பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா? கோலி, ரோஹித் சரியாக பயன்படுத்துவார்களா?

பட மூலாதாரம், Getty Images
துபையில் இன்று (பிப்ரவரி 23) நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தியாவுடனான இன்றைய ஆட்டம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணி இன்றும் தோற்றால் தொடரை விட்டே வெளியேறும் ஆபத்து இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய அனுபவம், இந்தியாவைவிட பாகிஸ்தான் அணிக்கு அதிகம். ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, 28 போட்டிகளில் 19-இல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
இருந்தாலும், இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சு ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ள நிலையில், அதில் வலுவாக உள்ள இந்திய அணியை பாகிஸ்தான் பேட்டர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்ற கேள்வியும் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், இன்றைய ஆட்டத்தில் துபை ஆடுகளம் யாருக்குச் சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது? பாகிஸ்தான் பலவீனத்தை இந்தியாவின் கோலி, ரோகித் இருவரும் பயன்படுத்துவார்களா? இந்தியா - பாகிஸ்தான் அணிகளில் யார் ஆதிக்கம் செலுத்தக்கூடும்?

பாகிஸ்தானின் பலவீனம் இந்தியாவின் பலமாக மாறுமா?
துபை ஆடுகளம், தட்டையான, வறண்ட தன்மை கொண்டது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்த ஆடுகளத்தில் பந்து பவுன்ஸ் ஆகும் என்பதால் ஷாட்களை அடித்து ஆடுவது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும்.
ஆட்டத்தின் தொடக்கத்தில், மைதானம் திடமாக இருக்கும் என்பதால் சில ஓவர்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இது, சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசும் ஷாஹீன் அப்ரிடி போன்ற பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஆட்டத்தின் நடுப்பகுதியில் மண் நெகிழ்ந்துவிடும். அப்போது சுழற்பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியிருக்கும்.
இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் லெக் ஸ்பின்னுக்கு திணறுவார்கள் என பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். ஆனால், லெக் ஸ்பின்னர்களுக்கு மட்டுமல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்காமல் ஒரே ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளரோடு (அர்பார் அகமது ) பாகிஸ்தான் களமிறங்குவது அந்த அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.
சல்மான் அகா, குஷ்தில் ஷா ஆகிய பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியின் இந்த பலவீனத்தை இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேவேளையில், இந்தியா தரப்பில் ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் பல திருப்பங்களைக் கொண்டு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பாகிஸ்தானுக்கு பலவீனமாக உள்ள சுழற்பந்துவீச்சு இந்தியாவுக்கு பலமாக இருக்கிறது.
பந்து தரையில் பட்டு மெதுவாக பவுன்ஸ் ஆவதால், ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.
அப்ரிடி பந்துவீச்சை ரோஹித், கோலியால் சமாளிக்க முடியுமா?

பட மூலாதாரம், AFP
இன்றைய ஆட்டத்தில், சுழற்பந்துவீச்சின் ஆதிக்கம் இருக்கக் கூடும் என்றாலும், இன்னிங்ஸின் தொடக்க ஓவர்களில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும்.
இந்திய அணியைப் பொருத்தவரை, ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவருக்குமே பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியின் பந்துவீச்சு சவாலாக இருக்கப் போகிறது.
ரோஹித் ஷர்மா 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நல்ல ஃபார்மில் ஆடினார். ஆனால், பெரிய ஷாட்டுக்கு முயலும் போது விக்கெட்டை இழப்பதும், நீண்டநேரம் களத்தில் நிலைத்து இருக்காததும் அவரது இயல்பான ஆட்டத்தின் மீது கேள்வியை எழுப்பியது.
அதோடு, கோலியின் பேட்டிங்கும் கேள்விக்குறியாக உள்ளது. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் ரோஹித் அதிரடியான தொடக்கத்தை அளித்த பிறகு, கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் அதை முன்னெடுத்துச் செல்லத் தவறிவிட்டனர்.
இந்நிலையில், முந்தைய போட்டியில் இருந்த மந்தமான பேட்டிங் போலன்றி, ஒருவேளை நியூசிலாந்து செய்ததைப் போல பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சு உத்தியை, அப்ரிடியின் அணுகுமுறையை ஆரம்பத்திலேயே உடைத்துவிட்டால், இந்திய அணி விக்கெட்டுகளை இழக்காமல் நிலைத்து ஆடுவதற்கு உதவக்கூடும்.
அதோடு, கடந்த ஆட்டத்தில் இதே ஆடுகளத்தில் அவுட் ஆகாமல் நிலைத்து நின்ற சுப்மன் கில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த ஆடுகளத்தின் தன்மையை அதேபோலப் பயன்படுத்தினால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பலாம்.
அதேபோல, பாகிஸ்தானின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஷமியின் பந்துவீச்சு பலமாக இருக்கக் கூடும். ஆனால், துபை ஆடுகளத்தை பாகிஸ்தான் வீரர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக இந்திய அணி வேகப்பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஹர்திக் பாண்டியா பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருந்தாலும், ராணாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது இருவரையும் சேர்த்து 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம்.
சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் ஆடுகளம்

