கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் அதானி கட்டும் துறைமுகம்: எதிர்ப்பும் ஆதரவும் ஏன்? – களத்தில் இருந்து பிபிசி தமிழ்

பட மூலாதாரம், KB JAYACHANDRAN
- எழுதியவர், பி. சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரளாவில் பாஜக-வுக்கு நெருக்கமான அதானி நிறுவனம் மூலம் கட்டப்படும் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்துக்கு மீனவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்புவதும், இந்த திட்டத்தை கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆதரித்து உறுதியாக நிற்பதும் அரசியலைத் தொடர்ந்து கவனிப்பவர்களை கொஞ்சம் துணுக்குற வைக்கும்.
இப்போதைக்கு இந்த திட்டத்துக்கு எதிரான போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, களத்தில் பரபரப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், இரண்டு தரப்பும் தங்கள் அடிப்படையான நிலைப்பாடுகளில் இருந்து நகர்ந்ததாகத் தெரியவில்லை.
என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்? அங்கே மீனவர்கள் நிலை என்ன? களத்துக்கு சென்று ஆய்வு செய்தது பிபிசி தமிழ்.
திருவனந்தபுரம் நகரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் விழிஞ்சம் பகுதி இருக்கிறது. கடற்கரையை ஒட்டிய இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன் தொழில் சார்ந்தே இருக்கின்றனர். இப்பகுதியில், ஆண்டுக்கு சுமார் 130 கோடி ரூபாய் வரை, வர்த்தகம் நடைபெறுவதாக மீனவ சங்கத்தினர் கூறுகிறார்கள்.
விழிஞ்சம் காவல் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் 8 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பெரிய கல்லில் செதுக்கபட்ட குகைக்கோவிலில் வீணா தட்சிணாமூர்த்தியின் சிற்பம் இருக்கிறது. ஆய் வம்சத்து மன்னர்களின் தலைநகரமாக இப்பகுதி இருந்ததாக கேரள தொல்லியல் துறையினர் பெயர்பலகை வைத்துள்ளனர்.

போர்த்துகீசிய மாலுமிகள் 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் கடல் மார்க்கமாக பயணிக்கும் போது, கடுமையான ஆலங்கட்டி மழையில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மாதாவை வேண்டியதால் காப்பாற்றப்பட்டார்கள் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொட்டாபுரம் தேவாலயத்தில் உள்ள கன்னி மேரி சிலை, கடல் மார்க்கமாக பயணிக்கும், மக்களை ஆசீர்வதிக்கும் தாய் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த தேவாலயத்திற்கு சிந்து யாத்ரா மாதா என்று பெயரிடப்பட்டதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பகுதி முழுவதும் தேவாலயங்கள் அதிகளவில் உள்ளன.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை இணைக்கும் முக்கிய துறைமுகமாகவும், பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக விழிஞ்சம் பகுதி இருந்துள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்தின் முடிவுப்பகுதியான முகையூத்தின் பள்ளிவாசல் அருகே மீனவ கிராமம் வெறிச்சோடி காணப்பட்டது. அதை கடந்து செல்லும் போது செயிண்ட் ஜோசப் சிரியன் தேவாலயத்தின் மிகப்பெரிய இயேசு சிலையின் பின்புறம் கடல் அலைகள், மீன் ஏலம் எடுப்பவர்களின் இடையே நம்மை ஈர்த்தது. மீனவர்கள் நீங்கள் செய்தியை திரித்து போடுகிறீர்கள் என காட்டமாக நம்மிடம் பேச ஆரம்பித்தனர். பிறகு, “நாங்கள் துறைமுகத்தை எதிர்க்கவில்லை. அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினாலே போதும்” என்றார் ஒரு மீனவர்.
விழிஞ்சம் காவல் நிலையத்தில் போராட்டக்காரர்களால், இரும்பு கதவு, ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. காவல் நிலையத்திற்கு வெளியே 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இருந்தனர். விழிஞ்சம் முக்கோள பகுதி பேருந்து நிறுத்ததில் 30க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
முள்ளூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் எஸ்பி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை கடந்து, முள்ளூரிலுள்ள அதானி துறைமுகத்தின் நுழைவு வாயில் முன்பு, துறைமுகத்திற்கு எதிராக வீடுகளை இழந்த, வல்லியத்துரா மீனவ மக்கள் 50 பேர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 139ஆவது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். துறைமுகத்திற்கு ஆதரவாக 50 பேர் மீனவர்களின் போராட்ட பந்தலுக்கு எதிரே, போட்டிப் போராட்ட பந்தல் அமைத்து அவர்களும் 135ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் லத்தீன் கத்தோலிக்க பாதிரியார் சபாஷ் தலைமையில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
இருபகுதிகளிலும் , வன்முறை நடந்ததற்கு அடையாளமாக நாற்காலிகள், பேனர்கள் அடித்து உடைக்கப்பட்ட தடயங்கள் இருந்தன.
