிவருகின்றன.

காணொளிக் குறிப்பு, அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: