கோலியின் அபார ஆட்டம் பற்றி பாகிஸ்தான் வீரர்கள் கூறியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான், விராட் கோலி, பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளார்.

"எனக்கு என்ன நடக்கும் என்று நன்றாக தெரிந்துவிட்டது. உலகமே 6 பந்துவீச்சாளர்களுடன் விளையாடச் சென்றால் நீங்கள் மட்டும் ஒரே ஒரு ஆல்-ரவுண்டரோடு செல்கிறீர்கள். இது சிறப்பான மேலாண்மையாக தெரியவில்லை. இதுகுறித்து என்ன சொல்லப் போகிறீர்கள் வீரர்களே? அவர்களுக்கு ஒன்றும் தெரியாது...

விராட் கோலி, ரோஹித் ஷர்மா அல்லது சுப்மன் கில்லிடம் இருக்கும் திறமைகள் ஏதும் அவர்களிடம் இல்லை. நிர்வாகத்தின் விருப்பப் படியே வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது," என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நிதான ஆட்டம்
இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தான் கேப்டன் கருத்து

கோலி குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசுகையில் " கோலியின் கடின உழைப்பைப் பார்த்து வியப்படைகிறேன். என்ன மாதிரியாக உழைக்கிறார். கோலி ஃபார்மில் இல்லை என்று உலகமே சொல்கிறது, ஆனால், இங்கு வந்து மிகப்பெரிய போட்டியில் அவரின் ஆட்டத்தை காத்துக்கொண்டிருக்கையில், அசாத்தியமாக ரன்களையும், சதத்தையும் விளாசியுள்ளார்.

போட்டியையும் வென்று கொடுத்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். கோலியின் கடின உழைப்புக்கு எனது பாராட்டுகள், அவரின் உடற்தகுதிஅற்புதமானது. கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து வழிகளையும் கையாண்டோம், சிறப்பானவற்றையும் செய்தோம் ஆனால், முடியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவர் எவ்வளவு கடினமான உழைத்துள்ளார் என்பது களத்தில் தெரிந்தது. 36 வயதில் இந்த ஆட்டம் வியப்பானது"என குறிப்பிட்டார்.

ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியது என்ன?

போட்டிக்கு முன்னதாக ஜியோ ஹாட்ஸ்டாரில் நடந்த ஒரு நேர்காணலில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியைப் பற்றி குறிப்பிட்டார்.

கடைசி 3 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்டன. விராட் கோலி 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனால் இந்திய அணிக்கு வெற்றி சாத்தியமற்றதாகத் தோன்றியது.

19வது ஓவரின் 5வது பந்தில், விராட் கோலி ஹாரிஸ் ரவூப்பின் தலைக்கு மேலே நேராக ஒரு சிக்ஸரை அடித்து போட்டியின் முடிவையே மாற்றினார்.

இந்த சிக்ஸரை நினைவு கூர்ந்த ஷாஹீன், "எந்தவொரு பேட்ஸ்மேனும் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் தலைக்கு மேல் ஒரு சிக்ஸரை அடிப்பது மிகவும் கடினம்" என்றார்.

ஆனால் விராட் கோலி மிக எளிதாக அந்த சிக்ஸரை அடித்தது மட்டுமல்லாமல், 82 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

விராட் கோலி 2012-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் 107 ரன்கள் எடுத்தார். 2016 டி20 உலகக் கோப்பையில் அவர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான ​​தனது சாதனையை மேலும் வலுப்படுத்தி, ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்துள்ளார்.

IND vs PAK: இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்கு - 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

பட மூலாதாரம், Getty Images

சாம்பியன்ஸ் டிராபியில் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் கடைசி ஓவரில் இரண்டு பந்து மீதமிருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது.

இந்திய அணி 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.

சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிதானமாக ஆடிய விராட் கோலி, 111 பந்துகளில் சதம் அடித்து, இந்திய அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றார்.

சுப்மன் கில் அதிரடி

இந்திய அணியின் பேட்டிங் தொடங்கியவுடன், ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளை அதிரடியாக அடித்து ஆட்டத்தைத் தொடக்கி வைத்தார் ரோஹித் ஷர்மா. அவர் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அப்ரிடி பந்துவீச்சில் அவுட் ஆன பிறகு, அந்த அதிரடியை சுப்மன் கில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முன்னெடுத்துச் சென்றார்.

