மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து, நடிகைகளுக்கு மிரட்டல் - வங்கதேசத்தில் மதவாதம் தலைதூக்குகிறதா?

வங்கதேசம், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், பெண்கள் கால்பந்து, மதம்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, விளையாடாமல் திரும்பி வந்தது ஏமாற்றமளிக்கிறது என்கிறார் ஆஷா ராய்
    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி நியூஸ்

17 வயதான ஆஷா ராய், பெண்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் வங்கதேசத்தின் வடக்கு பகுதியில் நடக்கவிருந்த இந்த போட்டியை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கட்டாயப்படுத்தியதால், ஆஷாவின் கனவுகள் நொறுங்கி விட்டன.

இந்த மாத தொடக்கத்தில் (போட்டி தொடங்குதற்கு முன்பாக), 'இஸ்லாமி அந்தோலன் பங்களாதேஷ்' குழு ரங்க்பூர் பகுதியில் பெண்கள் கால்பந்து போட்டியை நடத்துவதற்கு எதிராக ஒரு பேரணியை அறிவித்தது. இந்தப் போட்டிகள் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவை என்றும் அது கூறியது.

பிரச்னை ஏற்படும் என்று அஞ்சி, உள்ளூர் காவல்துறை தலையிட்டது. கால்பந்து வீராங்கனைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் வீட்டிற்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

"நான் விரக்தியடைந்தேன், பயந்தேன். இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலையை நாங்கள் சந்தித்ததில்லை. விளையாடாமல் திரும்பி வந்தது ஏமாற்றமளிக்கிறது," என்று ஆஷா ராய் பிபிசியிடம் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டே வாரங்களில் 3 மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து

முஸ்லிம் பெரும்பான்மை நாடான வங்கதேசம், கடந்த ஆண்டு பரவலான போராட்டங்களின் காரணமாக நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஒரு அரசியல் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

ஷேக் ஹசீனாவின் அரசு அகற்றப்பட்டு, வங்கதேசத்தில் தற்போது ஒரு இடைக்கால நிர்வாகம் பொறுப்பில் உள்ளது. ஆனால் முன்னர் பலவீனமாக இருந்த இஸ்லாமியக் குழுக்கள் மீண்டும் தைரியம் பெற்றுவிட்டன என்ற கவலைகள் உள்ளன.

இஸ்லாமிய கடும்போக்குவாதிகளின் ஆட்சேபனை காரணமாக, வடக்கு வங்கதேசத்தில் இரண்டு வாரங்களில் மூன்று மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கதேசத்தின் ரங்பூருக்கு மேற்கே சுமார் 70 கிமீ (43 மைல்) தொலைவில் உள்ள தினாஜ்பூர் பகுதியில், ஒரு மகளிர் கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு எதிராக இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் போராடினர். அவர்களுக்கும், போட்டியை ஆதரித்த உள்ளூர்வாசிகளுக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

கிராமப்புறங்களில் இருந்து வரும் ஆஷா ராய் போன்ற பெண்களுக்கு, கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கும், அதிகாரம் பெறுவதற்கும் ஒரு வழியாக உள்ளன.

இந்த விளையாட்டுகளில் பிரகாசிப்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட அணிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்படலாம். அதில் சிலருக்கு சர்வதேச அளவில் வங்கதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம்.

வங்கதேசத்தின் தேசிய மகளிர் கால்பந்து அணி சமீபத்தில் தொடர்ச்சியாக இரண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்களை வென்றது. இதன் காரணமாக அவர்கள் பிரபலமான முகங்களாக மாறியுள்ளனர். இதனால் பல பெண்கள் கால்பந்தில் ஈடுபட உத்வேகம் பெற்றுள்ளனர்.

ஆஷா ராயின் அணியைச் சேர்ந்த முசம்மத் தாரா மோனி, "எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் விளையாடுவதை நிறுத்த மாட்டேன்" என்று கூறினார்.

"எங்களது தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவு. எனது குடும்பத்தினர் என்னை ஆதரிக்கிறார்கள், அதனால் நான் நம்பிக்கையை இழக்கவில்லை," என்று 16 வயதான முசம்மத் தாரா மோனி கூறினார்.

அவர்களின் பயிற்சியாளர் நூருல் இஸ்லாமுக்கு, இத்தகைய எதிர்ப்புகள் ஆச்சரியத்தை அளித்தன.

"கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அணியை பல போட்டிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளேன், ஆனால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் சந்திப்பது இதுவே முதல்முறை" என்று அவர் கூறினார்.

