புதுச்சேரி அரசியல்: ஸ்டாலின் செய்த விமர்சனம், எதிர்வினை ஆற்றிய தமிழிசை - என்ன நடந்தது?

ஸ்டாலின்
படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

"ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கக் கூடிய வகையில் புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா? இது மாநிலத்திற்கே மிகப்பெரிய இழுக்கு" என புதுச்சேரி திமுக அவைத் தலைவர் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியுள்ளது அரசியல் வட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், மாநில திமுக அவைத்தலைவருமான எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமண விழா விழுப்புரம் மாவட்டத்தின் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தலைமையேற்று இத்திருமண விழாவை நடத்தி வைத்தனர்.

புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, செஞ்சி மஸ்தான், பன்னீர்செல்வம், பொன்முடி, புதுச்சேரி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அங்கே உதயசூரியன் ஆட்சி மலர்ந்தது. மலர்ந்திருக்கும் இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையோடு சொல்கிறோம். அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சி புதுவையிலும் அமைய வேண்டும்.

இதே புதுவையில் இப்போது ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான். அதை இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அது மக்களுக்காக நடைபெறுகிறதா?

பொம்மை போல ஒரு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை பற்றிக் குறை சொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர் தான். ஆனால் 'நல்லவர்' வல்லவராக இருக்க வேண்டுமா இல்லையா? அவர் அப்படி இல்லையே.

ஒரு கவர்னர் ஆட்டிப்படைக்கக் கூடிய வகையில் புதுவையிலே ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா? அதைக் கண்டு வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா?

புதுச்சேரி பொம்மையா ஒரு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் - தமிழக முதல்வர் ஸ்டாலின்

இப்படி இங்கே ஒரு ஆட்சி‌ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப்பெரிய ஒரு இழுக்காக அமைந்திருக்கிறது. இதனால் ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா? இல்லையே," என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

"இப்படிப்பட்ட நிலையில் தான் புதுவையில் புதிய ஆட்சி அமைய வேண்டும். அது நமது ஆட்சியாக இருக்க வேண்டும் என நம்முடைய கழக நிர்வாகிகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் ஏற்கெனவே ஃபாரூக், ராமசந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் திமுக ஆட்சி நடந்துள்ளது. நிச்சயமாக மீண்டும் புதுவையில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் உதயமாகும். அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்," என்றார் ஸ்டாலின்.

தமிழிசை எதிர்வினை

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் ஆளுநர் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்தை பிபிசி தமிழ் கேட்டது.

அப்போது தமிழிசை, "புதுவையில் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்பது மாதிரியும் தமிழகத்தில் தான் நல்லது நடக்கிறது என்பது மாதிரியும் ஆளுநரின் அதிகாரமாக இருக்கிற மாதிரியும் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். இதில் எதுவுமே உண்மை‌ கிடையாது. முதல்வரும் ஆளுநரும் இணைந்து தான் செயலாற்றி வருகிறோம்,"என்று கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம், FACEBOOK/TAMILISAI SOUNDARARAJAN

"மேண்டோஸ் புயலில் எப்படி தமிழகத்திற்கு அபாயகரமான எச்சரிக்கை விடப்பட்டதோ அதே அபாயகரமான எச்சரிக்கை புதுவைக்கும்‌ விடப்பட்டது. புதுவையில் அதற்கேற்ப எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வலுவிழந்த மரங்கள் மற்றும் கிளைகள் வெட்டி, 160க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்பாடு செய்து, உணவு, வார் ரூம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். ஆனால் நாங்கள் சுய விளம்பரம் செய்து கொள்ளவில்லை.

புயலால் 'ஒருவர்' பாதித்தாலும் பாதிப்பு தான். நாங்கள் சரியாக செய்து விட்டோம் என்று சொல்கின்றனர். ஆனால் எத்தனையோ வீடுகள் சேதமடைந்துள்ளன. எத்தனையோ மக்கள் கஷ்டப்பட்டுள்ளனர். அதே அபாய எச்சரிக்கை தான் புதுவையிலும் இருந்தது. தமிழகத்தை போன்று அதே நிர்வாக முறை தான் இங்கும். ஆனால் அதை விட புதுவையைச் சிறப்பாக நிர்வகித்தோம்.