மறுபுறம், விராட் கோலி நிதானமான ஆட்டத்துடன், சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். மேலும்,13வது ஓவரில் ராஃப் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

இந்திய அளவில் இதற்கு முன்பு சச்சின் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 18,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு 242 ரன்கள் இலக்கு - அப்ரார் அகமது சுழலில் வீழ்ந்த சுப்மன் கிகில்

பட மூலாதாரம், Getty Images

சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி

கோலி, சுப்மன் கில் கூட்டணி சீராக ரன்களை குவித்துக் கொண்டிருந்தது. ஆனால், சுப்மன் கில் தனது அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அப்ரார் அகமது பந்துவீச்சில் அவுட் ஆனார். 17வது ஓவரை வீசிய அப்ரார் அகமது, சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

சுழன்று வந்த பந்து அவர் எதிர்பார்க்காத திசையில் சென்று ஸ்டம்பை தட்டியது. விக்கெட் விழுந்தும் சில விநாடிகளுக்கு, அங்கு நடந்ததை நம்ப முடியாமல் சுப்மன் கில் திகைத்து நிற்கும் அளவுக்கு அப்ரார் அகமதுவின் சுழற்பந்து அற்புதமாக இருந்தது.

அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் அய்யர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 27வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி. இது ஒருநாள் போட்டிகளில் அவரது 74வது அரைசதம்.

அதைத் தொடர்ந்து 38வது ஓவரின் நான்காவது பந்தில் குஷ்தில் ஷா வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் அடித்த ஷாட்டை இமாம் கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். ஸ்ரேயாஸ் அய்யர், 67 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

India vs Pakistan

பட மூலாதாரம், Getty Images

அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டுமென்ற இந்திய அணியின் வேகத்தை வெளிப்படுத்தினார். ஆனால், 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 8 ரன்களில் ரிஸ்வானுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

"இந்தப் போட்டி, இந்திய அணி முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக இருந்தது. இந்திய அணி சவால் செய்யப்பட்டதாகக்கூட உணரவில்லை" என்று பிபிசி ரேடியோ 5இல் பேசிய இங்கிலாந்தின் முன்னாள் பந்துவீச்சாளர் அலெக்ஸ் ஹார்ட்லி கூறியுள்ளார்.

ஃபார்மில் இல்லை என்று விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார் விராட் கோலி. ஆனால், இன்றைய ஆட்டத்தில் தனது 51வது சதத்தைப் பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

மந்தமாகத் தொடங்கிய பாகிஸ்தான் பேட்டர்கள்

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை, முகமது ஷமி வீசிய முதல் ஓவர் சற்று ஏமாற்றம்தான். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தான் தொடக்க ஜோடியால் எளிதில் எதிர்கொள்ள முடியவில்லை என்றாலும், அவரே உதிரி வகையில் ரன்களை கொடுத்துவிட்டார். 5 பந்துகளை வைடாக அவர் வீச, நான்காவது பந்தில் இமாம் எடுத்த ஒரு ரன்னுடன் சேர்த்து முதல் ஓவரில் பாகிஸ்தான் அணி 6 ரன்களை சேர்த்தது.

பாபர் ஆசம், இமாம் ஆகிய இருவரும் களத்தில் நிலைத்த பிறகே அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், பாகிஸ்தான் அணியின் முதல் 8 ஓவர்களில் 40 ரன்களையே எட்டிய நிலையில், மந்தமான ரன்ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தது.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 9வது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து, 26 பந்துகளில் 23 ரன்களை எடுத்து, தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்த ஓவரிலேயே இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட்டும் கிடைத்தது. களத்தில் செட்டிலாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தானின் மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக், அக்ஸர் படேலின் துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

குல்தீப் வீசிய பந்தை லாங்-ஆன் திசையில் அடித்துவிட்டு இமாம் உல் ஹக் எதிர்முனைக்கு வேகமாக விரைய, அதற்குள் அக்ஸர் படேல் பந்தை எடுத்து சற்றும் தாமதிக்காமல் துரிதமாகச் செயல்பட்டு எறிய அது ஸ்டம்பை பெயர்த்தது.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அணி 10 ஓவர்களை எட்டும் முன்பாக தொடக்க வீரர்கள் இருவரையும் இழந்து பரிதவித்தது. இந்த நிலையில், சவுத் ஷாகீலுடன் கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இருவருமே நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதில் கவனம் செலுத்தியதால் விரைவாக அவுட் ஆகவில்லை.

குறிப்பாக, பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் அதீத பொறுமை காத்தார். அதுவும், ஒருநாள் போட்டிகளில் அவர் முன்னெப்போதும் விளையாடியிராத வகையில், முதல் 50 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே சேர்த்தார் என்கிறது இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதள புள்ளிவிவரம்.

