ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன?

கடம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மலையாளி இனத்தவர்

பட மூலாதாரம், Special Arrangement

    • எழுதியவர், நித்யா பாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் மொத்தம் 37 சமூகங்கள் பழங்குடி இனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தருமபுரி, வட ஆற்காடு (திருவண்ணாமலை மற்றும் வேலூர்), தென்னாற்காடு (கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம்), புதுக்கோட்டை, சேலம், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

இந்த சமூகத்தினர் இப்பகுதிகளில் மட்டுமின்றி ஈரோட்டிலும் வசித்து வருகின்றனர். ஆனால் ஈரோடு தவிர, மேற்குறிப்பிட்டுள்ள இன்ன பிற பகுதிகளில் வசிக்கும் மலையாளிகளுக்கு மட்டுமே பழங்குடியின அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈரோடு மாவட்டம் அந்தியூர், சத்தியமங்கலம் வட்டங்களில் அமைந்துள்ள பர்கூர் மற்றும் கடம்பூர் மலைப் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மலையாளி இனத்தவர் வசித்து வருகின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரி இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைத்தார்.

ஈரோடு மலையாளி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபடக் காரணம் என்ன? ஏன் ஈரோடு பகுதியில் வசிக்கும் மலையாளிகளுக்கு மட்டும் பழங்குடியின அங்கீகாரம் வழங்கப்படவில்லை? இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

"ஈரோடு மாவட்ட மலையாளி மக்கள் 'இதரர்' பிரிவில் உள்ளதால் இந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியுள்ளனர். பழங்குடியினருக்கான சலுகைகள் எதையும் பெற அவர்களால் இயலவில்லை," என்று கூறி ஈரோட்டில் வாழும் மலையாளிகள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஒரு முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.

அந்த முன்மொழிவைப் பெற்று, அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஏற்படும் பாதிப்புகள் என்ன?

மலையாளி, பழங்குடியினர் அந்தஸ்த்து, தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினர்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் வாழும் மலையாளிகளுக்கு மட்டுமே பழங்குடி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது

பழங்குடியின அங்கீகாரம் இல்லாத காரணத்தால் தவிக்கும் மக்களின் நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்குடிகள் நலனுக்கான பிரிவான தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். மோகன்குமார் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

"மலைவாழ் மக்களான மலையாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பழங்குடியினர் அங்கீகாரம் இல்லாத காரணத்தால் பறிபோகின்றன. மற்ற பகுதியில் வாழும் இதே இனத்தவர்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு இது மறுக்கப்பட்டு வருகிறது.

பர்கூர், கடம்பூர் மலைகளில் வாழும் மாணவர்கள் பலரும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் சமவெளிக்குத்தான் செல்ல வேண்டும். அப்படியான சூழலில் பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் அரசு விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதிகமாகச் செலவு செய்து மாணவர்களைப் படிக்க வைக்கும் பொருளாதாரச் சூழல் இந்த மக்களிடம் இல்லை," என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பழங்குடியினமாக மலையாளிகள் இருந்தாலும், இந்தப் பகுதியில் இருந்து ஒருவரோ, இரண்டு பேரோதான் இத்தனை ஆண்டுகளில் அரசுப் பணிகளுக்குச் சென்றிருப்பார்கள் அதுவும் 'இதரர்' பிரிவில்தான் என்றும் குறிப்பிட்டார்.

அதோடு, "மாநில அரசு தொடர்ச்சியாக இதுகுறித்து மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறது. இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரத் தேவையான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்," என்று தெரிவித்தார் மோகன்குமார்.

இந்தச் சூழலில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டிசம்பர் 16ஆம் தேதியன்று டெல்லியில் பழங்குடிகள் விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரமை சந்தித்து, ஈரோடு மாவட்ட மலையாளி இனத்தவருக்கு பழங்குடியின அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஈரோடு வாழ் மலையாளி இனத்தவர்களுக்கு ஏன் இந்த சிக்கல்?

மலையாளி, பழங்குடியினர் அந்தஸ்த்து, தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினர்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, டிசம்பர் 16ஆம் தேதியன்று டெல்லியில் பழங்குடிகள் விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரமை சந்தித்துப் பேசிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன்

கடந்த 2006ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளிகளை பட்டியல் பழங்குடிகளாக அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் 2007ஆம் ஆண்டில், கீழ் வரும் அம்சங்களை மேற்கோள்காட்டி மலையாளி பழங்குடியின மக்களுக்கு மாற்றுப் பெயரை பரிந்துரை செய்யுமாறு அறிவுறுத்தியது.