முதலமைச்சர் தான் பேரிடர் கலந்தாய்வு செய்தார்.‌ எல்லா இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அவரிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை மட்டுமே கேட்டறிந்தேன். என்னுடைய நேரடி தலையீடு எதிலும் இல்லை. அதாவது தேவையின்றி பேசுவது சரியில்லை என்பது தான் என்னுடைய கருத்து.

அதுமட்டுமில்லாமல் விவரம் முழுவதையும் அறியாமல் ஆளுநர் அதிகாரத்தைச் செலுத்துகிறார். முதலமைச்சர் அடங்கிக் கிடக்கிறார் என பேசுவதெல்லாம் சரி அல்ல," என்கிறார் தமிழிசை.

தமிழிசை சௌந்தர்ராஜன்

பட மூலாதாரம், FACEBOOK/DRTAMILISAIGUV

புயலில் விளம்பரம்

"இதே புயலை புதுச்சேரி மிகச் சிறப்பாக கையாண்டபோது இவர்கள் கவிதை எழுதிக் கொண்டும் விளம்பர படங்கள் போட்டுக் கொண்டது போல நாங்கள் செய்ய‌வில்லை.

தனி மனித பாதிப்பில் பங்கெடுத்துக் கொள்ளாமல். சிறப்பாகச் செயல்பட்டோம் என்று பாராட்டிக்கொள்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

கோவிட், புயல் உள்ளிட்ட அனைத்து சூழலிலும் தமிழகம் எப்படிச் செயல்பட்டதோ அதே போன்று தான் புதுவையும் செயல்பட்டது. இங்கே சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது," என்கிறார் துணைநிலை ஆளுநர்.

"திராவிட மாடலை தமிழில் சொல்லுங்கள்"

"திராவிட மாடல் என்று சொல்கிறார்கள். திராவிடம் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தது, அதில் தமிழுக்கு ஒரு பெயர் வையுங்கள் என்று கூறியிருந்தேன். அதாவது திராவிட மாடல் என்பதைத் தமிழில் சொல்லுங்கள். திராவிடமும் தமிழ் இல்லை, மாடலும் தமிழ் இல்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'சக முதலமைச்சர் இப்படி பேசியது சரியல்ல'

"தமிழக முதல்வர் சொல்வது போல் எதுவுமில்லை. புதுச்சேரியில் மிக நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அவர் திருமணம் விழாவிற்கு வந்து பேச வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

ஆளுநர் ஆட்சி என்றும் முதல்வரைச் சாடியும் பேசியிருக்கிறார் அது தவறானது. அனைத்து பணிகளிலும் புதுச்சேரி முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்னொரு முதலமைச்சரின் பணியை மோசமாக நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

அப்படியே ஆளுநர் அதிகாரம் செலுத்துகிறார் என்று சொன்னால், ஆளுநர் அரசியலமைப்பு தலைமை முறையில் துணை நிலை ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு உள்ளது. இதை நான் அதிகாரம் என்று சொல்லவில்லை, கூடுதல் பொறுப்பு மட்டுமே உள்ளது.

ஒரு சக முதலமைச்சர் பக்கத்து மாநில முதல்வர் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது தவறானது. எதை வைத்து அப்படி பேசினார் ஸ்டாலின்? எதுவுமில்லாமல் இவ்வாறு பேசுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு," என்று தெரிவித்தார் அவர்.

உங்கள் கூட்டணிக்கு தலைமை யார்?

"கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. நாங்கள் தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம். திமுக அதில் பங்கு இல்லை என்று சொல்கிறார். அதற்கு முதலில் திமுகவினர் பதில் சொல்லட்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கூட காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றதாக நாராயணசாமி கூறினார். ஆகவே முதலில் கூட்டணிக்கு திமுக தலைமை தாங்கட்டும். பிறகு புதுச்சேரி ஆட்சி பற்றிப் பேசலாம்," என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: