'கோடரியால் தாக்கிய துணை விமானி' - காக்பிட் கதவை இந்திய கேப்டன் எப்படி திறந்தார்? வெளியான புதிய தகவல்

பட மூலாதாரம், @IsraelMFA
- எழுதியவர், எல்லா கிப்லிங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபை விமானத்தைக் கைப்பற்ற முயன்ற துணை விமானி, இந்திய விமானி ஸ்மித் மச்சார் மீது விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் கோடரியால் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஃப்ளைதுபை விமானத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு கவனம் பெற்ற இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் தொலைபேசியில் பேசினார்.
செப்டம்பர் 30-ஆம் தேதி நடந்த சம்பவத்தில் ஸ்மித் காட்டிய துணிச்சலை நெதன்யாகு பாராட்டினார். அவரை இந்தியா, இஸ்ரேல் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகின் கதாநாயகன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துபையிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 170-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பயணம் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு, விமானம் 17,000 அடி (5,200 மீட்டர்) திடீரென கீழ் இறங்கியது. இதையடுத்து, பயணிகள் தாக்குதல் நடத்தியவரைக் கட்டுக்குள் கொண்டு வந்து, விமானத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
கேப்டன் ஸ்மித் மச்சார், தாம் காயமடைந்து தரையில் படுத்திருந்தபோது விமானம் கீழே செல்வதை உணர்ந்ததாகவும், அப்போது தான் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"உள்ளிருந்து கதவைத் திறக்கக் கடைசி முயற்சியாக ஒருமுறை பலமாகத் தள்ளுமாறு எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.
இது பயணிகளை உள்ளே வர அனுமதித்தது.
விமானத்தில் பயணித்த வேறு இரண்டு விமானிகள் விமானத்தைப் பாதுகாப்பாக செளதி அரேபியாவில் தரையிறக்கினர்.
பொதுவாக, அவசரகாலங்களில் பயன்படுத்துவதற்காக விமான அவசரக் கோடரி காக்பிட்டில் வைக்கப்பட்டிருக்கும்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள இந்த விமானப் பாதையில் நடந்த இந்தச் சம்பவத்தில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்த கேள்வி விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது. விமானத்தில் இருந்த பயணிகளின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, தாக்குதலுக்கு கத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Jack GUEZ / AFP via Getty Images
துணை விமானி யார்?
ராய்ட்டர்ஸ், சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல ஊடகங்கள், தாக்குதல் நடத்திய துணை விமானியின் பெயர் ஹமாம் அல்-ஹம்மாமி என்று குறிப்பிட்டுள்ளன. எனினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்பு ஓமன் நாட்டின் விமான நிறுவனமான ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அல்-ஹம்மாமியின் கடும்போக்கு சிந்தனைகள் குறித்த கவலைகள் காரணமாக அவர் விமானி பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த விமான நிறுவனத்தில் வேறு பணிக்கு மாற்றப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் நியூ பல்கலைக்கழகத்தில் (Buckinghamshire New University) மூன்றாண்டு கால தொலைதூரக் கல்விப் பாடத்திட்டத்தை நிறைவு செய்து, 2023-இல் விமானப் போக்குவரத்து மேலாண்மையில் பட்டம் பெற்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு அவர் விமானி பயிற்சிக்கான வகுப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டது.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், விமானத்தில் தாக்குதல் நடத்திய நபரை மற்றவர்கள் கட்டுப்படுத்திய பிறகு, அவர் விமானப் பணியாளர்களிடம் "என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள்" என்று கத்தியதாக நெதன்யாகு தெரிவித்தார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் மேலும் கூறுகையில், "அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தது தெளிவாகிறது... அவர் விமானத்தைத் தரையில் மோத முயன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது" என்றார்.
தாக்குதல் நடத்திய நபர் "இஸ்லாமிய கடும்போக்கு சித்தாந்தப் போதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்" என்றும் நெதன்யாகு கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், துணை விமானி "பயங்கரவாத செயலை" மேற்கொள்ள முயன்றது தெரியவந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு வழக்கறிஞர் ஹமத் சைஃப் அல் ஷம்சி, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏதேனும் தொடர்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், ANI
விமானத்தில் என்ன நடந்தது?
தொலைபேசி உரையாடலின்போது, கேப்டன் ஸ்மித்திடம் நடந்த சம்பவம் குறித்து நெதன்யாகு கேட்டறிந்தார். அவர்களது உரையாடல் தொடர்பான காணொளியையும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தை விவரித்த கேப்டன் ஸ்மித், அது வழக்கமான விமானப் பயணம் என்று கூறினார். துணை விமானி தொழுகை செய்ய விரும்புவதாகத் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அசாதாரணமாக எதுவும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
"ஆனால் அவர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது, மரியாதை அளிக்கும் வகையில் நான் பின்னால் திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று, நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, என் தலையின் பின்புறத்தில் பலமாக ஓர் அடி விழுந்ததை உணர்ந்தேன்" என்று ஸ்மித் கூறினார்.
முதலில் விமானத்தில்தான் பெரிய சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து தாக்கப்பட்டபோது, பிரச்னை விமானத்தில் இல்லை என்பதும், காக்பிட்டில் இருந்த மற்றொரு நபர்தான் தன்னைத் தாக்குகிறார் என்பதும் புரிந்ததாகக் கூறினார்.
"அவரைத் தடுக்க நான் முயன்றேன். ஆனால் தாக்கப்பட்டதால் என்னால் கிட்டத்தட்ட எதையும் பார்க்க முடியவில்லை. என் பார்வை முற்றிலும் மங்கலாகிவிட்டது. அந்த நேரத்தில் விமானம் வேகமாக கீழே சென்றுகொண்டிருந்து என்பதை உணர்ந்தேன். அதனால், அந்த நேரத்தில் நடந்தவை குறித்த எனது நினைவுகள் இன்னும் துண்டு துண்டாகத்தான் இருக்கின்றன" என்று ஸ்மித் கூறினார்.

