பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வென்ற அவ்னி லேகரா வாழ்க்கையின் திருப்புமுனை என்ன?

- எழுதியவர், தீப்தி பட்வர்தன்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்
பாரா துப்பாக்கிச் சுடுதலில் படைத்த வரலாற்று சாதனைக்காக அவ்னி லேகராவிற்கு இந்த ஆண்டுக்கான பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேய சர்மா ஆகியோரிடம் இருந்து மெய்நிகர் வழியாக அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
விருது பெற்ற பிறகு காணொளி வாயிலாக பேசிய அவர், "டோக்கியோவில் நான் பதக்கம் வென்ற போது, அடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டனர். அப்போது, 2024-ஆம் ஆண்டும் என் கையில் ஓரிரு பதக்கங்களும் சட்டம் பயின்றதற்கான பட்டமும் இருக்கும் என்று நான் கூறினேன். கடந்த ஆண்டில் அந்த இரண்டையும் சாதித்துவிட்டதால் நான் சட்டப் படிப்பை மேலும் தொடரவும், அதில் முதுநிலைப் பட்டம் பெறவும் போகிறேன் என்று நினைக்கிறேன்," என்றார்.
அவ்னி லேகராவுக்கு விருதை வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், வழக்கறிஞராகவும், வருங்காலத்தில் நீதிபதியாகவும் வெற்றி பெற அவ்னியை வாழ்த்துவதாக தெரிவித்தார்.
அவ்னியின் விளையாட்டு வாழ்க்கை எப்படி இருந்தது? அவருக்கு உத்வேகம் அளித்தது எது?

அவ்னி லேகரா ஒரு விளையாட்டு வீராங்கனையாக மாற முடிவு செய்த போது அவருக்கு 13 வயதே ஆகியிருந்தது.
அப்போது, ஒலிம்பிக்கின் தனிநபர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரரான அபினவ் பிந்த்ராவின் சுயசரிதையிலிருந்து அவ்னி உத்வேகம் பெற்றார்.
ஆனால் வரும் தலைமுறையினருக்கு தானே ஒரு முன்னுதாரணமாக இருக்கப் போகிறோம் என்று அவ்னி லேகராவுக்கு அப்போது தெரியாது.
கொரோனா பேரிடரால் ஒத்தி வைக்கப்பட்ட 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச் 1 போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தற்போது 23 வயதாகும் அவ்னி லேகரா பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார்.
இறுதிப்போட்டியில் அவர் 249.6 புள்ளிகள் பெற்றார். இதன் மூலம் அவர் உலக சாதனையை சமன் செய்து, பாராலிம்பிக் போட்டிகளில் புதிய வரலாறு படைத்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 இல் பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில், லேகரா தங்கப் பதக்கத்தை மீண்டும் வசப்படுத்தி, தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்று புதிய வரலாற்றைப் படைத்தார்.
இதன் மூலம், டோக்கியோவில் தனது சொந்த பாராலிம்பிக் சாதனையையும் இந்த போட்டியில் அவர் முறியடித்தார்.
செப்டம்பர் 2024 இல் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு தனது உடல்நிலை சீராக இல்லை என்று அவ்னி குறிப்பிட்டார்.
"எனக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், ஓய்வில் இருந்தேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நிறைய மன வலிமை தேவைப்பட்டது. உடல் வலிமையை மீண்டும் பெற நிறைய பயிற்சியும் தேவைப்பட்டது. கடந்த பாராலிம்பிக்கை விட இந்த பாராலிம்பிக் மிகவும் கடினமாக இருந்தது" என்றார் அவ்னி.
உடல் ரீதியான சவால்களை சமாளிப்பது லேகராவின் விளையாட்டு வாழ்க்கையில் எப்போதும் ஒரு அங்கமாக இருந்தது.

முரண்பாடுகளுக்கு எதிரான வெற்றி
2012 ஆம் ஆண்டில், லேகராவின் குடும்பம் ஒரு கார் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவ்னியின் இடுப்புக்கு கீழே உள்ள உடல் பகுதிகள் செயலிழந்தன.
அடுத்த 6 மாதங்கள் படுக்கையில் அவர் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து இன்னும் கடினமான சவால்களை அவர் சந்தித்தார்.
அவ்னி எல்லாவற்றையும் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது எப்படி உட்கார வேண்டும் என்பது போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட அவர் முதலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
மற்றவர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால் உணர்வு ரீதியாக மீண்டு வருவதும் அவருக்கு சவாலாக இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று குடும்பத்தினர் உணர்ந்த போது, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க கூடிய ஒரு பள்ளியைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் சிரமப்பட்டனர்.
2015-ஆம் ஆண்டில், அவ்னியின் தந்தை அவரை வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வாழ்க்கையை வாழ, அவ்னியை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவித்தார்.
நீச்சல், வில்வித்தை மற்றும் தடகளம் போன்ற விளையாட்டுகளை விளையாட முயற்சி செய்த அவ்னி, துப்பாக்கி சுடுவதில் தனக்கு இருந்த உண்மையான ஆர்வத்தை கண்டுபிடித்தார் .
"ஒரு கோடை விடுமுறையில், எனது தந்தை என்னை துப்பாக்கி சுடும் களத்திற்கு அழைத்துச் சென்றார்" என்று டோக்கியோவில் தங்கம் வென்ற பிறகு அவர் நினைவுகூர்ந்தார் .
"நான் இந்த விளையாட்டுடன் உடனடியாக ஒரு தொடர்பை உணர்ந்தேன். நான் சில ஷாட்களை முயற்சித்தேன், அவை நன்றாக அமைந்தன. (இந்த விளையாட்டிற்குத் தேவையான) கவனம் மற்றும் நிலைத்தன்மை தான் துப்பாக்கிச் சுடுதலில் எனக்கு பிடித்தது" என்கிறார் அவ்னி.
துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில், அவ்னி பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். மாற்றுத்திறன் கொண்டவரான அவ்னி லேகரா, குறைபாடு ஏதும் இல்லாத சாதாரண குழந்தைகளுடன் போட்டியிட்டார்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தியதால் அவர் தனி கவனத்தைப் பெற்றார். இதனால் அவர் சற்று சங்கடமாக உணர்ந்தாலும், தர வரிசை பட்டியலில் அவர் விரைவாக உயர்ந்தார்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் பாரா விளையாட்டு உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தனது முதல் சர்வதேச பதக்கத்தை வென்றார்.
அப்போது பாராலிம்பிக் சாம்பியனாக இருந்த ஸ்லோவாகியாவின் வெரோனிகா வடோவிகோவா அந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்த வெற்றிக்கு பிறகு, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வெல்வதை தனது நோக்கமாக கொண்டிருப்பதாக நவம்பர் 2022 இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவ்னி லேகரா குறிப்பிட்டார்.
"அன்று, என்னால் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்று உணர்ந்தேன்... என்னால் இங்கு வந்து, எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, சக்கர நாற்காலியில் உலகம் முழுவதும் பயணம் செய்து, வெள்ளிப் பதக்கத்தை வெல்ல முடிந்தால், பாராலிம்பிக்கிலும் என்னால் பதக்கம் வெல்ல முடியும். அப்போதிருந்து, நான் மிகவும் உத்வேகமாக உணர்ந்தேன்", என்று அவ்னி கூறினார்.

பட மூலாதாரம், REUTERS/ISSEI KATO
பாராலிம்பிக் மேடைக்கான பாதை
பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்த ஒரு வருடத்துக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் பங்கேற்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையான ஷுமா ஷிரூர் மேற்பார்வையில் அவ்னி பயிற்சி பெறத் தொடங்கினார்.
இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அவ்னிக்கு துப்பாக்கி சுடுதலின் அடிப்படைகளில் இருந்து மீண்டும் கற்பித்து, அவரது போட்டியாளர்களுக்கு இணையான ஒரு துப்பாக்கியை அவருக்கு ஷிரூர் வாங்கிக் கொடுத்தார்.
தனது திறமைகளில் சந்தேகம் கொள்ளும் மனப்பான்மையுடன் இருந்த அவ்னி லேகரா, அதனை களைந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளச் செய்வதில் ஷிரூர் கவனம் செலுத்தினார்.
சக்கர நாற்காலியில் ஏற்ற வசதிகள் இல்லாததால், அவ்னி போன்ற பாரா தடகள வீரர்கள் பொது இடங்களில் சுதந்திரமாகச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களை பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஷிரூர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, தங்கப்பதக்கம் வெல்ல வேண்டுமென்ற தனது தேடலில், அவ்னி மற்ற பின்னடைவுகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
2018 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிவிட்ட அவ்னி, கோவிட் -19 ஊரடங்குக் காலத்தின் போது வீட்டிற்குள் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பு, முதுகில் ஏற்பட்ட காயத்துக்காக பிசியோதெரபி மேற்கொண்டதால் அவர் இரண்டு மாதங்கள் பயிற்சியில் இருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாகவும் அவருக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆனால் இவை எதுவும் அவ்னி பாராலிம்பிக்கில் மிகவும் வெற்றிகரமான இந்தியப் பெண்ணாக மாறுவதற்குத் தடையாக இருந்ததில்லை.
அவரது எக்ஸ் சமூக ஊடக கணக்கின் அட்டைப்படத்தில் உள்ள மேற்கோள், அவ்னியின் அசைக்க முடியாத உறுதியை பொருத்தமாக விளக்குகிறது.
"வாழ்க்கையில் உங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமல்ல, ஆனால் அதை நீங்கள் எவ்வளவு நன்றாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் முக்கியம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












