மனு பாக்கர் ஒலிம்பிக்கில் சாதிக்க உத்வேகம் தந்த 'டாட்டூ' வாசகம் - என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌரப் துக்கல்
- பதவி, விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி பஞ்சாபிக்காக
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஒரு கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்தார். அப்போது அவரது துப்பாக்கி பழுதடையவும் செய்தது. அவர், தனது கழுத்தின் பின்புறம், ‘நான் எழுகிறேன்’ (ஸ்டில் ஐ ரைஸ் - Still I Rise) என்ற வாசகத்தைப் பச்சைக் குத்தியிருக்கிறார். என்ன சூழ்நிலை வந்தாலும் இது தன்னை உற்சாகப்படுத்தும் என்கிறார் அவர்.
இன்று, (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 28) அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றார்.
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் மனு படைத்திருக்கிறார். அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்றார். இதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘நான் எழுவேன்’
‘பலமுறை உலகக் கோப்பைப் பதக்கங்களை வென்றும், டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி செயலிழந்து வெளியேறியவர்’ என்று தன்னைப் பற்றி எழுதலாம் என்றார் மனு பாக்கர். தன்னைத் தானே ஊக்கப்படுத்துவதற்காக கழுத்தின் பின்புறத்தில் 'ஸ்டில் ஐ ரைஸ்' என்ற வாசகத்தைப் பச்சை குத்தியிருக்கிறார்.
‘வரலாற்றில் என்னைப் பற்றி நீங்கள்
உங்கள் கசந்த, திரிக்கப்பட்ட பொய்களை எழுதலாம்
என்னை மண்ணில் போட்டு மிதிக்கலாம்
ஆனால் புழுதியைப் போல நான் எழுவேன்’
அமெரிக்க கவிஞரும், சமூக உரிமைப் போராளியுமான மாயா ஏஞ்சலோவின் இந்த வரிகள் உலகெங்கிலும் பலகோடி மக்களுக்கு, கஷ்டமான சூழ்நிலைகளைக் கடந்து முன்னேற் உத்வேகமளித்து வருகின்றன. இதுதான், மனு பாக்கரையும், அவரது டோக்கியோ ஒலிம்பிக் தோல்வியிலிருந்து மேலெழுந்து, தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வைத்திருக்கிறது.
"வெற்றியும் தோல்வியும் ஒரு விளையாட்டு வீரரது வாழ்க்கையின் பகுதிகளாகும். ஆனால், வீழ்ச்சியைச் சமாளித்து, மீண்டு வருவதற்கு உங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்,” என மனு பாக்கர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘வெறும் வார்த்தைகள் அல்ல’
நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் மனு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவு மற்றும் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜோடிப் பிரிவிலும் பங்கேற்கிறார்.
" ஸ்டில் ஐ ரைஸ் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல. நீங்கள் வீழ்ந்து கிடக்கும் போதும் நீங்கள் யாரென்று உங்கள் தகுதியை நிரூபிக்கும் ஒரு நிகழ்வு. இந்த வார்த்தைகள் எனக்கு உந்துதலாக இருக்கின்றன, தோல்விகள் வந்தாலும், நான் எழுவேன் என்ற உறுதியை எனக்கு தருகின்றன," என்று கடந்த ஆண்டு ஆர்யன் மன் அறக்கட்டளை விழாவிற்காக சண்டிகர் சென்றபோது மனு கூறினார்.
தனது 16 வயதில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய விளையாட்டு வீரர்களில் ஒருவரானார் மனு பாக்கர். 2018-ஆம் ஆண்டு கோல்ட்கோஸ்ட் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார். இதனால் ‘டீனேஜ் ஷூட்டிங் சென்சேஷன்' என்று குறிப்பிடப்பட்டார், ஹரியானாவைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை.

பட மூலாதாரம், Getty Images
டோக்கியோ ஒலிம்பிக் தோல்வி
2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன், உலகக் கோப்பைகளில் ஒன்பது தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார் மனு. (டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கோவிட் காரணமாக 2021-இல் நடைபெற்றன). உலகக் கோப்பைகளில் அவரது ‘ஃபார்மைக்’ கருத்தில் கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அவர் பதக்கம் வென்று தருவார் என்று அவர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பிடித்த 10மீ ஏர் பிஸ்டல் தனிநபர் போட்டியிலும், கலப்பு மற்றும் குழு போட்டியிலும் அவரால் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட முடியவில்லை. 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இறுதிப் போட்டிக்குச் செல்லத் தவறிவிட்டார்.
ஒலிம்பிக்கிற்குப் பிறகு, டோக்கியோவில் அவரது மோசமான செயல்பாட்டிற்காக நிறைய விமர்சனங்களை எதிர்கொண்ட மனு, ஒரு கடினமான காலகட்டத்தை அனுபவித்தார். பின்னர் அவர் தனது விருப்பமான 10மீ ஏர் பிஸ்டல் போட்டிக்கான தேசிய அணியில் தனது இடத்தையும் இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, அவர் தனது கடந்தகால ஃபார்மைத் திரும்பப் பெறுவதற்காகப் போராடினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பையில் வெண்கலம் (25 மீ பிஸ்டல்) வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் (2022, 2023) அணி பிரிவில் இரண்டு பதக்கங்களைப் பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு, அவர் 11 உலகக் கோப்பைப் பதக்கங்களைப் பெற்றிருந்தார்.
"நீங்கள் சோர்வாக இருக்கும் போது, ஒருபோதும் முயற்சியைக் கைவிடாமலும், வெற்றியை அடைய உங்கள் கடின உழைப்பில் நிலையாக இருப்பதும் தான் ஒரே முக்கியமான விஷயம்," என்று மனு தனது விளையாட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
'அது கடந்த காலம்'
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ள அவர், அடுத்து 25மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் போட்டி மற்றும் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் பங்கேற்கிறார்.
“டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்ததைக் கடந்து வர எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் மீண்டு வருவேன், எழுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ‘ஸ்டில் ஐ ரைஸ்’ என்ற வார்த்தைகளையும், அவற்றின் சாராம்சத்தையும் எனது விளையாட்டு வாழ்க்கையுடன் தொடர்புபடுத்த முடியும். 'ஸ்டில் ஐ ரைஸ்' எனக்கு மிகப்பெரிய உத்வேகம், அதனால் அதனைப் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்தேன்,” என்கிறார் மனு.
"சில காலமாகவே இந்த வார்த்தைகளைப் பச்சை குத்திக்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது நிரந்தரமானது என்பதால், அதை உடலில் எங்கு பச்சை குத்திக்கொள்வது என்பதில் நான் இரு மடங்கு உறுதியாக இருக்க நினைத்தேன்," என்று பாக்கர் கூறினார்.
“உடலில் வெளியே தெரியும் பகுதியில் நான் அதை பச்சை குத்த விரும்பவில்லை, ஏனென்றால் அதை அடிக்கடிப் பார்த்துப் பார்த்து அது பழக்கமான ஒன்றாக மாறுவதில் எனக்கு விருப்பமில்லை. காலப்போக்கில், அதைப் பார்த்துக்கொண்டே இருந்தால், நான் அதற்குப் பழகிவிடக் கூடும், அதிலிருந்து விலகிவிடக் கூடும். எனவே அதை என் கழுத்தின் பின்புறத்தில் பச்சை குத்திக்கொள்ள நினைத்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் அதைச் செய்துகொண்டேன். நான் என்ன சொல்வது, டோக்கியோவில் நடந்தது கடந்த காலம். இன்னும் நான் எழுகிறேன்,” என்றார் மனு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