பட மூலாதாரம், @HamdanMohammed X/ANI Photo
"நான் அதைச் செய்யவில்லை என்றால் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்"
கேப்டன் ஸ்மித் காக்பிட் கதவைத் திறக்க முயன்றதாகவும், ஆனால் அது மீண்டும் மூடப்பட்டதாகவும் கூறினார். பின்னர் காக்பிட் தரையில் படுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். விமானத்தின் இரைச்சல், வேகமாக வீசும் காற்றின் சத்தம், பயணிகளின் அலறல் ஆகியவற்றைத் தன்னால் கேட்க முடிந்ததாக அவர் கூறினார்.
"கடைசி முயற்சி செய்ய என்னிடம் கொஞ்சம் சக்தி மீதமிருந்தது. அதை தனிப்பட்ட போராட்டம் என்றோ, மக்களுக்காக நடத்தும் போராட்டம் என்றோ நீங்கள் அழைக்கலாம். ஆனால், நான் அதைச் செய்யவில்லை என்றால் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். பின்னர் எனது முழு சக்தியையும் திரட்டி, கதவுக்குச் சென்று அதைத் திறந்தேன்," என்று ஸ்மித் கூறினார்.
அவர் மேலும், "நல்லவேளையாக, வெளியில் சிலர் காத்திருந்தனர். அவர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பிறகு நடந்தது உங்களுக்குத் தெரியும்" என்றார்.
காக்பிட் கதவை எவ்வாறு திறந்தார் என்று நெதன்யாகு, ஸ்மித்திடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஸ்மித், காக்பிட்டுக்குள் இருந்து கதவைத் திறக்க அதன் கைப்பிடியைத் திருப்ப வேண்டும் என்றும், வெளிப்புறத்தில் இருந்து குறியீட்டைப் பயன்படுத்தி கதவைத் திறக்க முடியும் என்றும் கூறினார்.
"வெளியில் இருந்த எனது சக ஊழியர்கள் குறியீட்டைப் பயன்படுத்தி கதவைத் திறக்க முயன்றுகொண்டிருந்தனர். ஆனால் அந்த நபர் (துணை விமானி) கதவைத் திறக்க விடவில்லை. கதவைத் திறப்பதற்கான ஒரே வழி அங்கு சென்று அதன் கைப்பிடியைத் திருப்புவதுதான். கதவைத் திறக்க, அந்த கைப்பிடியை சற்று வேகமாகத் திருப்ப வேண்டும். முக்கியமான விஷயம், அங்கு சென்று சேர்வதுதான். என் கை அந்தக் கைப்பிடியை எட்டியதும், அதைத் திருப்பி கதவைத் திறந்தேன்," என்று ஸ்மித் கூறினார்.

பட மூலாதாரம், DPR PMO/ANI
இஸ்ரேல் வருமாறு அழைப்பு
கேப்டன் ஸ்மித்திடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த பிறகு, அவரது துணிச்சலை நெதன்யாகு பாராட்டினார். ஸ்மித் பலரது உயிரைக் காப்பாற்றியது மட்டுமின்றி, கடினமான சூழ்நிலையில் துணிச்சலுடன் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
"நீங்கள் பல உயிர்களைக் காப்பாற்றினீர்கள். அதைவிடப் பெரிய ஒன்றையும் நீங்கள் காப்பாற்றியதாக நான் நினைக்கிறேன். எவ்வளவு ஆபத்தானதாகவும் வன்முறையானதாகவும் இருந்தாலும், துணிச்சலான விமானிகளும் பயணிகளும் எந்தத் தீமையையும் எதிர்கொண்டு தோற்கடிக்க முடியும் என்ற உலகத்தின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள்," என்று நெதன்யாகு கூறினார்.
அவர் மேலும், "உங்களது துணிச்சல் குறித்து உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நீங்கள் இஸ்ரேலின் ஹீரோ. நீங்கள் இந்தியாவின் ஹீரோ. நீங்கள் ஒட்டுமொத்த உலகின் ஹீரோ. இங்குள்ள மக்கள் உங்களை மனம் திறந்து வரவேற்பார்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
இந்த உரையாடலின்போது, விமானத்தில் இருந்த பல் மருத்துவர் ஒருவரைப் பற்றியும் கேப்டன் ஸ்மித் குறிப்பிட்டார். தனது உயிரைக் காப்பாற்றுவதில் அந்த பல் மருத்துவர் முக்கியப் பங்காற்றியதாகவும், அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் ஸ்மித் கூறினார்.
கேப்டன் ஸ்மித் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரையும் இஸ்ரேலுக்கு வருமாறு நெதன்யாகு அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இருவரும் சுதந்திர தினத்துக்கான தீபத்தை ஏற்ற அழைக்கப்படுவதாக அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