வங்கதேசம், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், பெண்கள் கால்பந்து, மதம்

பட மூலாதாரம், Tomal Rahman

படக்குறிப்பு, கிராமப்புறங்களில் இருந்து வரும் ஆஷா ராய் போன்ற பெண்களுக்கு, வறுமையிலிருந்து விடுபடுவதற்கு கால்பந்து ஒரு வழியாக உள்ளது

'மத விழுமியங்களுக்கு எதிரானது'

தங்களின் மத விழுமியங்களுக்கு எதிரானது என்பதால் இந்தப் போட்டிகளை தடுத்து நிறுத்தியதாக இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற கால்பந்து போட்டிகளை தடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

"பெண்கள் கால்பந்து விளையாட விரும்பினால், அவர்கள் தங்கள் முழு உடலையும் மறைக்க வேண்டும். அவர்கள் பெண் பார்வையாளர்களுக்கு முன்னால் மட்டுமே விளையாட முடியும். ஆண்கள் அவர்கள் விளையாடுவதைப் பார்க்க முடியாது" என்று ரங்பூரின் தாராகஞ்ச் பகுதியில் உள்ள 'இஸ்லாமி அந்தோலன் பங்களாதேஷ்' அமைப்பின் தலைவர் மௌலானா அஷ்ரப் அலி, பிபிசியிடம் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுவதை தங்கள் குழு விரும்புகிறது என்றும் அலி கூறினார்.

மகளிர் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிகாரிகள் ஒரு போட்டியை மீண்டும் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் விசாரணையையும் தொடங்கியுள்ளனர்,

"கடும்போக்குவாதிகளுக்கு அரசாங்கம் உதவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை" என்று இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸின் செய்தித் தொடர்பாளர் ஷஃபிகுல் ஆலம் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஜனவரியில் தேசிய இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதாகவும், அவை எந்த பிரச்னையும் இல்லாமல் நாடு முழுவதும் நடத்தப்பட்டதாகவும் ஆலம் சுட்டிக்காட்டினார்.

ஆனால், சிலருக்கு இந்தப் பதிலில் திருப்தி இல்லை. டாக்கா பல்கலைக் கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியர் சமினா லுத்ஃபா, "பெண்கள் கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டது கவலையளிக்கிறது" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"வங்கதேசப் பெண்கள் கால்பந்து விளையாடுவதை நிறுத்த மாட்டார்கள். வேலைக்குச் செல்வதையோ அல்லது பிற பணிகளைச் செய்வதையோ நிறுத்த மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.

பொது இடங்களில் இருந்து பெண்களை ஒதுக்குவதற்கான முயற்சிகளை எதிர்த்து எல்லோரும் போராடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வங்கதேசம், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், பெண்கள் கால்பந்து, மதம்

பட மூலாதாரம், Sohel Rana

படக்குறிப்பு, தினாஜ்பூரில் மகளிர் கால்பந்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது

இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் குறித்த அரசின் முடிவுகள்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட பிற முடிவுகளும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தின் இறுதி நாட்களில், நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமிக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு வந்த இடைக்கால அரசாங்கம் அதை ரத்து செய்தது.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய போராளிக் குழுவான அன்சாருல்லா பங்களாதேஷின் (தற்போது அன்சார் அல் இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது) தலைவரான ஜஷிமுதீன் ரஹ்மானி, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

2013ஆம் ஆண்டு ஒரு மத சார்பற்ற வலைப்பதிவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நிலுவையில் உள்ள பிற வழக்குகள் காரணமாக தொடர்ந்து சிறையில் இருந்தார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கடந்த சில மாதங்களில் தீவிரவாத குழுக்களுடன் (Extremist Ggroups) தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

"விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்போம் என்று பாதுகாப்புப் படையினர் கூறினாலும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அனைவரையும் கண்காணிப்பில் வைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்" என்று டாக்கா பல்கலைக் கழகத்தின் குற்றவியல் ஆய்வாளர், முனைவர் தவோஹிதுல் ஹக் கூறுகிறார்.

பெரும்பாலான வங்கதேசத்தினர் மிதவாத இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். மத சார்பற்ற விழுமியங்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் கூட, இஸ்லாமிய கடும்போக்குவாதம் என்பது அந்நாட்டில் ஒரு புதிய நிகழ்வு அல்ல.

பத்தாண்டுகளுக்கு முன்பு, மத சார்பற்ற வலைப்பதிவர்கள், நாத்திகர்கள், சிறுபான்மையினர், வெளிநாட்டினர் மற்றும் பிறரை குறிவைத்து, நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில், 2016ஆம் ஆண்டு டாக்காவில் உள்ள ஹோலி ஆர்ட்டிசன் பேக்கரியில் துப்பாக்கி ஏந்திய இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தி, 20 பேரைக் கொன்றது.