139ஆவது நாள் மதியம் போராட்ட களத்திற்கு வந்த மதநல்லிணக்க தலைவர்கள் முதலில் துறைமுக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காந்திய வழியில் போராட்டம் நடத்த வலியுறுத்தினர். இதனையடுத்து துறைமுக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு சென்றனர். அப்போது மதத் தலைவர்களை அவர்கள் பேசவிடாமல், கலவரத்தில் நாங்கள் தாக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள், ஏன் இப்போது வந்திருக்கிறீர்கள் என காரசாரமாக பேசினர். பொறுமையாக இருந்த மதத் தலைவர்கள், அவர்களை பேசவிட்டு அமைதி வழியில் போராட்டம் நடத்தவும் பிரச்னைகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளும்படி வலியுறுத்தவே வந்ததாக தெரிவித்தனர். இந்த பேச்சு இரு தரப்பினரிடமும் கொஞ்சம் அமைதியைக் கொண்டுவந்ததை உணரமுடிந்தது.
துறைமுகத்திற்கு ஆதரவாக போராடுபவர்களின் வீடுகள் களத்திற்கு அருகருகே இருப்பதால், போராட்ட பந்தலில் பெரும்பான்மையாக யாரும் இருக்கவில்லை. ஆனால் எதிராக போராடுபவர்கள் விழிஞ்சம் பகுதியில் இருக்கும் 40 மீனவ கிராமங்களில் இருந்து, தினமும் ஒரு கிராமத்தினர் என, 140 நாட்கள் மீனவர்கள் இந்தபோராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உணவு, கழிப்பிட வசதிகள் போராட்ட பந்தல் அருகே அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடு இழந்த மீனவப்பெண் ஜெசி பிபிசி தமிழிடம் பேசும்போது, “2017 ஆம் ஆண்டு துறைமுக கட்டுமான பணிகள் தொடங்கிய போது கடல் அரிப்பு ஏற்பட்டு கொச்சுத்தோப்பில் 16 பேர் சென்ட்ரல் பள்ளியில் ஒரு வருடம் தங்க வைக்கப்பட்டோம். இதையடுத்து, பள்ளி திறப்பதால் காவல் துறையினரால் குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டோம். 16 நாட்கள் சாலைகளில் தங்கி இருந்தோம். இதனையடுத்து அரசின் சிமெண்ட் குடோனில் எங்களோடு சேர்த்து, வீடுகளை 64 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர். 10 க்கு 5 அடியுள்ள சிறிய அறையில் ஆறு பேர் வசிக்கிறோம். குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாது. வீட்டில் பெண் துணி மாற்ற வேண்டும் என்றால் ஆண்கள் வெளியே போகவேண்டும்.
சரியான ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் ,பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைக்கு சென்றாலும், மருந்தை வெளியில் வாங்க சொல்கின்றனர். கழிப்பறை, குடிநீர் வசதிகள் இல்லை. இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாது. எலி, காக்கை தொல்லைகள் அதிகம் இருக்கின்றன. இதை உணர்ந்ததால்தான் லத்தீன் பாதிரியார்கள் எங்களுக்கு ஆதரவாக, துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். எங்களுடைய இடத்தில் அரசு அதிகாரிகள் 10 நிமிடம் இருந்து பார்த்தாலே எங்களது கஷ்டம் புரியும்” என்று தெரிவித்தார்.
துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஜான்சி கூறிகையில், தான் விழிஞ்சம் புதியதொரை கிராமத்தை சேர்ந்த மீனவரின் மகள் எனவும், +2 வரை படித்துள்ளதாகவும் கூறினார். மேலும், மீன் வாங்கி விற்று தனது நான்கு குழந்தைகளை காப்பாற்றி வருவதாக தெரிவித்தார்.
இந்த வேலையை தவிர தனக்கு எந்த வேலையும் தெரியாது என்றார் அவர். மேலும், “நாங்கள் போராட்டம் நடத்துவது இங்கு வாழ வேண்டும் என்பதற்காகவே. இங்கு வாழ முடியவில்லை என்றால் நாங்கள் இங்கேயே சாகத் தயார்,” என்றார் ஆவேசமாக.
“யாரையும் துரோகம் செய்துவிட்டு நாங்கள் போராடவில்லை. 2018 பெருவெள்ளத்தில் எங்களுடைய மீனவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து பல உயிரை காப்பாற்றிய போது எங்களை இந்த அரசும், சமூகமும் பாராட்டின . நாங்கள் தீவிரவாதிகள் என அரசு சொல்வது வருத்தமளிக்கிறது. எந்த தவறும் செய்யாமல், வாழ்வுரிமைக்காக போராடும் எங்களை தீவிரவாதி என சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்றார். எங்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் தொடரும்,” என்றார் அவர்.

