இந்தியா - பாகிஸ்தான் 'ஆயுதமில்லா போரை' இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது எது? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
ஆரவாரமான கூட்டம், நீலம் மற்றும் பச்சை வண்ணம் பூசப்பட்ட முகங்கள், போர்க்களத்தில் இருப்பதைப் போல் அசையும் கொடிகள்.
"தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா vs பாகிஸ்தான் (The Greatest Rivalry: India v Pakistan)" எனும் புதிய நெட்ப்ளிக்ஸ் ஆவணப் படத்தின் முதல் காட்சி இப்படித்தான் தொடங்குகிறது.
மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளுள் ஒன்றைப் பற்றி விவரிக்கிறது இந்த ஆவணப்படம். "இது பேட்டுக்கும் பந்துக்கும் இடையிலான போட்டியை விடப் பெரியது" என்று இந்தியாவின் வீரேந்தர் சேவாக் முன்னுரை அளிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, சில கிரிக்கெட் போட்டிகளின் பரபரப்பான காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. பின்னர், வாகா எல்லையும் பிரிவினையால் அகதிகளாகிய மக்களும் காட்டப்படுகின்றனர். தேசம் இரண்டாகப் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் கிரிக்கெட்டின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
"இந்தப் போட்டியை நான் மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் போன்று வேறு போட்டியில்லை" என்று பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் கூறுகிறார்.
"இது ஆஷஸ் தொடரை விடப்பெரியது என்று நான் நினைக்கிறேன்" என்று ஒப்புக்கொள்கிறார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
"இந்தப் போட்டியை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது அரசியல் சூழல்தான்" என்கிறார் ரமீஸ் ராஜா.

'ஆயுதமில்லாத போர்'
போர்கள், எல்லை மோதல்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள் இருந்தபோதும், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரலாற்றுக் காரணங்கள் மற்றும் தேசப்பற்றால் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
அரசியல் காரணங்களால் இருநாட்டு தொடர்கள் நிறுத்தப்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தொடர்கள், இந்தப் போட்டியின் தீவிரத்தை உயிர்ப்புடன் வைத்து, ஒவ்வொரு போட்டியையும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாற்றுகின்றன.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் கடும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ஒரு கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் உள்ள தீவிர தேசியவாதத்தை விமர்சிக்க, 1945ஆம் ஆண்டு ஜார்ஜ் ஆர்வெல் பயன்படுத்திய 'ஆயுதமில்லாத போர்' போன்ற முழக்கங்களைப் போல் மிகைப்படுத்தப்பட்டு, இந்தப் போட்டி தேவையற்ற அளவில் பெரிதாக்கப்பட்டதா? என்பதுதான் அந்தக் கேள்வி.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்க அரசியல் நிலவரம் காரணமா?
கிரிக்கெட்டில் இது இன்னும் மிக முக்கியமான போட்டியாக உள்ளதா அல்லது வெறும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக உள்ளதா? கடந்த கால பாரம்பரியத்தை மட்டுமே சார்ந்து, நிகழ்காலத்தில் அதன் போட்டித்தன்மை குறைந்துவிட்டதா?
கடந்த 2018இல் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது, 2023இல் 228 ரன்களில் வீழ்த்தியது என இரு நாடுகள் இடையிலான கடைசி 8 ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஆறு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கடைசியாக வெற்றி பெற்றது 2017 சாம்பியன்ஸ் டிராபியில்தான். அதற்குப் பிறகு இரு நாடுகள் இடையிலான ஆட்டம் பெரும்பாலும் ஒருதலைபட்சமாகவே மாறி வருகிறது.
'இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்னும் போட்டி மனப்பான்மை நிலவுகிறதா?' என்று பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான டான் பாகிஸ்தானின் சமீபத்திய தோல்விக்குப் பிறகு கேள்வியெழுப்பியது.
"ஒரு காலத்தில் கிரிக்கெட் போர், இப்போது வெறும் அலுப்பூட்டும் நிகழ்வு" என்ற தலைப்பில் இந்தியா டுடே குறிப்பிட்டது. டான் நாளிதழின் ஜோஹைப் அகமது மஜீத்தின் கூற்றுப்படி, பாகிஸ்தான் குறைந்தபட்சம் வலுவாகப் போட்டியிட்டிருந்தால் இந்த இழப்பை ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்திருக்கும்.
இந்த இரு நாடுகளுக்கு இடையிலான சிக்கலான அரசியல் நிலவரமே இந்தப் போட்டியை இதுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கக் காரணமாக உள்ளது என்று மஜீத் கருதுகிறார்.
