இந்தியாவில் கிரிக்கெட் போல மற்ற விளையாட்டுகளும் கவனம் பெற என்ன செய்யலாம்? - மனு பாக்கர் பேட்டி
உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். மனு பாக்கர் முன்னதாக பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனையாக 2021-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
விருதைப் பெற்ற பிறகு மனு பாக்கர் பிபிசிக்கு நேர்காணல் வழங்கினார்.
கேள்வி: இது விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் இது போன்ற நிகழ்வின் முக்கியத்துவம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: முதலில், மிக்க நன்றி. பிபிசியின் விருதைப் பெறுவது உண்மையிலேயே எனக்கு ஒரு கௌரவமாக இருக்கிறது. ஏனெனில் பிபிசி உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு தளம். பெண்களின் சமத்துவத்துக்காக நாம் அனைவரும் உழைக்கிறோம் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், அந்த பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இதை நாம் அனைவரும் அதை அறிவோம். இந்த பெரிய முயற்சி நிச்சயமாக எதிர்காலத்தை மாற்றும் என்று நினைக்கிறேன். வரும் தலைமுறையினருக்கு எதிர்காலம் மிக எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வரலாற்றில் நீண்ட காலமாக பெண்கள் கடினமாக உழைத்துள்ளார்கள். ஆண்களுக்கு நிகராக வாக்களிக்கும் உரிமை, ஓட்டுநர் உரிமம், சமத்துவம் போன்ற பல விஷயங்களுக்காக பெண்கள் போராடியிருப்பதை நாம் கண்டுள்ளோம். ஆனால், அதிலும் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
கேள்வி: விளையாட்டுத் துறைப் பெண்களை ஊக்குவிக்க இன்னும் என்ன செய்யலாம்?
முதலில், இவை அனைத்தும் சமத்துவம் என்ற அடிப்படை உரிமையிலிருந்து தொடங்குகிறது என்று சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால், நம் நாட்டிலும், உலகெங்கிலும், மற்ற நாடுகளிலும், பல இடங்களிலும், ஒவ்வொரு நொடியும் ஏராளமான குற்றங்கள் நடப்பதால், நாம் முதலில் அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். இது பெண்களுக்கான உரிமை, உங்கள் சகோதரிக்கான உரிமை, உங்கள் தாய், மனைவிக்கான உரிமை என ஆண்களுக்கு கற்பிப்பதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும் கற்பிக்க வேண்டும்.
கேள்வி: இந்தியா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட நாடு என்பதை நாம் அறிவோம், ஆனால் உங்களைப் போன்ற முன்மாதிரியான விளையாட்டு வீரர்களால், மக்கள் மற்ற விளையாட்டுகளையும், ஒலிம்பிக்கையும் மக்கள் பார்க்கிறார்கள். கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுத் துறைகளின் மீது மக்கள் இன்னும் ஆர்வம் காட்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: கிரிக்கெட்டுடன் நமக்கு ஒரு சிறப்பு உணர்வு உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். கிரிக்கெட் என்று வரும் போது அனைவரும் உற்சாகமாகிறார்கள். ஏன் அது இருக்காது? இது நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், இந்தியா மற்ற விளையாட்டுகளிலும் திறமை பெற்றுள்ளது. உதாரணமாக செஸ், துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை, பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை என நிறைய உள்ளன.
அனைத்து விளையாட்டுகளுக்கும் சமமான கவனம் கொடுத்தால், விரைவில் சிறந்து விளங்க முடியும் என்று நினைக்கிறேன். தற்போது இருப்பதை விட மிகமிகச் சிறப்பாகச் செயல்படுவோம். இது மற்றவர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல, விரும்புவதை விளையாட உங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பளிப்பதும் ஆகும். நிச்சயமாக, இது கீழ் மட்டத்திலிருந்து தொடங்குகிறது. நாட்டின் ஒவ்வொரு விளையாட்டையும் கொண்டாட நாம் முன்வர வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