“துறைமுகம் கட்டினால் 550 பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால், கடல் தொழிலை நம்பி இங்கே 1,50,000 பேர் இருக்கிறோம். இவர்கள் நிலை என்ன ஆகும்? கல்வித்தகுதி இல்லாமல் கடலை நம்பி இருக்கும் எங்களுக்கு, அதானி துறைமுகத்தால் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பயிற்சியளிக்கப்படும் என்றார்கள். ஏழு ஆண்டுகளாகியும் ஒன்றும் செய்யாதவர்கள் இனிமேலா செய்வார்கள்?” என்றார்கள் வேறு சில மீனவர்கள்.
கடல் அரிப்பால் 4 அடி உயரத்தில் தொங்கும் வீடுகள்

மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சங்கமுகம் , வல்லியத்துரா, கொச்சுத்தோப்பு, உள்ளிட்ட இடங்களில் கடற்கரை அரிப்பால் வீடுகள் நான்கு அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. சங்கமுகத்தில் ஆறு வரிசைகளில் இருந்த வீடுகள் கடல் அரிப்பால் இடிந்து தற்போது கடற்கரையாக மாறியிருந்தது. பல வீடுகள் இடிந்தும், இடியாத நிலையிலும், ஒரு சில வீடுகள் விரிசல் விட்டும் இருந்தன. விரிசல் விட்ட வீடுகளில் இன்னும் சிலர் குடியிருந்து வருகின்றனர்.
இங்கு ஒரு சென்ட் விலை 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதே போல வல்லியத்தூரா மற்றும் சங்கமுகம் பகுதியில் துறைமுக கட்டுமானத்திற்கு பிறகு , 2018 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை 153 வீடுகள் இடிந்து விழுந்ததாக நிர்மலா என்ற மீனவப்பெண் கூறினார். இங்கு 30 லட்சம் மதிப்புள்ள தங்கள் வீடுகளை இழந்து, அரசின் சிமெண்ட் குடோனில் அடிப்படை வசதிகளின்றி , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், போதிய ஊட்டச்சத்து இன்றி தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
மேலும் வயதுக்கு வந்த இரு பெண்களை வைத்துக்கொண்டு அங்கு இருக்க முடியாது என்பதால், 6000 ரூபாய்க்கு வாடைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளதாக கூறினார் அவர். “என் கணவர் மீனவர். நான் மீன் விற்று வந்தேன். தற்போது வீட்டு வேலைக்கும், கழிப்பறையை சுத்தம் செய்யும் வேலைக்கும் செல்கிறேன். அரசு ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் வசிப்பதற்கு வீடு கட்டிக்கொடுத்தால் போதும்” என்றார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோதுமை சர்க்கரை, பருப்புகள், எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை கடல் வழியாக வல்லியத்துரா துறைமுகத்திற்கு வந்து, கப்பலில் இருந்து ரயில் மூலமாக சிமெண்ட் குடோனுக்கு கொண்டு வந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். அந்த இடத்தில் ரயில் தண்டவாளம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.

அந்த குடோனில்தான் துறைமுகத்தால், வீடு இழந்த மீனவர்கள், வெளியே வாடகை கொடுக்க முடியாமல், அடிப்படை வசதிகளின்றி, சுகாதாரமற்ற முறையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு அறை, 10க்கு 5 அடி அளவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஒரு குடோனுக்கு 16 குடும்பங்கள் வீதம் நான்கு குடோன்களில் 64 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். குடோனின் மேற்கூரை சிமெண்ட் ஷீட் என்பதால், வெப்பம் அதிகமாக இருக்கிறது. ஒரு அறையில் 6 பேர் வரை தங்கி இருக்கின்றனர்.
இதில் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதி , கழிவறை, குடிநீர் வசதி கிடையாது. குடும்பத்தில் அனைவரையும் இழந்து போராடும் மூதாட்டி முதல், குழந்தைகள் வரை சரியான தூக்கம் இல்லாமல் , எலிகளின் தொல்லைகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மீன் விற்கும் இடம் அருகே திருவனந்தபுரம் மாநகராட்சி குப்பை கொட்டுகிறது. அதை தடுக்க வேண்டுமென மனு கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் மெளனம் காப்பதாக மீன் விற்கும் பெண்கள் குற்றம் சாட்டினார்.
அனைத்தையும் சகித்துக்கொண்டு அரசின் எந்தவித உதவியுமின்றி, சர்ச்சின் உதவியோடு தங்களின் வாழ்நாளை கடத்தி வருகின்றனர்.
இவர்கள் தேவாலய பாதிரியாரின் சொல்லை வேத வாக்காக கருதுகிறார்கள். முள்ளூரில் பாதிரியார்கள் தங்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த போரட்டத்தை முன்னெடுத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மீனவர் போராட்டம் தொடர்பாக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கேரள சட்டமன்றத்தில் அனல் பறந்தது. எதிர்க்கட்சிகள் மீனவர்கள் பிரச்னையை முன்வைத்து ஆளும் கட்சியை கடுமையாக சாடின. இதனையடுத்து அரசு மீனவர்கள், கத்தோலிக்க பாதிரியார்களுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் முன்னெடுத்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து துறைமுக எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
போராட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து, போராட்டப் பந்தலில் இருந்த மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். தங்கள் வலியையும் வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் துறைமுக ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
துறைமுக ஆதரவாளரும், துறைமுக பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவருமான முள்ளூர் சணல் குமார் பிபிசி தமிழிடம் பேசும் போது, “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை துறைமுகத்திற்கு கொடுத்துள்ளோம். துறைமுகம் வரவேண்டும் என்பதற்காக முள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினோம். இந்த துறைமுகத்திற்கு எதிராக லத்தீன் சர்ச் பாதிரியார்கள் ஆதரவில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். நிலத்தை கொடுத்தவர்கள் துறைமுகத்திற்கு எதிராக எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
அதானி குழுமம் செய்த செலவை எடுக்காமல் எப்படி போகும்? அவர்கள் நீதிமன்றத்தை நாடி கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள். மீனவர்கள் துறைமுக கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இங்கு போராட்டம் நடத்தி வந்தனர். மீனவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. டெல்லியை மையமாக கொண்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் இத்திட்டத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடக்கிறது” என்றார்.
இந்த துறைமுகம் வந்தால நாடும், இங்குள்ள மக்களும் பொருளாதார மேம்பாடு அடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

முள்ளூர் வார்டு கவுன்சிலரும், துறைமுக பாதுகாப்பு ஆதரவாளருமான ஓமணா கூறும்போது, விழிஞ்சம் துறைமுகம் வரவேண்டும் என முள்ளூர் மக்கள் எதிர்பார்த்தனர். விழிஞ்சம் துறைமுகம் இயற்கையிலேயே 20 மீட்டருக்கு மேல் ஆழமான கடற்பகுதியாகும். துறைமுக கட்டுமானத்தால் நடந்த கடல் அரிப்பால் வீடுகளை இழந்தவர்கள் , துறைமுகம் முன்பு வந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற கலவரத்தில் துறைமுக எதிர்ப்பு போராட்டக்காரர்களால் தான் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை யாரும் தாங்கள் பாதிக்கப்பட்டபோது தங்களை வந்து பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தங்கள் உயிரே போனாலும் துறைமுகம் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விழிஞ்சம் பகுதி முகையூத்தின் பள்ளி வாசல் அருகே வசிக்கும் மீனவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தங்களின் நிலமும் எடுக்கப்பட இருப்பதாகவும், அப்போதுதான் அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் கூறினர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமே இப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100% துறைமுக பணிகள் நிறைவேற்றப்பட்டால், மற்ற மதத்தினரும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சூழலியல் ஆர்வலர் குற்றச்சாட்டு
துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களை, அலைகள் மற்றும் புயல்கள் தாக்காமல் இருக்க கடலலை வரும் திசைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்ஸ் கட்டப்படுகிறது. இதனால், கடல் நீரோட்டத்தின் திசையே மாறியுள்ளது. இதன்விளைவாக அடிக்கடி கடல் சீற்றம், கொந்தளிப்புகள் ஏற்படுவதால் கடலில் விபத்துகளும், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு துறைமுக பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்றும் மண் சரிவு அடிக்கடி ஏற்படுவதாகவும் கோஸ்டல் வாட்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரும், விழிஞ்சம் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவருமான ஏ.ஜெ.விஜயன் குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில், விதி 300ன் கீழ் , கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டடுள்ளார். அதில் கடலோர அரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குழு, மீனவர்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மண்ணெண்ணெய் என்ஜின்களை (மீன்பிடி படகுகளின்) டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு இயந்திரங்களாக மாற்றுவது விரைவில் செயல்படுத்தப்படும், மேலும் அதற்கு ஒரு முறை மானியம் வழங்கப்படும்.
பேரிடர் மேலாண்மை ஆணையம் கடலுக்குச் செல்லத் தடை விதித்த நாட்களில் ஏற்பட்ட கூலி இழப்பைக் கருத்தில் கொண்டு, மீன்பிடித் திணைக்களப் பட்டியலில் உள்ள மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