  • கோயம்புத்தூரில் வாழும் மலையாளிகளுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டுமென்று 1970களின் முதற்பாதியில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. (1979ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது) அப்போது, ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 'மலையாளி' என்ற பெயரில் இரண்டு இனங்கள் வாழ்வதால், இந்தப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றுப் பெயரை பரிந்துரை செய்ய தலைமைப் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டது.
  • மலையாளி பழங்குடிகள் தங்களை காராளர் அல்லது காராள கவுண்டர் என்று அழைக்க விரும்புகின்றனர். அவர்களைச் சுற்றி வசிக்கும் மக்கள் அவர்களை மலையாளி கவுண்டர் என்றும் அழைக்கின்றனர். ஆகையால் இவற்றில் ஏதோவொரு பெயரை தங்களுக்கு வைக்குமாறு மலையாளி பழங்குடிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
  • கடந்த 1967ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டி அளித்த பரிந்துரையில் மலையாளிகளை 'மலையாளி கவுண்டர்கள்' என்று அழைப்பதோடு, ஈரோட்டில் வசிக்கும் இந்தச் சமூக மக்களை பட்டியல் பழங்குடிகளாக வகைப்படுத்துவதில் இருக்கும் தடைக்கும் முடிவு வழங்குமாறு கூறியிருந்தது. 1967ஆம் ஆண்டு மத்திய கூட்டுக்குழு மலையாளி சமூகத்தை மலைக்காரன் என்று வழங்குமாறு அறிவுறுத்துகிறது.
  • திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் வாழும் மலையாளி பழங்குடிகள், காராள கவுண்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் என்று மாநில அரசு நடத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதை அடிப்படையாக வைத்து, "காராளர், காராளர் கவுண்டர், மலையாளி கவுண்டர் என்று ஏதேனும் ஒரு பெயரை 'மலையாளி'க்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். மேலும் இந்தத் திருத்தத்தை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் ஏற்படுத்தினால், ஈரோடு பகுதிக்கு இருக்கும் தடையும் நீக்கப்படும்" என்று இந்திய பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கொடுக்கப்பட்டது.

தமிழக அரசு அளித்த பதில் என்ன?

மலையாளி, பழங்குடியினர் அந்தஸ்த்து, தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினர்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, காராளர், காராளர் கவுண்டர், மலையாளி கவுண்டர் என்று ஏதேனும் ஒரு பெயரை 'மலையாளி'க்கு மாற்றாக பயன்படுத்த பரிந்துரை செய்தது தலைமைப் பதிவாளர் அலுவலகம்

பதிவாளர் அலுவலகத்தின் பரிந்துரைப்படி, 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மலையாளி (Malaiali) அல்லது மலையாளி கவுண்டர் என்ற பதத்தை ஒட்டுமொத்த மலையாள பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. இறுதியாக மலையாளி கவுண்டர் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்று முடிவானது.

ஆனால் அதே ஆண்டு, நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கவுண்டர் என்ற பெயர், இங்கு பிற்படுத்தப்பட்ட (வேளாள கவுண்டர்) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (வன்னிய கவுண்டர்) சமூகத்தினரால் பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால், மலையாளி கவுண்டர் என்ற பெயர், தேவையற்ற பிரச்னைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றும், இது மலையாளி பழங்குடியினர் இட ஒதுக்கீடு அம்சங்களைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து பெயர் மாற்றத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பெயர் பயன்பாட்டிற்குச் சரியான விளக்கத்தை வழங்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி பழங்குடி ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வழங்கியது.

பழங்குடி ஆராய்ச்சி மைய அறிக்கை கூறுவது என்ன?

நீலகிரியில் இயங்கி வரும் பழங்குடிகள் ஆராய்ச்சி மையம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தின் கடம்பூர் மலை மற்றும் அந்தியூர் வட்டத்தின் பர்கூர் மலைப் பகுதிகளில் வாழும் மலையாளிகளை இந்தப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தேவையான வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பித்தது. அதில் கீழ்காணும் ஆவணங்கள் இடம்பெற்றிருந்தன.

  • திருத்தப்பட்ட கோவை கையேடு (Manual of Coimbatore), தொகுதி இரண்டு, பக்கம் 19இல் 'மலையாளன்' சமூகம் பற்றிய குறிப்புகள்
  • தென்னிந்தியாவில் உள்ள சமூகங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பற்றி விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டனின் தென்னிந்திய குலங்களும் குடிகளும் புத்தகத்தின் நான்காம் தொகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழும் 'மலை வேளாளர்களின்' வாழ்வியல் குறித்த தகவல்கள்
  • கடந்த 1918ஆம் ஆண்டு வெளியான சேலம் மாவட்ட அரசிதழில், அன்றைய மாவட்ட ஆட்சியாளராகச் செயல்பட்டு வந்த எஃப்.ஜி. ரிச்சர்ட்ஸ் மலையாளிகள் குறித்த விரிவான தகவல்களை வழங்கியுள்ளார். அதன்படி மலையாளிகள், பெரிய மலையாளி, பச்சை மலையாளி, கொல்லி மலையாளி என மூன்று வகையினராகவும், அதில் கொல்லி மலையாளி இனத்தவர்கள் பவானி வட்டத்தில் உள்ள பாலமலை, பர்கூர் மலை மற்றும் காளிமலை பகுதிகளில் வசித்து வந்ததது தொடர்பாகவும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

