கமலா ஹாரிசுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் 3 அஸ்திரங்கள்

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆண்டனி ஸர்ச்சர்
    • பதவி, வட அமெரிக்கா செய்தியாளர்

அமெரிக்காவில் தற்போதைய நிலையில், கமலா ஹாரிஸின் அரசியல் பயணம் பெரிய அளவில் சிக்கல்கள் இன்றி தொடர்கிறது. ஆனால், இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது.

டொனால்ட் டிரம்ப் சார்பில் கருத்துக் கணிப்பை நடத்தும் (pollster) டோனி ஃபப்ரிஸியா, அதிக ஊடக கவனம் மற்றும் நேர்மறையான சூழல்கள் காரணமாக ஆதரவு அதிகரித்திருப்பதால், தற்போதைய சூழல் ‘ஹாரிஸின் தேனிலவு’ (Harris’s honeymoon) காலம் என குறிப்பிட்டுள்ளார்.

தேனிலவு என்றால் அது முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும். திருமண வாழ்க்கையோ அல்லது கமலா ஹாரிஸ் - அமெரிக்க வாக்காளர்கள் இடையேயான உறவோ முழுமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வரும் என்பதுதான் யதார்த்தம்.

கமலா ஹாரிஸ் குழுவினரும் ஜனநாயக கட்சியினரும் தற்போது நம்பிக்கை எனும் பரிச்சயமில்லாத உணர்வை அனுபவிக்கலாம். ஆனால், பைடனின் எதிர்பாராத அறிவிப்பால் அமைதியாக இருந்த குடியரசு கட்சியினர், தற்போது கமலா ஹாரிஸ் மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

கமலா ஹாரிஸ் மீதான குடியரசு கட்சியினரின் சமீபத்திய தாக்குதல்கள் குறித்தும் அவற்றை ஜனநாயக கட்சியினர் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதையும் இங்கு காண்போம்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1. ‘தீவிரப்போக்கு’ கொண்ட இடதுசாரி

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019-ல் வேட்பாளர் தேர்வுக்கான விவாதத்தில் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் பைடனுடன் கமலா ஹாரிஸ்.

2020 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவதற்காக கமலா ஹாரிஸ் மேற்கொண்ட முயற்சிகளின் போது ஏற்பட்ட சிரமங்கள் பரவலாக அறியப்பட்டவை. அதில், நேர்காணல்களில் தடுமாற்றம், உள்கட்சி முரண்பாடு, தெளிவான கருத்துகள் இல்லாமை போன்றவையும் அடங்கும்.

ஆனால், இந்த முயற்சியில் வேறு ஒன்றும் நடந்தது. அந்த போட்டியில் இருந்த பல வேட்பாளர்களை போலவே, ஜனநாயக கட்சி வாக்காளர்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் இடதுசாரி நிலைப்பாட்டில் இணைந்துகொண்டார்.

“செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர்களுக்கு அதிக அழுத்தம் இருந்தது,” எனக்கூறும் தர்ட் வே (Third Way) எனும் மையவாத ஜனநாயக சிந்தனை மையத்தின் பொது விவகாரங்களுக்கான துணை செயல் தலைவர் மட் பென்னெட், “கட்சியின் வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் போது, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உங்களின் முன்னுரிமைகள் மிக வித்தியாசமாக இருக்கும்.” என்று கூறுகிறார்.

அரசால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்வதை 2019-ஆம் ஆண்டு முழுவதும் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களின் வாயிலாக கமலா ஹாரிஸ் ஆதரித்து வந்தார். சட்ட அமலாக்கத்திற்கான நிதியை கவனம் செலுத்த வேண்டிய மற்ற துறைகளுக்கு மடைமாற்றம் செய்வது உட்பட காவல்துறையில் சீர்திருத்தங்களை அவர் பாராட்டினார். ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைவதை குற்றமற்றதாக ஆக்குவதையும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமையை (Ice) ஒழிப்பதையும் அவர் ஆதரித்தார்.

புதிய பசுமை ஒப்பந்தத்தின் சுற்றுச்சூழல் சட்டத்தை அவர் ஆதரித்தார். கடற்படுகையில் எரிவாயுவுக்காக துளையிடுதல் மற்றும் ஃபிராக்கிங் (பெருமளவில் நீருடன், மணல் மற்றும் சில வேதிபொருட்களை கலந்து பூமிக்கு அடியில் செலுத்தி, நிலத்தடியில் பாறைகளுக்கு இடையே உள்ள எரிவாயுவை வெளியே கொண்டு வரும் செயல்முறை) ஆகியவற்றுக்கு தடை விதிப்பதை அவர் ஆதரித்தார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலைப்பாடுகள் அவரை இப்போது தொந்தரவு செய்யலாம்.

