அமெரிக்கா: சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் பற்றிய ஆச்சரியமளிக்கும் 9 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்திய செய்தியாளர், பிபிசி
ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினரை நாடுகடத்துவதை டொனால்ட் டிரம்ப் தனது முக்கிய கொள்கையாக மாற்றியுள்ளார். சட்டவிரோதமாக நுழைந்ததாக கருதப்படும் சுமார் 18,000 இந்தியர்களை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
கடந்த வாரம் வாஷிங்டனில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், மனித கடத்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
- டிரம்ப் - மோதி: 'அதானி, ஆவணமற்ற இந்தியர்கள்' - செய்தியாளர் சந்திப்பின் 5 முக்கிய அம்சங்கள்
- பிறப்பு அடிப்படையில் குடியுரிமை ரத்து - டிரம்பின் உத்தரவு அமெரிக்கவாழ் தமிழர்களை எவ்வாறு பாதிக்கும்?
- அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிடப்பட்டு அனுப்பிய விவகாரத்தில் என்ன நடந்தது? முழு விவரம்
- அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? அவர்களை நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?

"இவர்கள் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பெரிய கனவுகள் மற்றும் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டவர்கள்" என பிரதமர் மோதி கூறினார்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேரந்த அப்பி புடிமன் மற்றும் தேவேஷ் கபூர் ஆகியோரின் புதிய ஆய்வறிக்கை, ஆவணங்களின்றி குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை, மக்கள் பரவல், நுழையும் முறைகள், இருப்பிடங்கள், இவை நிகழும் விதம் குறித்தும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
ஆய்வில் கண்டறியப்பட்ட சில முக்கிய தகவல்களை காணலாம்.
அமெரிக்காவில் எத்தனை சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் உள்ளனர்?
அமெரிக்க மக்கள் தொகையில் 3 சதவீத மக்கள் சட்டவிரோத குடியேறிகள். ஒட்டுமொத்த வெளிநாட்டு மக்கள் தொகையில் இது 22 சதவீதமாகும்.
இதில் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதில், வேறுபட்ட கணக்கீட்டு முறைகள் பின்பற்றப்படுவதால் தெளிவு கிடைக்கவில்லை.
Pew ஆய்வு மையம் மற்றும் நியூயார்க் குடியேற்ற ஆய்வுகளுக்கான மையம் (CMS) ஆகியவற்றின் கணக்கீட்டின்படி, 2022ம் ஆண்டில் 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளனர். மெக்ஸிகோ மற்றும் எல் சால்வேடார் நாடுகளுக்கு அடுத்தாக மிக அதிகமான ஆவணங்களற்ற குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளனர்.
ஆனால் இதற்கு முரணாக குடியேற்றக் கொள்கை நிறுவனத்தின் (MPI) தரவுகளின் படி 3 லட்சத்து 75 ஆயிரம் ஆவணங்களற்ற இந்தியக் குடியேறிகள் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிக சட்டவிரோத குடியேறிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக இது கூறுகிறது
ஹோம்லேண்ட் செக்யூரிட்டியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி , 2022ம் ஆண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஆவணங்களற்ற இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணக்கீடுகளில் காணப்படும் இந்த பெரிய வித்தியாசம், சட்டவிரோத இந்திய குடியேறிகளின் உண்மையான எண்ணிக்கையில் இருக்கும் நிலையற்றத் தன்மையைக் காட்டுவதாக, ஆய்வு கூறுகிறது
உச்சத்திலிருந்து குறையத் தொடங்கிய குடியேறிகள் எண்ணிக்கை
அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த சட்டவிரோத குடியேறிகளில் இந்திய குடியேறிகளின் எண்ணிக்கை சிறிய பங்கு மட்டுமே.
Pew மற்றும் CMS கணக்கீடுகள் துல்லியமானவை என்றால், அமெக்காவில் வசிக்கும் இந்திய குடியேறிகளில் 4 ல் ஒருவர் ஆவணங்களற்றவர்களாக இருக்கக்கூடும். குடியேற்ற முறைகளைப் பொறுத்தவரையிலும் இது சாத்தியமற்ற சூழல் என ஆய்வறிக்கை கூறுகிறது. (அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் குடியேற்ற மக்கள் தொகையில் இந்தியர்கள் உள்ளனர். 1990 ல் 6 லட்சமாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 2022 ல் 3.2 மில்லியனாக உள்ளது. )
ஹோம்லேண்ட் செக்யூரிட்டியின் கணக்கீட்டின்படி 2016ல் உச்சம் தொட்ட ஆவணங்களற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 5,60,0000 லிருந்து 2,20,000 ஆக குறைந்துள்ளது. இது 60 சதவீத சரிவு ஆகும்.
