சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டி, அனல் பறக்கும் பந்துவீச்சு, இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஓவரின் ஒவ்வொரு பந்து, த்ரில்லான முடிவு என அனைத்துக்கும் தீனி கொடுக்கும் ஆட்டம் நாளை துபையில் நடக்கிறது.
துபையில் நாளை (23ம்தேதி) நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.
ஐ.சி.சி. நடத்தும் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்துகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

ஓர் ஆண்டுக்குப் பின்..
இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் கடைசியாக 2023-ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் அகமதாபாத் நகரில் நடந்த ஆட்டத்தில் மோதின. அதன்பின் மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுகின்றன.
சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டதால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபைக்கு மாற்றப்பட்டன. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டங்களும் துபையில் நடக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
துபையில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து உற்சாகத்துடன் இருக்கிறது. நாளை நடக்கும் 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.
மறுபுறம் பாகிஸ்தானைப் பொருத்தவரை, சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோற்றாலும் அந்தத் தொடர் முழுவதும் பாபர் ஆசம், பக்கர் ஜமான், சகா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றாலும், அந்த அணியில் இளம் வீரர்களின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் பாகிஸ்தானுக்கு முக்கியமான ஆட்டமாகும். இதில் தோல்வி அடைந்தால், தொடரை விட்டே வெளியேற நேரிடும் என்பதால் பாகிஸ்தான் அணி கவனமாக விளையாடும்.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஆனாலும், வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் தவறுகள், சரிசெய்ய வேண்டிய விஷயங்கள், சவால்கள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1. விராட் கோலி மோசமான ஃபார்ம்
கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் இருந்து எழுப்பப்படும் கேள்வி விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம். விராட் கோலி மிகப்பெரிய மேட்ச்வின்னர்தான். பல போட்டிகளை இவர் ஒற்றை ஆளாக வென்று கொடுத்துள்ளார் என்ற வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்று இவரின் ஃபார்ம் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இங்கிலாந்து தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் 38 பந்துகளில் 21 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
வேகப்பந்துவீச்சில் ஆப் திசையில் விலகிச் செல்லும் பந்துக்கு விராட் கோலி ஆட்டமிழப்பதும், சுழற்பந்துவீச்சில் லெக் ஸ்பின்னுக்கு ஆட்டமிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை.
2023 உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்தவர் என்ற பெயரை கோலி பெற்றிருந்த போதிலும் அதற்கான நம்பிக்கையை சமீபத்தில் எந்தத் தொடரிலும் அவர் வெளிப்படுத்தவில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் லெக் ஸ்பின்னர் ரிசாத் ஹூசைனின் பந்துவீச்சில் தொடக்கத்திலிருந்தே தடுமாறிய கோலி அவர் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார்.
2024-ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் கோலி விளையாடத் தொடங்கியதிலிருந்து லெக் ஸ்பின்னர்களின் 51 பந்துகளைச் சந்தித்து அதில் 31 ரன்கள் மட்டுமே கோலி அடித்துள்ளார். அதேசமயம், 5 முறை லெக்ஸ்பின்னர்களிடம் கோலி விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கவலைக்குரியதாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
2. கவலை தரும் சுழற்பந்துவீச்சு
துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது. எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்த முறை தேர்ந்தெடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக அச்சுறுத்தலை தரவில்லை.
அக்ஸர் படேல் 9-வது ஓவரை வீசிய போது ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்புக் கிடைக்க வேண்டியது கேப்டன் ரோஹித் சர்மாவால் தவறியது. அதன்பின் 27 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களே மாறிமாறி வீசியும் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.
ஜடேஜா 9 ஓவர்கள் வீசி சிக்கனமாக 37 ரன்கள் மட்டுமே கொடுத்தாலும் விக்கெட் இல்லை. குல்தீப் யாதவ் 10 ஓவர்களை முழுமையாக வீசி 43 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
சுழற்பந்துவீச்சில் இந்திய பந்துவீச்சாளர்களைவிட, வங்கதேச வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 என இருந்தது.
ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்னாமி வைத்திருந்தனர். ஆக இந்திய அணி 5 சுழற்பந்துவீச்சாளர்களை எந்த நம்பிக்கையில் எடுத்ததோ அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய கடமை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
3. ரோஹித் சர்மாவின் பெரிய இன்னிங்ஸ் எங்கே?
ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் ஆடி வந்தார். ஆனால், ஏதேனும் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது விக்கெட்டை இழப்பதும், நீண்டநேரம் களத்தில் நிலைத்திருக்காமல் ஆடுவது, பெரிய இன்னிங்ஸை வழங்காமல் இருப்பது அவரின் இயல்பான ஆட்டத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில்கூட ரோஹித் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 41 ரன்களுடன் பவர்ப்ளே முடியும் போது வெளியேறினார். ரோஹித் பெரிய ஷாட்டுக்கு முயன்ற போது கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 18 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். அதில் 6 முறை 40 முதல் 50 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து, அரைசதத்தை நிறைவு செய்யமுடியாமல் வீழ்ந்துள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்கூட ரோஹித் சர்மா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் விரைவாக ஆட்டமிழக்கும் போது, இயல்பாகவே நடுவரிசை பேட்டர்கள் தன்னம்பிக்கையை அது அசைத்துப் பார்த்துவிடும்.

பட மூலாதாரம், Getty Images
4. பேட்டிங்கில் மந்தம்
இந்திய அணி 8-வது வீரர் வரை வலிமையான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. இருப்பினும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 40 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டிய இலக்கை 46 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் இழுத்தடித்தனர். இதனால், இந்திய அணி வென்றாலும், நிகர ரன்ரேட்டில் பின்தங்கியது.
