கால் பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் சளி குணமாகுமா?

ஒரு புகைப்படத் தொகுப்பில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது பெண் குழந்தையின் மூக்கைச் சுத்தம் செய்யும் தாயார், ஒரு ஜோடி பாதங்கள் மற்றும் வட்ட வடிவில் நறுக்கப்பட்ட வெங்காயத் துண்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்களில், காலுறைக்குள் (சாக்ஸ்) பச்சை வெங்காயத்தை வைத்தால் சளி குணமாகும் என்று கூறப்படுகிறது.
    • எழுதியவர், எஸ்தர் காஹும்பி
    • பதவி, உலக சுகாதாரம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"உங்களுக்கு சளி இருந்தால், செய்ய வேண்டியது எல்லாம் ஒரு காலுறைக்குள் (socks) வெங்காயத்தை வட்டமாக நறுக்கி வைத்து, அதை இரவு முழுவதும் அணிந்துகொள்வதுதான்" என்று, தனது மகளின் அறிகுறிகளைப் பற்றி விவரிக்கும் பெண் ஒருவர் கையில் சிவப்பு வெங்காயத்தைப் பிடித்தபடி கூறுகிறார்.

இந்தத் தாயின் டிக்டாக் வீடியோக்கள், வெங்காயத்துக்கு இருப்பதாகக் கூறப்படும் குணப்படுத்தும் சக்தி குறித்து சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பரவி வரும் பல்வேறு கூற்றுகளில் ஒன்றாகும்.

சிலர் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கும் இந்த முறையைப் பரிந்துரைக்கின்றனர். இது "அதிக உடல் வெப்பநிலையைக் குறைக்கும்", "கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்லும்", "நச்சுக்களை உறிஞ்சும்", மேலும் "ரத்தத்தைச் சுத்திகரிக்கும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வெங்காயத்தைப் பாதங்களில் வைத்தால் இத்தகைய பலன்கள் உண்டு என்பதற்கு ஆதாரம் உள்ளதா?

வெங்காயம் அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறியாகும். இது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவற்றில் குவெர்செட்டின் என்ற தாவரக் கலவையும் அடங்கும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கலவைகள் இதய ஆரோக்கியத்துக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் பங்களிப்பதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அவற்றின் இந்தப் பண்புகளை வைத்து, வெங்காயம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அல்லது தொற்றைக் குணப்படுத்தும் என்று கூறுவது முற்றிலும் வேறுபட்ட விஷயம் என்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணரும் தொற்று நோய்கள் தொடர்பான வல்லுநருமான கேட்டி சுலேட்டா.

இந்தக் கூற்றுகள் 1500-களில் உருவானவை என்று அமெரிக்காவில் வெங்காயத் தொழில்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய வெங்காய சங்கம் தெரிவிக்கிறது. அப்போது, ஓர் அறையைச் சுற்றி வெங்காயத்தை வைத்தால் பிளேக் நோயிலிருந்து பாதுகாக்கலாம் என்று நம்பப்பட்டது.

வீங்கிய நிணநீர் மீது வெங்காயத்தைத் தேய்த்த சம்பவங்களும் இருந்துள்ளன. அவ்வாறு செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியும் என்று மக்கள் நம்பினர்.

வெங்காயத்தால் உடலில் உள்ள நச்சுக்களை ஏன் வெளியேற்ற முடியாது?