"ஒரு விதத்தில் இந்தப் போட்டியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக இந்த இரு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் கிரிக்கெட் வீரர்கள், குறிப்பாக எங்களது பாகிஸ்தான் அணியால், போட்டிகளைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் பரபரப்புகளுக்கு ஏற்ப விளையாட முடிவதில்லை" என்று பகிர்ந்துள்ளார்.
"வார்த்தைப் போரையும் உண்மையான போர்களையும் அகற்றினால், கடைசி நேரத்தில் குழப்பமான முறையில் ஒன்றிணைந்த அணிக்கு எதிரான, ஒரு தொழில்முறை கிரிக்கெட் அணிதான் உங்களிடம் எஞ்சியிருக்கும். கிரிக்கெட்டை மட்டும் கருத்தில் கொள்ளும்போது, இரு அணிகளுக்கும் இடையே உண்மையான போட்டி நிலவவில்லை."
பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா டுடே இதழும் அதே போல் கடுமையாக விமர்சித்துள்ளது.
"சமீப ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக தோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் பரிதாபகரமான நிலையை நோக்கி நகர்கிறது. இந்தப் போக்கை மாற்றாவிட்டால், இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தானின் கனவு விரைவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நகைச்சுவையாக மாறலாம்," என்று சண்டிபன் ஷர்மா எழுதியுள்ளார்.
உண்மையாகவே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கடைசி மூன்று ஒருநாள் உலகக்கோப்பைகளில் அவர்களால் அரையிறுதிக்குக்கூட முன்னேற முடியவில்லை. டி20 உலகக்கோப்பையின் தொடக்க நிலையிலேயே தோல்வியடைந்த அவர்கள், இப்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த 2009இல் இலங்கை அணிக்கு எதிரான பேருந்து தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், தனிமைப்படுத்தல், அரசியல் குழப்பம், நிலையற்ற நிர்வாகம், அடிக்கடி பயிற்சியாளர்களை மாற்றுதல், வீரர்களின் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் எனப் பல சிக்கல்களைச் சந்தித்து பாகிஸ்தான் அணி போராடிக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில், இந்தியா எல்லாவற்றையும் மீறி கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது, அதற்கு ஒரு வலுவான உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு மற்றும் உலகின் மிகப்பெரிய லீக் போட்டியாக விளங்கும் ஐபிஎல் உறுதுணையாக உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர் ஓஸ்மான் சமியுடின், அவரது நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் 'ஒதுக்கப்பட்டு வருகிறார்கள்' என்ற உணர்வைக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். அவர்கள் ஐபிஎல் மற்றும் அதன் அமைப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் (2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை).
"இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதைக் காணும்போது பாகிஸ்தான் வீரர்கள் ஒதுக்கப்பட்டதாக உணர்கிறார்கள்" என்று அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இவை அனைத்தும் அணியின் வேகமான வீழ்ச்சிக்குப் பங்களித்தன.
"பாகிஸ்தான் கிரிக்கெட் இதுவரை அடைந்ததிலேயே மிக மோசமான நிலை இதுதானா என்பதைப் பற்றி யோசிப்பது வீணான முயற்சி. ஏனென்றால், கடந்த காலங்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமாக விளையாடியபோது எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இது அவர்கள் மாறுபட்ட ஆட்டத் திறனை கொண்ட அணியாக இருப்பதை வெளிக்காட்டுகிறது," என்று சித்தார்த் மொங்கா ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிக்குப் பிறகு ESPNcricinfo-வில் குறிப்பிட்டுள்ளார்.
"இது படிப்படியாக, மெதுவாக நடந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியாகத் தோன்றுகிறது. வீரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடவில்லை, கேப்டனை நீக்க அணிக்குள் எந்த சூழ்ச்சியும் இல்லை, ரன்-அவுட்கள் அல்லது ஃபீல்டிங்கில் தவறுகள் இல்லை, வெற்றியடையும் தறுவாயில் இருந்துவிட்டு, திடீரென்று தோல்வியடைவதும் இல்லை."
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் கிடைக்கும் லாபம்

பட மூலாதாரம், AFP
'துப்பாக்கியில்லாத போர்' என்ற வாதம் ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
குறிப்பாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன், ஜாவேத் மியான்தாத் மற்றும் இன்ஸமாம்-உல்-ஹக் போன்ற பேட்ஸ்மேன்களின் ஆதரவுடன் இந்தியாவை அடிக்கடி தோற்கடித்த நேரங்களில் அதற்கு முக்கியத்துவம் இருந்தது.