கேப்டன் ரோஹித் அதிரடியான தொடக்கத்தை அளித்துவிட்டு ஆட்டமிழந்தபின், அதைத் தொடர விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் தவறிவிட்டனர். முதல் பவர்ப்ளேயில் 75 ரன்கள் சேர்த்த இந்திய அணி அடுத்த 20 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இந்திய அணியின் மந்தமான பேட்டிங்தான் எளிமையாக சேஸ் செய்ய வேண்டிய ஸ்கோரை 46 ஓவர்கள் வரை ஆட்டம் நீடிக்க காரணமானது. ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வேகமாக ரன் சேர்ப்பதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
5. நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறல்
கேப்டன் ரோஹித் ஏற்கெனவே ஒரு பேட்டியில் கூறுகையில் " ஒருநாள் கிரிக்கெட்டில் நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்கள்தான் டெத் ஓவரை நிர்ணயிக்கும் ஓவர்கள், ஆட்டத்தையும் திருப்பும் ஓவர்கள், இதில் கவனம் செலுத்துவது அவசியம்" என்று தெரிவித்திருந்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜாகீர் அலி, தவ்ஹீத் இருவரையும் 154 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதித்ததால்தான் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.
நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டால், எதிரணி பேட்டர்கள் நங்கூரம் அமைத்து களத்தில் நிலைத்து நின்று ஆட்டத்தை தட்டிப் பறிக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் எந்த பந்துவீச்சாளருக்கு ஓவரை வழங்கலாம், எதிரணியின் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து வியூகம் அமைத்து பந்துவீசுவது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
6. பீல்டிங்கில் தேர்ச்சி அவசியம்
மோசமாக பீல்டிங் செய்வது யார் என்பதில் பாகிஸ்தானுடன் போட்டியிடும் அளவுக்கு இந்திய அணியின் பீல்டிங் மோசமாகியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் கைக்கு கிடைத்த கேட்சை தவறவிட்டார்.
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜாகீர் அலி தப்பித்தார். இந்திய அணியின் பீல்டிங் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாகவே இருந்தது.
கேப்டன் ரோஹித் 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளார். 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் பிடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
7. வலதுகை சுழற்பந்துவீச்சு தேவை
துபை ஆடுகளத்தை நம்பி இந்திய அணி முகமது ஷமி, ஹர்சித் ராணா ஆகிய இரு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு வங்கதேசத்தை எதிர்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் அணியிடம் வலுவான வேகப் பந்துவீச்சு இருக்கிறது.
துபை ஆடுகளத்தை பாகிஸ்தான் வீரர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக இந்திய அணி வேகப் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஹர்திக் பாண்டியா பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருந்தாலும், ராணாவுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது இருவரையும் சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.
சுழற்பந்துவீச்சில் சினாமேன் எனப்படும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை விளையாடி பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக பழகவில்லை என்பதால், வலது கை சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். பாகிஸ்தான் அணியில் இடதுகை பேட்டர்கள் 4 பேர் இருப்பதால் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்வது அவசியம்.
தற்போது அணியில் இருக்கும் அக்ஸர், குல்தீப், ஜடேஜா மூவருமே இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி, அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை சேர்த்து, குல்தீப் யாதவை பெஞ்சில் அமர வைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
8. பும்ரா இல்லாததால் பலவீனம்
பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில் மினி உலகக் கோப்பையை இந்தியா சந்திக்கிறது. தேவைப்படும் நேரத்தில் எதிரணி ரன் ரேட்டைக் குறைப்பது, விக்கெட் வீழ்த்துவது என பும்ரா சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
அவரின் இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் ஷமி இருக்கிறார் முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி தனது ஃபார்மை நிரூபித்தது நம்பிக்கையளித்தாலும், அடுத்த போட்டியில் கிடைக்கும வெற்றி அரையிறுதிக்கு கொண்டு செல்லும்.
அதற்கு ஷமி, அர்ஷ்தீப் சிங், ராணா ஆகிய மூவரின் வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருத்தல் அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை
எட்டு வருடங்களுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தானில்தான் இந்த தொடரின் பெரும்பகுதி நடந்து வருகின்றது, ஆனால் இந்திய அணி விளையாடும் லீக் போட்டிகளும், ஒரு அரையிறுதிப் போட்டியும், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றால் அந்த போட்டி மட்டும் துபையில் நடைபெறும்.
இந்த தொடரில் 8 அணிகள், 'A' மற்றும் 'B' என இரண்டு குழுக்களில் போட்டியிடுகின்றன.
குழு A: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குழு B: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபியில் இனிவரும் போட்டிகளுக்கான முழு அட்டவணை இங்கே. (அனைத்து போட்டிகளும் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்)
பிப்ரவரி 23 - பாகிஸ்தான் v இந்தியா, துபை
பிப்ரவரி 24 - வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி
பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி
பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர்
பிப்ரவரி 27 - பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி
பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர்
மார்ச் 1 - தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி
மார்ச் 2 - நியூசிலாந்து v இந்தியா, துபை
இந்த லீக் ஆட்டங்கள் முடிந்த பிறகு ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி
அரையிறுதிப் போட்டி 1 – மார்ச் 4, துபையில் நடைபெறும்
அரையிறுதிப் போட்டி 2 – மார்ச் 5, லாகூரில் நடைபெறும்
இறுதிப் போட்டி – மார்ச் 9, லாகூரில் நடைபெறும் (இந்திய அணி தகுதிபெற்றால், இது துபையில் நடைபெறும்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