2016லிருந்து 2022 ல் ஆவணங்களற்ற இந்தியர்களின் எண்ணிக்கை எப்படி குறைய முடியும்? கபூரின் கூற்றுப்படி, தரவுகள் சரியான பதிலைத் தரவில்லை. ஆனால் சில ஏற்றுக் கொள்ளத்தகுந்த விளக்கங்களின்படி, சிலர் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றிருக்கலாம் மற்ற சிலர் கோவிட் தொடர்புடைய சிரமங்களால் நாடு திரும்பியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனாலும் இந்த மதிப்பீடு 2023ல் அமெரிக்க எல்லைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை கணக்கில் எடுக்கவில்லை. இதன் பொருள் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்பதுதான்.
எல்லைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அமெரிக்க அரசின் மதிப்பீட்டில் ஆவணங்களற்ற இந்திய குடியேறிகளின் எண்ணிக்கையில் 2020 முதல் 2022 வரையிலான அமெரிக்க நிதியாண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து எல்லை தாண்ட முற்பட்டவர்கள் அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களை, இதுபோன்றதொரு சூழலை எதிர்கொண்டவர்கள் கூறுகிறார்கள்
2016-ம் ஆண்டு முதல் விசா முடிந்த பின்னரும் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நிலையாக 1.5 சதவீதமாக உள்ளது.
Daca (Deferred Action for Childhood Arrivals ) எனப்படும் திட்டமானது குழந்தைகளாக அமெரிக்காவினுள் வரும் குடியேறிகளின் நலனை பாதுகாக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பலன் பெற்றோர் எண்ணிக்கையும் 2017ல் 2,600 ஆக இருந்த நிலையில் 2024ல் 1,600 ஆகக் குறைந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கையும், சட்டவிரோத குடியேறிகளில் இந்தியர்களின் சதவீதமும் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. 1990 களில் 0.8 சதவீதத்திலிருந்து 2015ல் 3.9 சதவீதமாக அதிகரித்த இந்தியர்களின் எண்ணிக்கை 2022-ல் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாதையை மாற்றிய குடியேறிகள்
அமெரிக்காவிற்கு இரண்டு பிரதான தரை எல்லைகள் உள்ளன.
தெற்கு எல்லையில் அரிசோனா, கலிஃபோர்னியா, நியூமெக்ஸிகோ மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்கள் மெக்ஸிகோவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், இங்குதான் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் கடந்து வருவது நிகழ்கிறது. இதற்கு அடுத்ததாக அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான எல்லையில் 11 மாகாணங்களில் வழியாகவும் அமெரிக்காவுக்குள் குடியேறிகள் நுழைகின்றனர்.
2010 க்கு முன்னதாக இந்தியர்களை இந்த இரண்டு எல்லைகள் வழியாக வருவது குறைவாக இருந்தது. ஒரு போதும் 1,000 பேருக்கு மேல் வந்ததே இல்லை.
2010 முதல் பெரும்பாலான இந்திய குடியேறிகள் மெக்ஸிகோ உடனான தெற்கு எல்லை வழியாகவே வருகின்றனர்
2024 அமெரிக்க நிதியாண்டில் அமெரிக்காவுக்கு வரும் மொத்த இந்திய குடியேறிகளில் எண்ணிக்கையில், வடக்கு எல்லை வழியாக வரும் குடியேறிகளின் எண்ணிக்கை 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும்
அமெரிக்காவைவிட கனடாவில் விரைவாக விசிட்டர் விசா கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்களுக்கு கனடா மிக எளிதான அணுகும் தளமாக மாறியுள்ளது..
அமெரிக்க எல்லைகளில் நுழையும் முயற்சிகள் 2021 முதல் அதிகரித்தன. 2023ம் ஆண்டில் மெக்ஸிகோ எல்லையை கடக்கும் முயற்சி உச்சத்தை எட்டியது.
"இது இந்தியர்களை மட்டும் குறிப்பிடுவது அல்ல. பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பெரிய அளவில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்ததில் இதுவும் ஒரு அங்கம். குடியேறிகளின் பெரும் அலை வரும் போது, இந்தியர்களும் அதில் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதாக இதனைக் கருத வேண்டும்" என கபூர் பிபிசியிடம் பேசிய போது கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சட்டவிரோத இந்திய குடியேறிகள் எங்கு தங்குகின்றனர்?
இந்த ஆய்வறிக்கையின்படி அதிக எண்ணிக்கையில் இந்திய மக்கள் தொகை வசிக்கும் மாகாணங்களாக- கலிஃபோர்னியா (112,000), டெக்சாஸ் (61,000) , நியூ ஜெர்சி (55,000), நியூயார்க் (43,000) மற்றும் இல்லினாய்ஸ் (31,000) மாகாணங்கள் உள்ளன. இதே மாகாணங்களில்தான் சட்டவிரோத இந்திய குடியேறிகளும் அதிகமாக உள்ளனர்.
ஓஹியோ (16%) , மிச்சிகன் (14%), நியூ ஜெர்சி (12%) மற்றும் பென்சில்வேனியா (11%) மாகாணங்களிலும் சட்டவிரோத குடியேறிகளின் தொகையில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர்.
இது தவிர டென்னிஸ்ஸி, இண்டியானா, ஜியார்ஜியா, விஸ்கான்சின், கலிஃபோர்னியா மாகாணங்களிலும் இந்திய குடியேறிகளில் 20 சதவீதத்திற்கு மேற்பட்டோர் சட்ட விரோதமானவர்களாக அறியப்படுகின்றனர்.
"நாங்கள் நம்புவது என்னவென்றால் இவர்கள் தங்கள் இனத் திரளில் கலந்து, அது சார்ந்த தொழில்களை பெறுவது எளிதாக இருக்கிறது. ஒரு குடியேறியான குஜராத்தி மற்றொரு அமெரிக்கவாழ் குஜராத்தியிடம் வேலை பெறலாம் அல்லது ஒரு பஞ்சாபி மற்றொரு சீக்கியரிடம் இது போன்ற வேலையைப் பெற முடியும்" என்கிறார் கபூர்.
தஞ்சம் கோரும் இந்தியர்கள் யார்?
அமெரிக்க குடியேற்ற அமைப்பானது எல்லைகளில் பிடிபடுவோரில், சொந்த நாட்டில் துன்புறுத்தலுக்குள்ளாவதாக அஞ்சப்படுபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு வழி வகுக்கிறது.
இவர்கள் கூறும் காரணத்தை சரிபார்ப்பதற்காக "Fear Screenings" எனும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் தேர்ச்சியடைபவர்கள் நீதிமன்றம் மூலம் தஞ்சம் பெற முடியும், இதன் காரணமாகவும் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களும், எல்லைகளில் பதற்றமூட்டும் சூழலும் அதிகரிக்கின்றன.
நிர்வாகத் தரவுகள் தஞ்சம் கோரும் இந்தியர்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையைத் தருவதில்லை, ஆனால் தஞ்சம் கோருபவர்கள் பேசும் மொழிகள் குறித்த நீதிமன்ற தரவுகள் இதில் கொஞ்சம் தெளிவூட்டுகின்றன.
2001ம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து சென்று தஞ்சம் கோருபவர்களில் பஞ்சாபி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை ஆதிக்கம் செலுத்துகிறது. பஞ்சாபிக்கு அடுத்ததாக இந்தி (14%), ஆங்கிலம் (8%) மற்றும் குஜராத்தி (7%) மொழி பேசுவோரின் எண்ணிக்கை உள்ளது.
2001 முதல் 2022 வரையிலான கால கட்டங்களில் பதிவான தஞ்சம் கோருதல் தொடர்பான கோரிக்கைகளில், 66% கோரிக்கைகளை இவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தரவுகளின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இருந்து அதிகளவிலான குடியேறிகள் வருகின்றனர்
தஞ்சம் பெற்றவர்களின் சதவிகித அடிப்படையிலும் பஞ்சாபி பேசுபவர்களே (63%) முன்னிலையில் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இந்தி பேசுபவர்கள் (58%) உள்ளனர். குஜராத்தி பேசுபவர்களில் வெறும் 25 சதவிகிதம் பேரின் தஞ்சம் கோரிக்கையே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
'சிஸ்டத்தில் விளையாட்டு'- தஞ்சம் பெறும் கோரிக்கை அதிகரிப்பது ஏன்?
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் சார்பில் திரட்டப்பட்ட தரவுகளின் படி, அமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கிறது.
தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 10 மடங்காக அதிகரித்துள்ளது, 2021 ல் வெறும் 5,000 ஆக இருந்த எண்ணிக்கை, 2023ம் ஆண்டில் 51 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக பார்க்கப்பட்டாலும் , இதே போன்று கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
சொந்த நாட்டில் துன்புறுத்தல் என கூறுவது, ஏமாற்றி தஞ்சம் கோர பயன்படுத்தப்படும் காரணி என்கிறார் கபூர்
பஞ்சாபி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தஞ்சம் கோரும் நிலையில், காங்கிரஸ் (2017-22) மற்றும் ஆம் ஆத்மி (2022- தற்போது வரை) கட்சிகளால் ஆளப்படும் பஞ்சாப் மாநிலத்தில் என்ன மாறுதல் நிகழ்ந்து விட்டது என்பதில் தற்போது வரையிலும் தெளிவு இல்லை.
டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
அவரது ஆட்சிக்காலத்தின் முதல் வாரத்திலேயே குடியேறிகளுக்கான ஸ்மார்ட் போன் செயலி முடக்கப்பட்டு, ஆப் ஸ்டோர்களிலிருந்து நீக்கப்பட்டது. ஏற்கெனவே தஞ்சம் கேட்டு செயலாக்க நடைமுறையில் இருந்தவர்கள் உட்பட 3 லட்சம் நிலுவை வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
தஞ்சம் கோருபவர்கள் இந்தியாவைப் பற்றி கூறியது என்ன?
தரவுகளின் படி தஞ்சம் கோருபவர்களில் பெரும்பாலான இந்தியர்கள் பஞ்சாபி மற்றும் குஜராத்தி பேசுவோர். இந்தியாவின் பணக்கார மாநிலங்களான இங்கு வசிப்பவர்களால், குடியேற்றத்திற்குத் தேவைப்படும் பெரும் தொகையை செலவிட முடியும்.
முரணாக, இந்திய முஸ்லிம்கள், விளிம்புநிலை சமூகங்கள் மற்றும் மோதல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரிதாகவே தஞ்சம் கோருகின்றனர். உதாரணத்திற்கு மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள், காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்து தஞ்சம் கோருவது அரிது.
பெரும்பாலான இந்திய குடியேறிகள் பொருளாதார காரணங்களுக்காக வருபவர்கள், நாட்டின் மோதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் அல்ல.
லத்தீன் அமெரிக்கா வழியாக செல்லும் பயணமாகட்டும் அல்லது கனடாவில் போலியாக மாணவர்கள் போன்று சென்று நுழைவதாகட்டும்- அமெரிக்காவுக்குள் நுழையும் இந்த கடினமான பயணம் இந்தியாவின் தனிநபர் வருமானத்தைப் போன்று 30 முதல் 100 மடங்கு செலவு ஏற்படுத்தக் கூடியது. இது விற்கவோ அல்லது அடமானம் வைக்கவோ சொத்துக்கள் இருப்போருக்கு மட்டுமே சாத்தியமாகும் என ஆய்வறிக்கை கூறுகிறது.
சட்டவிரோத இந்திய குடியேறிகளின் முதன்மையான மூலமான பஞ்சாப் மற்றும் குஜராத் ஆச்சரியத்திற்கு இடமின்றி இந்தியாவின் வளமான பகுதிகளாக உள்ளன. இங்கு விவசாய விளை பொருட்களால் கிடைக்கும் வருமானத்தை விட , நிலங்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.
"சட்டவிரோத செயல்பாட்டுக்கும் கூட நிறைய பணம் தேவைப்படுகிறது", என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், Reuters
இந்திய சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தூண்டுவது எது?
அதிகரித்துவரும் தஞ்சம் தொடர்பான கோரிக்கைகள் இந்தியாவில் ஜனநாயகம் பின்னடைவை சந்திப்பதைப் போன்று தோற்றமளிக்கலாம், ஆனாலும் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்கள் நீண்டகாலமாக குடியேற்றத்திற்கான வரலாற்றைக் கொண்டுள்ளன. அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் குடியேறிகள் செல்கின்றனர்.
2023ம் ஆண்டில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பியுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்கான முடிவுகள் வறுமையால் வருவதில்லை, மாறாக வெளிநாடுகளில் உள்ள மற்றவர்களின் வெற்றியை ஒப்பிட்டு குடும்பங்கள் முன்னேற முயல்வதால் இத்தகைய சிறந்த வாழ்க்கைக்கான ஆசை தூண்டப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்த தேவையை பணமாக்கிக் கொள்வதற்கு முகவர்களும், புரோக்கர்களுக்குமான ஒரு தொழில் உருவாகிறது.
" சட்டவிரோத குடியேறிகளை அனுப்பும் நாடுகளை விடவும், அவர்களைப் பெறுவதை மிகவும் சுமையானதாக கருதுவதால் இந்திய அரசு இதனை வேறு வழியில் பார்த்திருக்கலாம்" எனவும் ஆய்வறிக்கை கூறுகிறது.
''சட்டவிரோத குடியேற்ற பிரச்னை, அவர்களை அனுப்பும் நாடுகளை விட, பெறும் நாடுகளுக்குதான் அதிகம் என்பதால் இந்திய அரசு இதை வேறு வழியில் பார்த்திருக்கலாம்" என்று ஆய்வு கூறுகிறது.
எத்தனை இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்?
2009 முதல் 2024ம் ஆண்டுக்குள் 16,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 750 இந்தியர்களும், டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 1,550 இந்தியர்களும் , பைடனின் ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு 900 இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
2023 - 24ம் நிதியாண்டில் இந்திய குடியேறிகளை வெளியேற்றுவது வேகமெடுத்தது, ஆனால் 2020ம் ஆண்டில் உச்சம் தொட்டதாகக் கருதலாம், இந்த ஆண்டில் 2,300 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