மரத்தால் செய்யப்பட்ட வெட்டுப் பலகையில் ஒருவர் சிவப்பு வெங்காயத்தை நறுக்குகிறார். அதைச் சுற்றிலும் சில முழு சிவப்பு வெங்காயங்கள் வைக்கப்பட்டுள்ளன.
படக்குறிப்பு, உணவாக உட்கொள்ளும்போது வெங்காயம் சத்தானது; ஆனால், அது நோய்களைக் குணப்படுத்தாது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சருமம் என்பது கிருமிகள் உடலுக்குள் நுழைவதைத் தடுக்கும் உடலின் முதல் பாதுகாப்பு அரணாகும். ஆனால், சில நச்சுப் பொருட்கள் சருமத்தின் வழியாக உடலுக்குள் ஊடுருவ முடியும் என்றாலும், அவை இந்த வழியில் உடலைவிட்டு வெளியேற முடியாது. வியர்வையின் மூலமாகக்கூட நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இந்தத் தடையைத் தாண்டி நச்சுக்களை வெளியே இழுக்க ஒரு வெங்காயம் இயற்பியல் விதிகளையே மீற வேண்டியிருக்கும்," என்கிறார் சுலேட்டா.

"சருமத்தின் வழியாக நச்சுக்களை வெளியேற்றும் வகையில் வெங்காயத்துக்கு எந்தவிதமான மாயாஜாலத் தன்மையும் இல்லை. பாதங்களின் அடிப்பகுதி வழியாகவோ, சருமத்தின் வேறு எந்தப் பகுதி வழியாகவோ அது நச்சுக்களை வெளியேற்ற முடியாது," என்றும் அவர் கூறுகிறார்.

இரவு முழுவதும் காலுறைக்குள் வைக்கப்பட்ட வெங்காயத்தில் ஏற்படும் நிறமாற்றம், உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறியதற்கான ஆதாரம் என்று சில நேரங்களில் கூறப்படுகிறது. ஆனால், அது உண்மையில் ஆக்சிஜனேற்றம் மற்றும் சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகளுடனான வினை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றமே என சுலேட்டா விளக்குகிறார்.

 சுலேட்டாவின் முகப்படம். தோள்வரை நீளமான பழுப்பு நிற முடியும், பழுப்பு நிறக் கண்களும் கொண்ட அவர், கேமராவைப் பார்த்தபடி புன்னகைக்கிறார்.
படக்குறிப்பு, சிகிச்சை அளித்தாலும் அளிக்காவிட்டாலும், சளி பொதுவாக ஒரு வாரத்துக்குள் குணமாகிவிடும் என்கிறார் கேட்டி சுலேட்டா.

சமூக ஊடகங்களில், "நச்சு" (toxins) என்ற சொல், உணவுமுறைகள் மற்றும் உடலைச் சுத்திகரிக்கும் முறைகள் குறித்த விளம்பரங்களில் பெரும்பாலும் மேலோட்டமாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும், குறிப்பிட்டுச் சொல்லப்படாத சில பொருட்கள் உடலில் சேர்ந்து, அவற்றை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தை விளக்குவதற்காக இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ ரீதியாக, பாக்டீரியா போன்ற உயிரினங்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுப் பொருட்களையே டாக்ஸின்கள் என்கிறோம். அதிக அளவில் உட்கொள்ளப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அல்லது மருந்துகளும் இதில் அடங்கும் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் தெரிவிக்கிறது.

ஆனால், கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கான சொந்த வடிகட்டுதல் அமைப்புகள் உடலிலேயே உள்ளன. கல்லீரல் ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, உடலைத் தூய்மையாகவும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதேவேளை, சிறுநீரகங்கள் அதிகப்படியான நீர் மற்றும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றன.

கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறப்பு சிகிச்சை முறைகள் தேவையில்லை. சமச்சீரான உணவு உட்கொள்வது, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவை இந்த உறுப்புகள் முறையாகச் செயல்பட உதவும்.

வீட்டிலேயே உடலை "டீடாக்ஸ்" (நச்சு நீக்கம்) செய்ய முயற்சிப்பதற்குப் பதிலாக, யாரேனும் தீங்கு விளைவிக்கும் பொருளை விழுங்கிவிட்டதாகவோ, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் சென்றுவிட்டதாகவோ அல்லது அதிக அளவு மருந்தை எடுத்துக்கொண்டதாகவோ சந்தேகித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவிக்கிறது.

சளியை குணப்படுத்தும் நிவாரணம் என்ன?

