பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம்

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிதாலி ராஜ்
    • எழுதியவர், சாரதா உக்ரா
    • பதவி, விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்

இந்திய மகளிர் கிரிக்கெட்டைப் பின்தொடரும் இளம் வயதினருக்கு, மகளிர் பிரீமியர் லீக்கில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக மிதாலி ராஜ் குறித்து தெரிந்திருக்கலாம்.

கிரிக்கெட்டை இன்னும் நெருக்கமாகப் பின்தொடர்பவர்கள், ஒரு முன்னாள் வீராங்கனையாக, தொலைக்காட்சி நிபுணராக மற்றும் வர்ணனையாளராக மிதாலி ராஜை அறிந்திருக்கலாம். ஆனால், இந்திய மகளிர் கிரிக்கெட் விளையாட்டின் தலைமுறைகளை இணைக்கும் முக்கிய பாலமாக மிதாலி ராஜ் உள்ளார் என்பது தான் நிதர்சனம்.

ஒரு சவாலான காலகட்டத்தில், சிறந்த பேட்ஸ்வுமனான மிதாலி ஒரு சிறிய குழுவை வழிநடத்தினார். ஜுலன் கோஸ்வாமியை அவரது பந்துவீச்சாளராகக் கொண்டு, இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டை ஒரு இருண்ட காலத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

பெண்கள் அணியின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, அது இருண்ட காலகட்டமாக அறியப்படவில்லை. மாறாக, மகளிர் கிரிக்கெட் ஒரு காலத்தில் தனித்துவமான நிர்வாகத்தின் கீழ் குறைவான வசதிகளுடன், ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்ட நிலையில் இருந்து, ஆண்கள் நிர்வகிக்கும் அமைப்பின் கீழ் சென்றது.

அவர்களின் அலட்சியத்தால், மகளிர் கிரிக்கெட் விளையாட்டு ஓரங்கட்டப்பட்டது. அதனால் அது இருண்ட காலகட்டமாக அறியப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிப்ரவரி 14 ஆம் தேதி மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) மூன்றாவது சீசன் தொடங்கியுள்ளது.

மகளிர் கிரிக்கெட், பொதுமக்கள் உரையாடலிலும், தொலைக்காட்சியின் பிரதான நேரங்களில் ஒளிபரப்பப்படுவதிலும் பிரதான இடம் பெறும் நிலையில், ஒரு காலத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கு மிகக் குறைந்த கவனமே இருந்தது என்பதை இன்று கற்பனை செய்வதே கடினமாக உள்ளது.

ஆனால், மிதாலி ராஜின் இருபது ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வின் மையப்பகுதியில், அது தான் வழக்கமான நிலையாக இருந்தது.

அந்த காலகட்டத்தில், மிதாலியின் கிரிக்கெட் மட்டையால் கிடைத்த உறுதி, அணிக்கு மட்டுமல்ல, இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும் முக்கியமானதாக இருந்தது.

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையின் முகமாக உள்ளார் மிதாலி

'நான் லேடி சச்சின் அல்ல'

மகளிர் கிரிக்கெட்டை பொதுத்தளத்துக்குக் கொண்டுசெல்வதில் மிதாலி செய்த பங்களிப்பின் அடிப்படை, அநேகமாக அவர் விளையாட்டுக்கு அறிமுகமான விதத்திலிருந்து அமைந்திருக்கலாம்.

1990களின் ஆரம்பத்தில், ஓய்வுபெற்ற விமானப்படை சார்ஜென்ட்டான அவரது தந்தை, எட்டு வயதான மிதாலி நீண்ட நேரம் உறங்கும் சோம்பேறித்தனத்தை விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதனால் தென்னிந்திய நகரமான செகந்திராபாத்தில் உள்ள தனது சகோதரரின் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு மிதாலி அழைத்துச் செல்லப்பட்டார்.

அகாடமியில், மிதாலி ஒரு சில பந்துகளை அடிக்க சாதாரணமாக மட்டையை எடுப்பார். மிதாலியின் திறமையைக் கண்டறிய பயிற்சியாளர் ஜோதி பிரசாத்துக்கு அதுவே போதுமானதாக இருந்தது.

மிதாலியின் கூறுவதுபோல, "ஒரு பந்தயக் குதிரையைப் போல" அவரது கடுமையான பயிற்சி தொடர்ந்தது.

ஆறு மணி நேர பயிற்சி அமர்வுகள், மட்டையைப் பயன்படுத்தாமல் ஒரு ஸ்டம்ப் மூலம் பந்தில் பயிற்சி செய்வது, கோன்களுக்கு இடையே (முக்கோணமான அல்லது வட்டமான அடையாளக் கொடிகள் தரையில் வைக்கப்பட்டும்) இடைவெளிகளை கண்டுபிடித்து ஆடுதல், கடினமான கிரிக்கெட் பந்துக்கு பழகுவதற்காக கற்களைப் பிடித்து (catching) பயிற்சி செய்வது போன்றவை அவரது பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்தன.

பத்து வயதில், கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபடுவதற்காக பரதநாட்டிய நடனத்தை கைவிடும் கடினமான முடிவை மிதாலி எடுக்க வேண்டியிருந்தது.

"நடனம் எனது தனிப்பட்ட ஆர்வம். ஆனால் நான் கிரிக்கெட்டில் அடைந்துள்ள நிலையினால், என்னுடைய முன்னுரிமைகளை புரிந்துகொள்ள வேண்டும்." என்று 2016ல் 'தி கிரிக்கெட் மந்த்லி' (The Cricket Monthly) இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் மிதாலி.

அவரது கடுமையான உழைப்பும், தியாகமும் வீணாகவில்லை.

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட் விளையாட்டின் தலைமுறைகளை இணைக்கும் முக்கியப் பாலமாக மிதாலி ராஜ் உள்ளார்

1999ஆம் ஆண்டு, 16 வயதில் இந்திய சீனியர் மகளிர் அணிக்காக தனது முதல் போட்டியில் அறிமுகமானார் மிதாலி ராஜ். அதன் பிறகு, புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் வாழ்க்கை ஆரம்பமானது.

மேலும், மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையின் முகமாக உள்ளார் மிதாலி.

23 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், 50க்கு மேற்பட்ட சராசரியுடன், மிதாலி ஒருநாள் போட்டிகளில் 7805 ரன்கள் அடித்துள்ளார். 7 சதங்களும், 64 அரை சதங்களும் விளாசியிருக்கிறார். மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரை சதங்கள் விளாசிய வீராங்கனையாகவும் மிதாலி சாதனை படைத்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மிதாலி ராஜ், 214 ரன்கள் விளாசிய இன்னிங்ஸ், ஒரு இந்திய வீராங்கனையின் ஒரே டெஸ்ட் இரட்டைச் சதமாக நீண்ட காலம் இருந்தது.

2024 ஆம் ஆண்டு ஷஃபாலி வர்மா இரண்டாவது இரட்டைச் சதம் அடிக்கும் வரை, அந்த சாதனை மிதாலிக்கு உரியதாகவே இருந்தது.

தொடர்ச்சியாக ரன்கள் குவித்ததற்காக, புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரோடு ஒப்பிட்டு, மிதாலி ராஜுக்கு "பெண் டெண்டுல்கர்" மற்றும் "லேடி சச்சின்" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், மிதாலி அவற்றைப் புறக்கணித்தார்.

"நான் மகளிர் கிரிக்கெட்டின் மிதாலி ராஜ் என்றே அறியப்பட விரும்புகிறேன்… நான் விளையாட்டில் என் சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும்," என்று 2018ல் அவர் கூறியிருந்தார்.

அவர் மகளிர் கிரிக்கெட்டுக்காக உருவாக்கிய அந்த அடையாளம், இப்போது அசைக்க முடியாததாக உள்ளது.

கடினமான காலங்களில் உறுதியாக இருந்தவர்

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மகளிர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தின் கீழ், மிதாலி ஆண்டுக்கு சராசரியாக 14 ஒருநாள் போட்டிகளும், 1 டெஸ்ட் போட்டியும் விளையாடியுள்ளார்

அவரது அபார சாதனைகளைப் போலவே, மிதாலியின் கிரிக்கெட் வாழ்க்கை, அவரது பொறுமைக்கும் உதாரணமாக உள்ளது.

குறிப்பாக, அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் நடுப்பகுதியில், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நிர்வாக அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, அணிக்கு வாய்ப்புகள் குறைந்த காலத்தில், அவர் நிலைத்திருந்த விதமே இதற்கு சிறந்த சான்றாகும்.

மிதாலி 1999ல் அறிமுகமானபோது, இந்தியாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் என்ற அமைப்பின் கீழ் மகளிர் கிரிக்கெட் நிர்வகிக்கப்பட்டது.

அதிலிருந்து 2006 இறுதி வரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் கிரிக்கெட்டுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும் வரையிலான காலத்தில், மிதாலி 86 ஒருநாள் போட்டிகளும், 8 டெஸ்ட் போட்டிகளும் ஆடினார்.

அதாவது, இந்திய மகளிர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தின்கீழ், மிதாலி ஆண்டுக்கு சராசரியாக 14 ஒருநாள் போட்டிகளும், 1 டெஸ்ட் போட்டியும் விளையாடியுள்ளார்.

இதற்கு மாறாக, 2007 முதல் 2015 ஜூன் வரை, மிதாலி மொத்தம் 67 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 8 போட்டிகள். மொத்தமாக 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடினார்.

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிதாலி ராஜுடைய பாரம்பரியத்தின் தாக்கம், இன்றைய இளம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் காணப்படுகிறது

இந்த ஒப்பீட்டுக்கான சரியான எல்லையாக 2015ம் ஆண்டை குறிப்பிடலாம். காரணம், அதே ஆண்டு மே மாதத்தில், மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு முதல்முறையாக வாரியத்திலிருந்து ஒப்பந்தங்களை (central contracts) வழங்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

மேலும், மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையை நாடு முழுவதும் அதிகரிக்க திட்டங்கள் உள்ளதாகவும் அறிவித்தது.

நிர்வாக மாற்றத்துக்கும் (2006) பிசிசிஐ அறிவிப்புக்கும் (2015) இடையிலான அந்த எட்டு ஆண்டுகளில், ஒரு தலைமுறை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை இந்திய மகளிர் கிரிக்கெட் முழுமையாக இழந்தது.

அந்த காலகட்டத்தில் நிலையாக இருந்த ஒரே விஷயம், மிதாலியின் பேட்டிங்கும், ஜுலன் கோஸ்வாமியின் பந்துவீச்சும் தான்.

"அந்தப் பாதை கடினமானது," என்று அந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார் மிதாலி.

"அது அதிகமாக மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை, இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற கண்ணோட்டத்தோடு சம்பந்தப்பட்டது.

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும், மகளிர் கிரிக்கெட் அணி என ஒன்று இருக்கிறதா என்ற அறியாமையிலிருந்து வந்தவை தான்" என்கிறார் மிதாலி.

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட், இந்தியா, பிசிசிஐ, விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கும் அப்போதைய (2015) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

'எல்லோரும் மிதாலியைப் போல இருக்க விரும்பினார்கள்'

ஆனால் மிதாலி ராஜ் காட்டிய அர்ப்பணிப்பும் பொறுமையும் பலனளித்தது.

அவரது தலைமையில், இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை (2017) மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை (2020) இறுதிப் போட்டி வரை சென்றதும், அதன் பின் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி வேகமடைந்ததும், இதற்குச் சான்றாகும்.

மிதாலி ராஜுடைய பாரம்பரியத்தின் தாக்கம், இன்றைய இளம் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் காணப்படுகிறது.

மிதாலி ராஜ் 2005 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 91 ரன்கள் அடித்ததை பார்த்த பிறகு, தன் மாநில அணிக்கான தேர்வு முகாமில் சேர்வதற்கு தனது பெற்றோர்களை சம்மதிக்க வைத்தார் பேட்ஸ்வுமன் வேதா கிருஷ்ணமூர்த்தி.

தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, "எல்லோரும் மிதாலியைப் போல இருக்க விரும்பினார்கள்" என்று ஸ்மிருதி மந்தனா தெரிவிக்கிறார் .

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தன்னுடைய தாக்கத்தைப் பற்றி சிந்திக்கும்போது, மிதாலி நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறார். ஆனால், இன்னும் சாதிக்க வேண்டியவை அதிகமாக உள்ளன என்று உடனே கூறுகிறார்.

"இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அடையும் மாற்றத்தில் இன்னும் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று 2016இல் கூறிய மிதாலி,

"ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மக்கள் சமமாக அங்கீகரிக்கும் நாளை என் வாழ்நாளில் காணமுடியும் என நான் நம்புகிறேன்" என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)