"இது 2000களின் ஆரம்பம் வரை உண்மையாக இருந்திருக்கலாம். ஏனெனில் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் இப்படித்தான் உணர்ந்தார்கள். ஆனால், வெகுவிரைவில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அந்த உணர்வை மிகைப்படுத்தி, பணம் சம்பாதிக்கும் கருவியாக மாற்றிவிட்டன" என்று பாகிஸ்தானிய எழுத்தாளரும் கட்டுரையாளருமான நதீம் ஃபரூக் பராச்சா என்னிடம் கூறினார்.
"இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட்டின் தரம் ஒரே மாதிரியாக இல்லை. இந்திய கிரிக்கெட் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. உண்மையில், இந்தச் சூழல், பாகிஸ்தான் அணிக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் நினைக்கிறேன். அவர்கள் இதை மிகச் சிறியதாகக் காட்ட முயல்கிறார்கள், ஆனால் அதிலிருந்து வரும் பொருளாதார லாபத்தைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார் அவர்.
கிரிக்கெட் வாரியங்களும் ஒளிபரப்பாளர்களும் போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். மேலும் ஐசிசியும் போட்டியை மிகைப்படுத்துவதைக் குறைக்காது.

பட மூலாதாரம், AFP
அதிகமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இக்காலத்தில், குறைவான நட்சத்திரங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான அணிகளின் போட்டியும் உள்ளதால், இந்தப் போட்டி மிகவும் மதிப்புமிக்கதாக உள்ளது.
எனவே மாபெரும் பொருளாதார சக்தியாக உருவாகிவிட்ட இந்தப் போட்டி, துபை, லண்டன், ஆமதாபாத் போன்று எந்த நகரத்தில் நடைபெற்றாலும் அதிகப் பணம் செலவழிக்கும் ரசிகர்களை ஈர்க்கிறது.
"பாகிஸ்தானிடம் திறமை இருக்கிறது, ஆனால் இந்தப் போட்டியானது உளவியல் ரீதியாக இப்போது அதிகம் கவனிக்கப்படுகிறது" என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் கௌதம் பட்டாச்சார்யா.
போட்டியாளர்களுக்கு இடையிலான உண்மையான போட்டி கிரிக்கெட் மைதானத்திற்கு அப்பால் உள்ளதாகவும், "உண்மையைவிட கற்பனையில்தான் அதிகமாகப் போட்டி நிலவுகிறது" என்றும் நிறுவன ஆலோசகர் சந்தோஷ் தேசாய் கருதுகிறார்.
போட்டியைவிட பரபரப்பு அதிகமா?
"இரு அணிகளுக்கு இடையிலான சமச்சீரற்ற தன்மை பரபரப்பை மட்டுமே அதிகரிக்கிறது. இந்தியாவின் மேலாதிக்கம், போட்டியை எளிதில் சந்தைப்படுத்தக் கூடியதாக மாற்றுகிறது, அங்கு முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுமானால், இதன் வணிக மதிப்பு குறைந்துவிடும். இந்தப் போட்டியின் வர்த்தக சக்தி இந்தியாவின் மேலாதிக்கத்தில்தான் இருக்கிறது. இது உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிக்கான எரிபொருளாகச் செயல்படுகிறது. மேலும் போட்டிகளில் கணிக்க முடியாத தன்மையைவிட இந்தியாவின் மேன்மையை உறுதிப்படுத்த முற்படும் ஒரு கதையை இது உருவாக்குகிறது," என்று தேசாய் கூறினார்.
இந்திய அணியின் துணைத் தலைவர் சுப்மன் கில், மிகைப்படுத்தல் பற்றிய பேச்சை நிராகரித்து, இது ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டி என்று கூறினார்.
"இந்த இரண்டு அணிகளும் விளையாடும்போது அது பரபரப்பான போட்டியாக உள்ளது. அனைவரும் அதைப் பார்த்து ரசிக்கிறார்கள். பலர் போட்டியைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், அது மிகைப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்?" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
சுப்மன் கில் சொல்வது சரியாக இருக்கலாம்.
சில நிமிடங்களில் எல்லா டிக்கெட்டுகளும் விற்கப்பட்டதாக ஐசிசி குறிப்பிட்டது போல இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இப்போதும் அதிகமாக விற்பனையாகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியை இந்திய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் 60 கோடி பார்வையாளர்கள் கண்டுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஆனால் கிரிக்கெட் விமர்சகர் அயாஸ் மெமன் சொல்வது போல், தற்போது "போட்டியைவிட அதைச் சுற்றியுள்ள பரபரப்புதான் அதிகமாக உள்ளது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