மலையாள மொழி பேசுவோரும் மலையாளிகளும்

மலையாளி, பழங்குடியினர் அந்தஸ்த்து, தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினர்

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, ஈரோட்டில் அமைந்துள்ள மலையாளி இனத்தினர் குடியிருப்பு

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதியன்று அரசு செயலாளராகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமி பிரியா, மத்திய பழங்குடி நலத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில், "கேரளாவில் மலையாளி என்ற பழங்குடி சமூகம் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெறவில்லை. அதே கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் தாய்மொழி மலையாளம் என்பதால் அவர்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலையாளிகள் தனி ஒரு சாதியினராகவோ, பழங்குடியினராகவோ வகைமைப்படுத்தப்படவில்லை. மாறாக மலையாள மொழி பேசுபவர்களே மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மலையாளி பழங்குடியினர் தனித்த பழங்குடியினப் பண்புகளையும் கூறுகளையும் கொண்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

"கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களைப் பொதுவில் மலையாளிகள் என்று அழைக்கின்றோம். இதற்கும் மலையாளி பழங்குடியினருக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. மானுடவியல் ரீதியாக இரு தரப்பையும் பிரித்துவிட இயலும். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மலையாள மொழி பேசும் மக்கள் தங்களை தமிழகத்தில் மலையாளி பழங்குடியினர் என்று உரிமை கோர இயலாது.

மேலும் தமிழக மலையாளி பழங்குடிகள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மலையாளம் பேசும் மக்களில் 96.4% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இந்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு பகுதியில் வாழும் மலையாளி இனத்தவரை பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். அதற்காக இந்திய அரசியலமைப்பு பிரிவுகள் 431(2) மற்றும் 343(2)-இல் திருத்தம் கொண்டு வர வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

மலையாளி, பழங்குடியினர் அந்தஸ்த்து, தமிழ்நாடு அரசு, பட்டியல் பழங்குடியினர்

பட மூலாதாரம், tribal.nic.in

படக்குறிப்பு, ஈரோடு பகுதியில் வாழும் மலையாளி இனத்தவரை பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமி பிரியா தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டார். (சித்தரிப்புப் படம்)

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவர் முனைவர் தாமோதரன் இதுகுறித்துக் குறிப்பிடும்போது, "தமிழ்நாட்டில் தொதவர் பழங்குடியினர் எங்கு வாழ்ந்தாலும், அவர்களின் பண்பாடுகளும், கலாசாரக் கூறுகளும் ஒன்று போல் இருப்பது போன்றே, ஏற்கெனவே மலையாளி பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் மக்களின் கலாசாரம், தொன்மை, பண்பாட்டுக் கூறுகளை ஈரோட்டில் வழங்கும் மலையாளி இனத்தவர்களும் கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்களை பட்டியலில் இணைப்பது எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது," என்று தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய கலாசார மானுடவியலாளரும், இந்திய மானுடவியல் ஆய்வுப் பிரிவின் முன்னாள் கூடுதல் இயக்குநருமான முனைவர் சி.ஆர். சத்யநாராயணன், "தமிழ்நாடு அரசு தமிழக பழங்குடியினர் பட்டியலில் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களில் இருக்கும் பழங்குடியினப் பெயர்களை நீக்கி, தகுதி வாய்ந்த ஈரோடு மலையாளி போன்ற இனக் குழுக்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்," என்று கூறினார்.

"பழங்குடியின மக்கள், தொழில், கல்வி போன்ற காரணங்களுக்காகப் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மலைக் கிராமங்களில் அல்லது ஒரே இடத்தில் வாழும் பழங்குடிகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம்.

அவர்கள் எங்கு பணிக்குச் சென்றாலும் அவர்களின் மூதாதையர்களின் பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் ஒரு கிராமம் அல்லது ஒரு பகுதியைக் குறித்ததாக இருக்கும். அதனால் இடம் சார்ந்து, அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கான பழங்குடியினச் சான்றுகளை வழங்க வேண்டும். இது தேவையற்ற உரிமை கோரல்களைக் குறைக்கும்," என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், "தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் கொண்டு வருவதோடு, குழப்பங்களை ஏற்படுத்தும் பெயர்களிலும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சமூகத்தினர் எங்கெல்லாம் வசிக்கின்றனர் என்பதைக் கள ஆய்வு மூலம் உறுதிப்படுத்தினால் இது பலருக்கும் உதவிகரமாக இருக்கும்," என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)