நியூசிலாந்துக்கு சாதகமாக உள்ள வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா? நம்பிக்கை தரும் 3 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
"இது ஓர் அற்புதமான உணர்வு. இன்று நாங்கள் வலுவான அணியின் சவாலை எதிர்கொண்டோம். இப்போது நாங்கள் துபைக்கு செல்கிறோம். அங்கு இதற்கு முன் இந்தியாவை எதிர்கொண்டிருக்கிறோம்."
லாகூரில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய பின்னர் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசிய வார்த்தைகள் இவை.
இதை சொல்லும்போது இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து நியுசிலாந்து அணி கேப்டன் சாண்ட்னருக்கு எந்த அழுத்தமும் இருந்தது போலத் தெரியவில்லை.
இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியடையாமல் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த கால போட்டிகளைப் பார்க்கும்போது, துபையில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்வது இந்திய அணிக்குப் பெரிய சவாலாக இருக்கக்கூடும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 9) மோதுகின்றன. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?

நியூசிலாந்தும், இந்தியாவும், 25 ஆண்டுகளுக்கு முன்பு 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மோதின. மிக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், 265 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டு பந்துகள் மிச்சமிருந்தபோது இலக்கை எட்டி, இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆனால், ஒருநாள் போட்டி தொடரில் நியூசிலாந்து பெற்ற ஒரே வெற்றி இதுதான். 2000ம் ஆண்டில் இந்திய அணி அந்த வாய்ப்பை இழந்திருக்கலாம், ஆனால் அதன் பின்னர் இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடர்களை ஐந்து முறை வென்றுள்ளது. இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இரண்டு முறை வென்றதும் அடங்கும்.
நியூசிலாந்தால் கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும், ஐசிசி தொடர்களில் அதன் செயல்பாடு தொடர்ந்து சிறப்பாக இருந்திருக்கிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2023 வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் உலகக் கோப்பைகளிலும், நியூசிலாந்து அணி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கிறது.
வரலாறு நியூசிலாந்து அணிக்கு சாதகம்

பட மூலாதாரம், Getty Images
50 ஓவர் கொண்ட ஐசிசி தொடர்களில் இந்தியாவும் நியூசிலாந்தும் 16 முறை மோதியுள்ளன. இந்தப் போட்டிகளில், இந்திய அணி 6 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 9 முறை வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி எந்த முடிவும் எட்டாமல் இருந்திருக்கிறது.
மார்ச் 9ஆம் தேதி, நியூசிலாந்து அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக விளையாடும். இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நியூசிலாந்தைவிட இந்தியாவுக்கு அதிகம். மார்ச் 9ஆம் தேதி இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக விளையாடும்.
கடந்த ஆறு ஆண்டுகளில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் இரண்டு முறை இந்தியாவும் நியூசிலாந்தும் மோதியுள்ளன.
2019 உலக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்குப் பழி வாங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2025இல் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரே குழுவில் உள்ளன. இந்தத் தொடரில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிக சவாலாக உள்ளனர்.
குரூப் போட்டியின் போது ஐம்பது ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அது மட்டுமல்ல, ஷ்ரேயாஸ் ஐயர் தவிர, இந்தப் போட்டியில் வேறு எந்த பேட்ஸ்மேனாலும் அரை சதம்கூட அடிக்க முடியவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்வதைத் தடுத்த மேட் ஹென்றி இந்தப் போட்டியிலும் இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தார். மேட் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இருப்பினும், தனது சுழற்பந்து வீச்சாளர்களின் உதவியுடன் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வலுவாக மீண்டு வந்த நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images
குழு சுற்றில் இந்தியாவுக்கு எதிரான தோல்வி, நியூசிலாந்து அணி மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு முன்பே நியூசிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் நியூசிலாந்து பிரமாதமாக விளையாடியது. ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் இருவரும் அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்தனர்.
அதன் பின்னர், மிட்செல் 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிலிப்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்தின் ஸ்கோரை 50 ஓவர்களில் 362 ரன்கள் என உயர்த்துவதில் இவர்கள் இருவரும் முக்கியப் பங்காற்றினர். இதன் மூலம், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு இவர்கள் எவ்வளவு பெரிய சவாலாக இருக்க முடியும் என்பதை இந்த நான்கு பேட்ஸ்மேன்களும் நிரூபித்தனர்.
அதேநேரம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான லாகூர் பிட்சில்கூட நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
கேப்டன் சாண்ட்னர் பத்து ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது தவிர, பிலிப்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும், பிரேஸ்வெல் மற்றும் ரச்சின் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், துபை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானவையாக இருக்கின்றன. எனவே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம் இந்திய அணிக்குப் பெரிய எச்சரிக்கை மணியாக இருக்கிறது.
இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 3 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
குறைந்த ஓவர்களை கொண்ட போட்டிகள் மட்டுமல்லாது, 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெற்றது. பட்டத்தை வெல்லும் இந்தியாவின் நம்பிக்கையைச் சிதைத்து, நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்வது நியூசிலாந்துக்கு எந்த வகையிலும் குறைவான சவால் அல்ல. நான்கு சுழற்பந்து வீச்சாளர்களால் இந்திய அணி மிகவும் வலுவானதாகத் தெரிகிறது.
- அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் நான்கு போட்டிகளில் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மிஸ்டிரி ஸ்பின்னர் என அழைக்கப்படும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இரண்டே போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
- முகமது ஷமி 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஃபார்மில் இருக்கிறார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் பத்து வீரர்களில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நான்கு போட்டிகளில் 217 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன் எடுத்த வீரராக விராட் கோலி இருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டியில் எந்த அணி வென்றாலும், புள்ளி விவரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இரண்டு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