மறுபுறம், சளி வைரஸ்களால் ஏற்படுகிறது. தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, இது பொதுவாக தானாகவே குணமாகிவிடும். சளியில் இருந்து விரைவாக மீள்வதற்கான வழிகளில் நன்றாக ஓய்வெடுப்பது, போதுமான அளவு திரவங்களைப் பருகுவது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது ஆகியவை அடங்கும்.

வெங்காய சூப் போன்ற திரவ உணவுகள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குவதுடன், தொண்டையில் ஏற்படும் கரகரப்பையும் ஓரளவு தணிக்க உதவும். ஆனால், நோயைக் குணப்படுத்துவது என்பதற்கும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

"சளி என்பது தானாகவே குணமாகக்கூடியது. சிகிச்சை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், பொதுவாக ஒரு வாரத்துக்குள் அது சரியாகிவிடும். வெங்காய சூப் இந்தக் கால அளவைக் குறைக்காது," என்று சுலேட்டா விளக்குகிறார்.

வெங்காயத்தைச் சமைக்கும்போது அதிலுள்ள வைட்டமின் சி-யில் ஒரு பகுதி குறைந்துவிடுகிறது. இருப்பினும், அதன் ஒரு பகுதி சமைக்கும் நீரில் கலந்துவிடுவதால், அதை சூப்புடன் சேர்த்து உட்கொள்ள முடியும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

இருப்பினும், பச்சை வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின் சி தக்கவைக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், நீண்ட நேரம் கொதிக்க வைப்பது அதில் தங்கியிருக்கும் வைட்டமின் சி அளவைக் குறைக்கிறது.

அதிக உடல் வெப்பநிலை போன்ற சளி அறிகுறிகள் சில நாட்களுக்கும் மேலாக நீடித்தால், மருத்துவ ஆலோசனை தேவைப்படலாம். குழந்தைகளுக்கு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், விரைவாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

சளி
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அழற்சியைப் பொறுத்தவரை, அதை எப்போதும் "எதிர்த்துப் போராட" வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், தொற்று அல்லது காயம் ஏற்படும்போது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படும் விதமே அழற்சி ஆகும். இந்தச் செயல்பாடு, உடலைப் பாதுகாக்கவும் சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்யும் பணியைத் தொடங்கவும் உதவுகிறது.

உடலின் எந்தப் பகுதியில் அழற்சி ஏற்பட்டுள்ளது, அதற்கு என்ன காரணம் என்பதன் அடிப்படையிலேயே எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

அழற்சியின் பொதுவான அறிகுறிகளில் வீக்கம், வலி மற்றும் அந்தப் பகுதியில் அதிக வெப்பம் ஆகியவை அடங்கும். ஆனால், இவை தொடர்ந்து நீடித்தாலோ, காரணம் தெரியாத பிற அறிகுறிகளுடன் சேர்ந்தாலோ, வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இந்தக் கூற்றுகளால் ஏற்படும் மற்றொரு துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால், இது மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதைத் தாமதிக்கச் செய்கிறது," என்கிறார் சுலேட்டா.

இணையத்தில் வழங்கப்படும் சுகாதார ஆலோசனைகள், அறிவியல் ஆதாரங்கள் இல்லாமலேயே மருத்துவம் மற்றும் அறிவியலில் பயன்படுத்தப்படும் சொற்களை அடிக்கடி பயன்படுத்துகின்றன என்று சுலேட்டா எச்சரிக்கிறார்.

யாரேனும் ஒரு வெங்காயமோ, ஊட்டச்சத்து மாத்திரையோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அல்லது உடலை "டீடாக்ஸ்" செய்யும் என்று கூறினால், அவர்கள் குறிப்பாக எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று கேட்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

"கொஞ்சம் ஆழமாக விசாரியுங்கள். என்ன நச்சுக்கள்? அது எப்படி செயல்படுகிறது? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களால் உண்மையாக விளக்க முடியவில்லை என்றால், அது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அறிகுறி," என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு