கேரளாவில் அதானியின் விழிஞ்சம் துறைமுக திட்ட எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: அரசு, போராட்டக்காரர்கள் சொல்வது என்ன?

- எழுதியவர், சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கேரள முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு விழிஞ்சம் துறைமுகத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் வாபஸ் பெறப்பட்டதாக போராட்டத்தை ஒருங்கிணைத்து வந்த யூஜின் பெரேரா அறிவித்துள்ளார்.
கேரளாவின் விழிஞ்சம் அதானி துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடந்து வந்த போராட்டம் வலுவடைந்தது.
இதையடுத்து கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடந்த பிரச்னையில் கைது செய்யப்பட்ட 5 பேரை விடுதலை செய்யக்கோரி போராட்டக்காரர்கள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில், காவல் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 40-க்கும் மேற்பட்ட காவலர்கள், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அடையாளம் காணக் கூடிய வகையிலான 3,000 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக போலீசின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் கேரள கடலோர மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
போராட்டக்குழுவுடன் சந்திப்பு

இந்த நிலையில், துறைமுகத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராடுவோரை, முள்ளூரிலுள்ள போராட்ட பந்தலில் கடந்த திங்கள் கிழமை மத நல்லிணக்கத் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், போராட்டத்தை எதிர்க்கவோ ஆதரிக்கவோ வரவில்லை என்றும், காந்திய வழியில் அமைதியாக போராட்டம் நடத்தும்படி கூறுவதுதான் தங்கள் நோக்கம் என்றும் மத தலைவர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு மீனவர்கள் எதிராக இல்லை. அவர்களது பிரச்னைகளை அரசு சரி செய்ய வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
துறைமுகம் வர வேண்டும் என்பதற்காகதங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இரு தரப்பு பிரச்னைகளும், அமைதி வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதாலேயே பேச்சுவார்தைத்கு வந்திருப்பதாக மத தலைவர்கள் தெரிவித்தனர்.
இவர்களின் சந்திப்பு பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக பார்க்கப்பட்டது.
சட்டப்பேரவையில் எதிரொலித்த பிரச்னை

இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை இப்பிரச்னையை எதிர்கட்சியினர் எழுப்பினர்.
அப்போது உறுப்பினர் சுரேந்திரன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கேரள துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாநில அரசு சாதகமான, நடைமுறையான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
போராட்டக்காரர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், கரையோர அரிப்பு காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமையன்று அமைச்சரவை துணைக் குழுவுடன் கலந்துரையாடினர்.
பின்னர் முதல்வருடன் நடந்த கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் - துணைக் குழு – போராட்டக்காரர்கள் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பு நடந்தது.
அப்போது, கடலோர அரிப்பினால் வீடுகள் மற்றும் நிலங்களை இழந்த மீனவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை மதிப்பிட அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது. இந்தக் குழுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் பிரதிநிதிகளையும் இணைக்க வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கட்டுமான நிலையில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் 140 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் டிசம்பர் 6ஆம் தேதி செவ்வாய்கிழமை போராட்டத் தலைவர்கள் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டது.
இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த லத்தீன் கத்தோலிக்க விகார் ஜெனரல், யூஜின் பெரேரா போராட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.
போராட்டக்காரர்கள் கூறுவது என்ன?
“இப்போதைக்கு நாங்கள் போராட்டத்தை நிறுத்துகிறோம். போராட்டங்கள் எப்போதுமே தங்கள் நோக்கங்களை அடைந்த பிறகு மட்டுமே முடிவுக்கு வருவதில்லை. ஒவ்வொரு போராட்டமும் பல கட்டங்களைக் கொண்டது. போராட்டத்தின் ஒரு கட்டம் ஒருமித்த கருத்துடன் முடிவடைந்துள்ளது," என்று முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பெரேரா கூறினார்.
எவ்வாறாயினும், மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால் போராட்டம் முழுவதுமாக வாபஸ் பெறப்படவில்லை, தேவைப்பட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஏழு கோரிக்கைகளைப் பொருத்தவரை பேச்சுவார்த்தை திருப்திகரமான முடிவைக் கொடுக்கவில்லை என்றார்.

பல துறை பிரதிநிதிகளை உள்ளடங்கிய 7 பேர் கொண்ட குழு ஒன்று இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நவம்பர் மாதமே தனது ஆய்வைத் தொடங்கிவிட்டது. 3 மாத காலத்தில் இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இந்தக் குழுவில் மீனவர் போராட்டக்காரர்களின் பிரதிநிதி ஒருவர் இடம்பெறுவார் என அரசாங்கம் கூறினாலும், அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார் பெரேரோ.
"கேரள உயர் நீதிமன்றத்தில் இந்த திட்டம் தொடர்பாக 126 மீனவர்கள் 'ரிட்' மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும் என்று நம்புகிறோம். அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆய்வில் இந்த திட்டத்தால் கடற்கரையோர மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்றால் இதனை ஏற்றுக்கொள்வோம்," என்று பெரேரோ கூறினார்.
இப்போதைக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் இத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில், போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, அந்த பகுதியில் திட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அளவு அல்லது தீவிரம் குறித்து தாங்கள் சொந்தமாக ஓர் ஆய்வை மேற்கொள்ள இருப்பதாகவும் பெரேரா கூறினார்.
கடலோர அரிப்பு அல்லது இயற்கைப் பேரிடர்களால் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தவர்களுக்கு, தங்குமிடத்திற்கான வாடகைப் பணத்தை மாநில அரசு வழங்கும் விவகாரத்தில், முன்பு முடிவு செய்யப்பட்ட ரூ 5,500 தற்போது ரூ 8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் பெரேரா.
இருப்பினும், கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2,500 அதானி குழுமத்தின் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து வரக்கூடும் என்பதால் அது தங்களுக்குத் தேவையில்லை என்றும், ரூ.5,500 மட்டுமே போதும் என்றும் தாங்கள் முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத்தை வழிநடத்திய பாதிரியார்கள் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெரேரா கூறினார். இதற்காக நீதிமன்றத்தை அணுகவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டுமானத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து மாநிலங்களவையில் கடந்த சில நாள்களாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோது, ஏதேனும் வெளி சக்திகள் போராட்டத்தில் பங்காற்றுகின்றனவா என்ற சந்தேகத்தை வெளியிட்டிருந்தார் முதல்வர் பினராயி விஜயன்.
இப்பிரச்னையை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுமுகமாகத் தீர்க்க அரசாங்கம் விரும்புவதாகவும், இந்த நடவடிக்கையில் பங்கேற்க அனைவரின் ஆதரவையும் கோருவதாகவும் கூறிய முதலமைச்சர், வளர்ச்சிக்கு தவிர்க்க முடியாதது என்பதால், துறைமுக உள்கட்டமைப்புத் திட்டம் கைவிடப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சிகள் புகாருக்கு முதல்வர்பதில்

இடது முன்னணி அரசாங்கம் இந்த பிரச்சினையை கையாண்ட விதத்தைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கைவிடுவதற்கு அரசு தயாராக இல்லை என்று கூறின.
எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், கரையோர அரிப்பினால் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து, மண்ணெண்ணெய், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையில் ஏதேனும் இரகசிய பிணைப்பு உள்ளதா என்றும் அவர் கேட்டார். மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருந்து சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்திய வன்முறை சம்பவங்கள் இருந்தாக குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்த முதல்வர், அமைச்சர்கள் துணைக் குழுவுடன் போராட்டக்காரர்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், பல சுற்று அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளும் நடந்தன என்றும் கூறினார்.
விழிஞ்சம் போராட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஒத்திவைப்புத் தீர்மானத்தின்மீது, நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து விவாதம் நடைபெற்ற நிலையில் அரசுக்கு அழுத்தம் ஏற்படது.
இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து, அரசு பேச்சு வார்த்தை நடத்தியதால், முதல் கட்ட போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
விழிஞ்சம் பன்னாட்டு கடற்துறைமுக லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. துறைமுகத்தால், மீனவர்கள் பாதிப்பு அடைந்திருந்தால், அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

துறைமுகத்திற்கு எதிராக போராடி வந்த வல்லியதுராவைச் சேர்ந்த மீனவர் சுரேஷ் பீட்டர் பிபிசி தமிழிடம் கூறுகையில், எந்த ஒரு போராட்டமும் முடிவுக்கு வந்ததுதான் தீரும். ஆனால் தற்போது முதல்கட்டகமாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. எங்களது ஏழு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். கடற்கரை அரிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னரே பாதிப்புகள் அரசுக்கு தெரிய வரும். விழிஞ்சம் பகுதியில் 27 ஆம் தேதி கலவரத்திற்கு பிறகு காவல் துறையினர் பதிந்த எப் ஐ ஆரில், கிறிஸ்தவர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பிரச்சனைகள் வராமல் இருக்கவே முதல்கட்டமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும் என்கிறார்.
துறைமுகத்திற்கு ஆதரவாக போராடி வரும் முள்ளூர் வார்டு கவுன்சிலர் ஒமணா பிபிசி தமிழிடம் பேசுகையில், துறைமுகத்திற்கு எதிராக போராடி வருபவர்கள் அவர்களது போராட்டத்தை நிறுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களது போராட்ட பந்தல் எடுக்கப்பட்டவுடன் தங்களது பந்தலும் அகற்றப்படும் என தெரிவித்தார்.
130 நாட்களாக போராடி வந்த நிலையில் , ஆதரவாளர்களின் போராட்டமும் இங்கே முடிவுக்கு வந்துள்ளது.

கடல் அரிப்பால் வீடிழந்த 400 க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு , இடம் கொடுத்து வீடு கட்டிக்கொடுத்தாலே இப்பிரச்சனை முடிந்திருக்கும். அதை விடுத்து முகாம்களில் அடிப்படை வசதியில்லாமல், சுகாதாரமுமின்றி அவர்கள் மூன்றரை ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டிருப்பதே பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்பதை, அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