பத்தாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவருமே ஒருவழியாக களத்தில் நிலைத்து நின்றாலும் பெரிய அளவில் ரன்கள் வரவில்லை. அந்த அணி 30 ஓவர் முடிவில் 129 ரன்களை எடுத்திருந்தது. ஷகீல் 44 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

ரவீந்திர ஜடேஜா வீசிய 31வது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்த ஷகீல், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து தனது அரை சதத்தை எட்டினார். இதற்காக அவர் 63 பந்துகளைச் சந்தித்தார்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இமாம் உல் ஹக் 26 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி சற்று முன் வரை 33 ஓவர்களில் 150 ரன்களை எடுத்திருந்தது. ஷகீல் அரை சதம் அடித்து 56 ரன்களுடனும், ரிஸ்வான் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 34.5வது ஓவரில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில், அக்ஸர் படேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவரைத் தொடர்ந்து வந்த அப்ரிடி எல்.பி.டபுள்யூவில் டக்-அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சல்மான் அலி ஆகாவும் 24 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை எடுத்திருந்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பாகிஸ்தான் அணி, 47வது ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், 49வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் சிக்ஸ் அடித்து, அணியின் ஸ்கோரை 250க்கு மேல் உயரக்கூடும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார். ஆனால், 49வது ஓவரில் ஷமி பந்துவீச்சில் அக்ஸர் பட்டேல் அவரை ரன்-அவுட் செய்தார். இறுதி ஓவரின் நான்காவது பந்தை ராணா வீசியபோது, சிக்ஸ் அடிக்க குஷ்தில் ஷா முயன்றார். ஆனால், விராட் கோலி கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.

இறுதியாக, 50வது ஓவர் முடிவதற்கு இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் பேசியது என்ன?

இந்திய அணியைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய அதே அணியே, எந்த மாற்றமும் இன்றி இன்றைய ஆட்டத்திலும் விளையாடுகிறது.

2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இருந்து இதுவரையிலும் இந்திய அணி தொடர்ந்து 12 முறை டாஸில் தோற்றிருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் கூறுகிறது.

டாசுக்குப் பிறகு பேசிய ரோஹித், "டாஸ் ஒரு பொருட்டல்ல. நாங்கள் முதலில் பவுலிங் செய்வோம். முந்தைய போட்டியில் நாங்கள் ஆடிய அதே பிட்ச் அல்ல இது. ஆனால், அதைப் போலவே சற்று ஒத்துப் போகிறது. ஆடுகளம் சற்று மந்தமாக இருக்கலாம். ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சிறந்த வாய்ப்பு இது. நீங்கள் உங்கள் திறனை பரிசோதிக்க விரும்பினால், இதுபோன்ற அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

சாம்பியன்ஸ் டிராபி, இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளைப் பொருத்தவரை, ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் ஒரு விஷயம் மாறவில்லை என்றால் அது வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்கள் எந்த விலை கொடுத்தேனும் டிக்கெட் வாங்க போட்டியிடுவதுதான்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 37 லட்சம் இந்தியர்களும் 17 லட்சம் பாகிஸ்தானியர்களும் வசிக்கின்றனர். துபையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் தொடர்புகள் மூலம் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய முயற்சித்தனர். இரு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கான அதன் பாதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், போட்டியை நேரில் காணும் இந்திய ரசிகர்களைப் பொருத்தவரை, பணத்திற்கு மதிப்புள்ள போட்டியாக மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரு வித்தியாசமான சிலிர்ப்பையும் தரும்.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு பெரிய ஐசிசி கோப்பையை நடத்தும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக தோற்றுப் போனால் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். ஐசிசி தொடர் ஒன்றை நடத்தும் நாடாக, பாகிஸ்தானுக்கு இதை விட வேதனையான எதுவும் இருக்க முடியாது. இந்த பயம் பாகிஸ்தான் அணியை அற்புதமான ஒன்றைச் செய்ய கட்டாயப்படுத்தலாம்.

இந்தியா - பாகிஸ்தான், சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

பாக். கேப்டன் சாடிய முன்னாள் வீரர்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களும் வரலாறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரானதாகவே உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 9 போட்டிகளில் வென்றுள்ளது. அது ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, சாம்பியன்ஸ் டிராபியாக இருந்தாலும் சரி, டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நம்பிக்கை அளித்த போதிலும், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அடைந்த இந்த தோல்வி பாகிஸ்தானை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் ரிஸ்வானின் கருத்துகளை பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர். இதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே அணுகுவோம் என்று ரிஸ்வான் கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)