இந்தியாவை அச்சுறுத்தும் பாகிஸ்தானின் 5 வீரர்கள் - இந்தியாவின் துருப்புச் சீட்டு எது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி துபையில் நாளை (பிப்ரவரி 23) பிற்பகல் நடக்க இருக்கிறது.
இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களது இரண்டாவது ஆட்டத்தை விளையாட இருக்கிறது.
இந்திய அணி, முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடக்கவுள்ள இந்த ஆட்டம் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஏனென்றால், முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வி அடைந்ததால், ரன்ரேட் மைனஸுக்குள் சென்றுவிட்டது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால், பாகிஸ்தான் அணி தொடரை விட்டே வெளியேறும்.
இந்த சூழலில் இந்தியாவை அச்சுறுத்தும் 5 பாகிஸ்தான் வீரர்கள் யார்?
- சாம்பியன்ஸ் டிராபியில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் - இந்திய அணிக்கு கவலை தரும் 8 விஷயங்கள்
- இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்?
- சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்?
- சாம்பியன்ஸ் டிராஃபி 2025: வெற்றிநடை போடுமா இந்திய அணி? துபை ஆடுகளம் எப்படி?

ஷஹீன் ஷா அப்ரிடி

பட மூலாதாரம், Getty Images
புதிய பந்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சு மிரட்டலாக இருக்கும். இந்திய அணிக்கு எதிராக 4 போட்டிகளில்தான் அப்ரிடி விளையாடி இருந்தாலும் அதில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிகபட்சமாக ஒரு போட்டியில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து அப்ரிடி பந்துவீசும்போது, ரோஹித் சர்மா, விராட் கோலி இருவருமே அதை சமாளிக்க திணறுவார்கள்.
அதிலும் ரோஹித் சர்மா கால்காப்பில் வாங்காமல் தப்பிக்க வேண்டும், விராட் கோலி ஆப்சைடில் விலகிச் செல்லும் பந்தை தொடாமல் தவிர்க்க வேண்டும். ஆனால், கோலிக்கு பாடிலைனில் அப்ரிடி பந்துவீசினால் நிச்சயம் கோலியின் விக்கெட்டை அவர் எடுக்க வாய்ப்புள்ளது.
அப்பிரிடியின் ஸ்விங் பந்துவீச்சு, துல்லியம், லைன் அன்ட் லென்த் மற்றும் யாக்கர் பந்துகள் இந்திய அணிக்கு சவாலாக அமையும்.

பட மூலாதாரம், Getty Images
ஹாரிஸ் ராப்
பாகிஸ்தான் அணியின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராப் ஆவார். உலகின் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராப்பும் ஒருவர்.
லைன் அன்ட் லென்த்தில் ராப் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் என்றாலும் அதிகமாக ரன்களையும் அவர் வழங்கக்கூடியவர். ஒரு ஓவருக்கு 6 ரன்கள் சராசரியை அவர் வைத்துள்ளார்.
ஹாரிஸின் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும், இன்கட்டர்கள், அவுட்ஸ்விங் நன்றாக வீசுவார் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்.
இந்திய அணிக்கு எதிராக ஹாரிஸ் ராப் 3 போட்டிகள் விளையாடியுள்ளார். அதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2023 உலகக் கோப்பைத் தொடருக்காக அவர் இந்தியா வந்திருந்தபோது, 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் தொடக்கத்திலும், டெத் ஓவரிலும் ஹாரிஸ் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றும்.

பட மூலாதாரம், Getty Images
இமாம் உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் ஃபக்கர் ஜமான் காயத்தால் தொடரிலிருந்து விலகவே அவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இமாம் உல் ஹக் ஒரு சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இந்திய அணிக்கு எதிராக 6 போட்டிகளில் இமாம் உல் ஹக் விளையாடினாலும், அவற்றில் அவர் 64 ரன்களையே குவித்துள்ளார்.
2023 உலகக் கோப்பைத் தொடருக்காக இந்தியா வந்திருந்த இமாம் உல் ஹக் 160 ரன்கள் சேர்த்தார். தற்போது பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் பாபர் அசாமுடன் சௌத் ஷகீல் விளையாடி வருகிறார். இந்த போட்டியில் இமாம் உல் ஹக் டாப் ஆர்டரில் விளையாடலாம். பாபர் ஆசம், இமாம் உல் ஹக் கூட்டணி இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

பட மூலாதாரம், Getty Images
பாபர் ஆசம்
பாபர் ஆசம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிக அனுபவம் கொண்ட கிரிக்கெட் வீரர் ஆவார். பாபர் ஆசம் 127 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விராட் கோலி என்று பாபர் ஆசம் ரசிகர்களால் புகழப்படுகிறார். கடந்த சில மாதங்களாக பாபர் ஆசம் ஃபார்மில் இல்லாததது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்கூட பாபர் ஆசம் மிகவும் மந்தமாக பேட்செய்துதான் அரைசதம் அடித்தார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் பாபர் ஆசம் 218 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதமும் அடங்கும்.
2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்திருந்தபோது 320 ரன்களை பாபர் ஆசம் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். தொடக்க வரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அர்ஷ்தீப், ராணாவுக்கு பெரியதலைவலியாக பாபர் ஆசம் இருப்பார்.
அதேசமயம் பாபர் அசாமுக்கு இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை பெரிதாக விளையாடத் தெரியாது. ஆதலால், அவர் களத்தில் இருக்கும்போது, பவர்ப்ளே ஓவருக்குள் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி கொண்டு வரலாம்.

பட மூலாதாரம், Getty Images
முகமது ரிஸ்வான்
இந்திய அணி 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் தோற்க முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது ரிஸ்வான். அவர் மெதுவாக ஆடத்தொடங்கி, களத்தில் நங்கூரம் அமைப்பவர். பாபர் ஆசம் அளவுக்கு ஓரளவு அனுபவம் வாய்ந்த வீரர் முகமது ரிஸ்வான். இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகளில் ஆடிய ரிஸ்வான் அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்தியாவில் நடந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் ரிஸ்வான் 9 போட்டிகளில் 395 ரன்கள் குவித்து 65 ரன்கள் சராசரி வைத்திருந்தார்.
ஒன்டவுனில் களமிறங்கும் ரிஸ்வான் இந்திய பந்துவீச்சளாளர்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார். இவரை தொடக்கத்திலேயே அவுட் செய்தால், இந்திய அணி நினைத்த விஷயங்களை சாதிக்கலாம்.
இது தவிர சௌத் சகீல், சல்மான் அகா, குஷ்தில் ஷா ஆகிய மூவருமே கவனிக்கப்பட வேண்டிய பேட்டர்கள்தான். இந்த 3 பேட்ஸ்மேன்களும் 25 ஒருநாள் போட்டிகளில் கூட ஆடாத இளம்வீரர்கள்தான்.
ஆனால், போட்டியை எந்த நேரத்திலும் தங்களின் அதிரடி ஆட்டத்தால் மாற்றக்கூடியவர்கள். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் குஷ்தில் ஷா அதிரடியாக சதம் அடித்து அணியை காப்பாற்றினார். இதேபோல 3 பேட்ஸ்மேன்களுமே எந்த நேரத்திலும் பற்றிக்கொள்ளும் வகையில் நெருப்புடன் இருப்பவர்கள்.
இந்திய அணியின் துருப்புச் சீட்டு யார்?
முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான 228 ரன்கள் எனும் இலக்கை 46வது ஓவரில்தான் இந்திய அணி சேஸ் செய்தது.
இந்திய அணியின் ஆமை வேக ஆட்டம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நாளை பாகிஸ்தானை துபையில் இந்திய அணி எதிர்கொள்ளயிருக்கிறது.
துபை கிரிக்கெட் மைதானமானது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியைப் பொருத்தவரை ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோருடன் வருண் சக்கரவர்த்தி அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் 5 பேர் இருப்பதால் ஒரு வேரியேஷனுக்காக வலதுகை சுழற்பந்துவீச்சாளர் தேவை இருக்கும். அதனால் வருண் அல்லது வாஷிங்டனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இடதுகை சுழற்பந்துவீச்சை ஆடி அனுபவப்படவில்லை என்பதால், ஜடேஜா, அக்ஸர் பந்துவீச்சு முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும்.
பாகிஸ்தான் அணிக்கு எந்த அளவு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்களோ அதே அளவு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களுக்கு இருப்பார்கள்.
குறிப்பாக பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அப்ரிடி, ஹாரிஸ் ராப், நசீம் சா ஆகியோரும், பேட்டிங்கில் பாபர் ஆசம், ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோரும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும். இளம் வீரர்கள் சௌத் சகீல், குஷ்தில் ஷா ஆகியோரும் இந்திய அணிக்கு சவாலாக இருப்பர்.
இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் லெக் ஸ்பின்னுக்கு திணறுவார்கள் என பாகி்ஸ்தானுக்கு நன்கு தெரியும். ஆனால், தெரிந்துகொண்டே லெக் ஸ்பின்னர்களுக்கு மட்டுமல்ல சுழற்பந்துவீச்சாளர்களுக்கே முக்கியத்துவம் அளிக்காமல் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரோடு களமிறங்குகிறது. மற்றவகையில் சல்மான் அகா, குஷ்தில் ஷா ஆகிய பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை
எட்டு வருடங்களுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தானில்தான் இந்த தொடரின் பெரும்பகுதி நடந்து வருகின்றது, ஆனால் இந்திய அணி விளையாடும் லீக் போட்டிகளும், ஒரு அரையிறுதிப் போட்டியும், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றால் அந்த போட்டி மட்டும் துபையில் நடைபெறும்.
இந்த தொடரில் 8 அணிகள், 'A' மற்றும் 'B' என இரண்டு குழுக்களில் போட்டியிடுகின்றன.
குழு A: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குழு B: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான்
சாம்பியன்ஸ் டிராபியில் இனிவரும் போட்டிகளுக்கான முழு அட்டவணை இங்கே. (அனைத்து போட்டிகளும் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்)
- பிப்ரவரி 23 - பாகிஸ்தான் v இந்தியா, துபை
- பிப்ரவரி 24 - வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி
- பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா v தென்னாப்பிரிக்கா, ராவல்பிண்டி
- பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர்
- பிப்ரவரி 27 - பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி
- பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர்
- மார்ச் 1 - தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி
- மார்ச் 2 - நியூசிலாந்து v இந்தியா, துபை
இந்த லீக் ஆட்டங்கள் முடிந்த பிறகு ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி
- அரையிறுதிப் போட்டி 1 – மார்ச் 4, துபையில் நடைபெறும்
- அரையிறுதிப் போட்டி 2 – மார்ச் 5, லாகூரில் நடைபெறும்
- இறுதிப் போட்டி – மார்ச் 9, லாகூரில் நடைபெறும் (இந்திய அணி தகுதிபெற்றால், இது துபையில் நடைபெறும்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