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வங்கதேச நடிகைகள்

வங்கதேசம், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், பெண்கள் கால்பந்து, மதம்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, இத்தனை ஆண்டுகளாக யாரும் என்னைத் தடுக்கவில்லை என்கிறார் நடிகை மோனி

சமீபத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டுகள் மட்டும் குறிவைக்கப்படவில்லை. கடந்த வாரம், டாக்காவின் புகழ் பெற்ற எகுஷே புத்தகக் கண்காட்சியில், பல இஸ்லாமிய கடும்போக்குவாத மாணவர்கள் ஒன்று கூடி, ஒரு புத்தகக் கடையை சேதப்படுத்தினர்.

நாடு கடத்தப்பட்ட பெண்ணிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புத்தகத்தை காட்சிப்படுத்தியதே அவர்களின் கோபத்திற்கு காரணம். கடந்த காலங்களில், தஸ்லிமா நஸ்ரின் மதத்திற்கு எதிராக எழுதுகிறார் என குற்றம்சாட்டி இஸ்லாமிய கடும்போக்குவாத குழுக்கள் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை கண்டித்து பேசிய முகமது யூனுஸ், "இந்த தாக்குதல் வங்கதேச குடிமக்களின் உரிமைகள் மற்றும் நமது நாட்டின் சட்டங்களை அவமதிக்கிறது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று கூறினார்.

வங்கதேசத்தின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் போரி மோனி. 'ஒரு பல்பொருள் அங்காடியின் திறப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருந்ததாகவும், ஆனால் மதக் குழுக்களிடமிருந்து வந்த ஆட்சேபனைகளைத் தொடர்ந்து, தான் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும்' போரி மோனி கூறினார்.

"இப்போது நான் உண்மையிலேயே உதவியற்றவளாகவும், பாதுகாப்பற்றவளாகவும் உணர்கிறேன். ஒரு ஷோரூம் திறப்பு விழா அல்லது அதுபோன்ற நிகழ்வில் பங்கேற்பது எனது வேலையின் ஒரு பகுதியாகும். இத்தனை ஆண்டுகளாக யாரும் என்னைத் தடுக்கவில்லை," என்று நடிகை மோனி பிபிசி பெங்காலி சேவையிடம் கூறினார்.

இஸ்லாமிய கடும்போக்குவாதிகளின் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அபு பிஸ்வாஸ், மெஹாசாபியன் சௌத்ரி ஆகிய இரு நடிகைகள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூஃபி வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்

வங்கதேசம், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், பெண்கள் கால்பந்து, மதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேசத்தில் உள்ள ஒரு சூஃபி வழிபாட்டுத் தலம் (மஜார்)

சூஃபி முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை குழுக்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றன. இஸ்லாமிய கடும்போக்குவாதிகள், சூஃபித்துவத்தை இஸ்லாத்திற்கு முரணானது எனக் கருதுகின்றனர்.

"கடந்த 6 மாதங்களில் எங்களது நூற்றுக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் (மஜார்கள்) மற்றும் மையங்கள் தாக்கப்பட்டுள்ளன," என்று சூஃபிசம் யுனிவர்சல் பவுண்டேஷனின் பொதுச் செயலாளர் அனிசூர் ரஹ்மான் ஜாஃப்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"1971-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து எங்கள் மீது இதுபோன்ற திடீர் தாக்குதலை நாங்கள் பார்த்ததில்லை," என்று கூறிய அவர், "நிலைமை தொடர்ந்தால் நாடு தாலிபனியமயமாக்கலுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது" என்று எச்சரித்தார்.

40 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும், மதத் தலங்களைச் சுற்றி பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு சட்டம் ஒழுங்கை பராமரிக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களின் வீடுகள் மற்றும் கட்டடங்களை சேதப்படுத்தினர்.

தலைநகர் டாக்காவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்த பிற ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் உட்பட பிற குழுக்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

"உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் தான், பாதுகாப்புப் படையினர் தலையிடவில்லை" என அதிகாரிகள் கூறுகின்றனர்.

வங்கதேசத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன.

"அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் தைரியம் அடைவார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில் அவர்கள் அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும்" என்று பிரபல பெண்கள் உரிமை ஆர்வலர் ஷிரீன் ஹக் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இத்தகைய நிகழ்வுகள் தொடராது என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது" என்கிறார் ஷிரீன் ஹக்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)