பட மூலாதாரம், Getty Images
துபை ஆடுகளத்தில் இன்று நடக்கப்போகும் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியப் பங்கு இருக்கப் போகிறது.
மிடில் ஓவர்களில் ஆடுகளத்தின் தன்மை மாறும். அதுவரை கடினமாக இருக்கும் மைதானம் நெகிழ்வுத்தன்மையை அடையும் என்பதால், ஆட்டத்தின் பிற்பகுதியில், துபை ஆடுகளம் மெதுவாக இருக்கும். இதனால், ஆட்டம் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக செல்லும்.
இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு வலுவான நிலையில் இருப்பது ஒரு பலமாகப் பார்க்கப்படுகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்றவர்கள் இருப்பதோடு, வாஷிங்டன் சுந்தர் அல்லது வருண் இடம் பெற்றால், இந்திய அணியின் சுழல் தாக்குதலைச் சமாளிப்பது பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
பாபர் ஆசம், சுழற்பந்துவீச்சுக்கு எதிராகச் சமீபத்திய போட்டிகளில் திணறி வருகிறார். சுழல் பந்துகளை எதிர்கொள்வது பாபர் ஆசம் மற்றும் ஷதாப் கானுக்கு சவாலாக இருக்கக்கூடும். அதேவேளையில், அணியின் கேப்டன் முகமது ரிஸ்வானும் இப்திகார் அகமதும் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலுவான நிலையில் இருக்கின்றனர்.
இருப்பினும், ஜடேஜா துல்லியமான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசினால், பாகிஸ்தான் பேட்டர்களுக்கு அழுத்தம் தர முடியும். துபை மைதானத்தில் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் சுழல் படை திறம்படச் செயல்பட்டால் ரன் குவிப்பைத் தடுக்க முடியும்.
பாகிஸ்தானிடம் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இருந்தாலும், அது பிரச்னையற்றதாக இருக்காது. பாகிஸ்தானின் பேட்டர்கள் சூழ்நிலைகளுக்கு விரைவாகத் தகவமைக்க வேண்டியிருக்கும்.
மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை அவர்களால் சமாளிக்க முடிந்தால், அவர்கள் ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்க முடியும். ஆனால் அது இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும்.
இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் எப்படி?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்துடனான முந்தைய ஆட்டத்தில் பார்த்தது போலவே, துபை ஆடுகளம் மிகவும் மெதுவானதாகவே இருக்கும் எனக் கூறுகிறார் மூத்த விளையாட்டு செய்தியாளர் முத்துக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்திய அணி வீரர்கள் நன்கு ஷாட் அடித்து விளையாடியே பழக்கப்பட்டுவிட்டனர். இந்த மைதானத்தில் அத்தகைய ஆட்டத்தை முன்னெடுத்தால் விக்கெட்டுகளை விரைவில் இழக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.
முந்தைய ஆட்டத்திலேயே, 228 ரன்களை சேஸிங் செய்யும்போது, நடுப்பகுதி ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்டது. கே.எல்.ராகுலின் கேட்ச் தவற விடப்படாமல் அவர் அவுட் ஆகியிருந்தால் நிலைமை இந்தியாவுக்கு சவாலாகியிருக்கும் என்கிறார் முத்துக்குமார்.
துபை மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வதுதான் சாதகமாக இருக்கும் எனக் கூறும் அவர், 270 முதல் 290 வரை இலக்கு நிர்ணயித்துவிட்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில், "தென்னாப்பிரிக்காவுடன் விளையாடிய போது, நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகும், பாகிஸ்தான் 352 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. அந்த அளவுக்கு பாகிஸ்தானின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. அதிலும், பக்கர் ஜமான் காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இடம்பெற்றால், இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். ஒருவேளை அவர் ஆட்டத்தில் இல்லாமல் போனால் இந்தியாவின் கை ஓங்கியிருக்கும்," என்றும் முத்துக்குமார் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை, இந்தியாவின் கையே ஓங்கியுள்ளதாகக் கூறுகிறார் அவர். "பாகிஸ்தானில் அர்பார் அகமது தவிர முழுநேர சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாதது ஒரு பலவீனம்தான். ஆனால், இடதுகை பந்துவீச்சாளரான அப்ரிடி சமீபத்தில் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், இந்தியாவுடனான போட்டி என்னும் போது ஆட்டம் வேறுவிதமாக, உத்வேகம் மிக்கதாக இருக்கலாம்." என்றார் அவர்.
அத்தகைய சூழ்நிலையில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றோரை அவர் திணறடிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மூத்த விளையாட்டு செய்தியாளர் முத்துக்குமாரின் கூற்றுப்படி, வங்கதேசத்துடனான போட்டியின் தொடக்கத்தில் ரன் குவித்ததைப் போலச் செயல்பட்டால், 290 வரையிலான ஸ்கோரை எதிர்பார்க்கலாம். அது நடந்தால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
அதோடு, ஆட்டம் செல்லச் செல்ல, ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சு வலிமை கூடும். அது இந்திய அணிக்குச் சாதகமாக சூழலை மாற்றக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்தத்தில், "இந்தியாவைப் பொருத்தவரை, வேகப்பந்துவீச்சுக்கு முகமது ஷமி நல்ல ஃபார்மில் இருக்கிறார், சுழற்பந்துவீச்சு வலிமையாக இருக்கிறது, பேட்டிங்கிலும் இந்தியா வலுவாகவே இருக்கிறது. இருப்பினும், ஒருவேளை பக்கர் ஜமான் இன்றைய போட்டியில் இடம்பெற்றால், அது ஆட்டத்தின் போக்கையே புரட்டிப்போடக்கூடும்," என்கிறார் முத்துக்குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