பென்சில்வேனியாவில் குடியரசு கட்சியின் செனட் வேட்பாளரான டேவிட் மெக்கார்மிக், 2019-ல் ஹாரிஸ் எடுத்த நிலைப்பாடுகளுக்காக அவரை தாக்கி தொலைக்காட்சியில் விளம்பரம் ஒன்றை கொடுத்தார். அவற்றை ஜனநாயக கட்சியின் செனட்டர் பாப் கேசியுடன் அவர் தொடர்புபடுத்தினார். அச்சமயத்தில் கமலா ஹாரிஸ் ஆதரித்த பல கொள்கைகள் குறித்து “மீட் சான் ஃபிரான்சிஸ்கோ ரேடிக்கல் கமலா ஹாரிஸ்” (சான் பிரான்சிஸ்கோவின் தீவிர போக்கு கொண்ட கமலா ஹாரிஸை பாருங்கள்) என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார்.

துணை அதிபரை எப்படி தாக்குவது என்பதற்கான “ப்ளூபிரிண்ட் (கையேடு) இது” என பழமைவாத வர்ணனையாளர் மட் வால்ஷ் தெரிவித்தார்.

“சிறந்த தலைவர்கள் கொள்கைகளில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றலாம், ஆனால் கொள்கைகளை மாற்ற மாட்டார்கள் என அவர் (கமலா ஹாரிஸ்) நியாயமான முறையில் வாதிடலாம்,” என்கிறார் ஜனநாயக கட்சியின் வியூக வகுப்பாளர் பென்னெட். “அவருடைய கொள்கைகள் எதுவும் மாறவில்லை.”

இதனை அவர் தெளிவாக கையாளவில்லை என்றால், வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் சுயேச்சை மற்றும் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவெடுக்காத வாக்காளர்களின் ஆதரவை கமலா ஹாரிஸ் இழக்கலாம்.

2. பைடன் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்துதல்

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பைடனின் பதவிக்காலத்தில் உச்சத்திற்கு சென்ற புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையும் தடுப்புக் காவல்களும் பின்னர் குறைந்தன.

பைடனின் பிரசாரம் பல மாதங்களாக சரிவை சந்தித்து வந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. குடிவரவு தொடர்பான அவருடைய கொள்கைகள் சர்ச்சைக்குரியதாக உள்ளன. பணவீக்கம் தளர்ந்து, பொருளாதாரம் ஏற்றம் காணும் நிலையிலும் விலை உயர்வுக்கு வாக்காளர்கள் பைடனை குற்றம்சாட்டுகின்றனர். காஸா போரில் இஸ்ரேலுக்கு பைடன் ஆதரவு வழங்கி வருவது, இளம் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவை குறைக்கிறது.

துணை அதிபராக அரசின் தற்போதைய நிர்வாக முடிவுகள் கமலா ஹாரிஸுடன் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தொடர்புபடுத்தப்படும்.

எல்லை தொடர்பான விஷயங்களில் அரசாங்கத்திற்கு கமலா ஹாரிஸ் ஆலோசனை வழங்குவதாக பொருள்படும் ‘பார்டர் ஸார் (border czar) எனும் வார்த்தையை குறிப்பிட்டு ஏற்கனவே குடியரசு கட்சியினர் கமலா ஹாரிஸுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இது ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் இழிவான, ஊறு விளைவிக்கும் வார்த்தையாகும். “எல்லை பாதுகாப்பாக இருப்பதாக” 2022 ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் ஹாரிஸ் கூறியதையும் இதுதொடர்பாக அவர் முன்பு பேசியதையும் குடியரசு கட்சியினர் மேற்கோள் காட்டுகின்றனர்.

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், Reuters

“தோல்வியுற்ற மற்றும் பலராலும் விரும்பப்படாத துணை அதிபராகவும், தன்னால் அதிபர் வேட்பாளராக முடியாமல் தன்னுடைய முதலாளியின் (பைடன்) முதுகில் குத்தி அதை பெற்றதாகவும் தற்போது கமலா ஹாரிஸ் அறியப்படுகிறார். ஆனால், இன்னும் வாக்காளர்கள் அவர் குறித்து தெரிந்து கொள்ளும் போது அவரது நிலைமை இன்னும் மோசமாகும்,” என்று டிரம்ப் பிரசாரத்துடன் இணைந்த அரசியல் செயல்திட்ட குழுவை நடத்தும் டேய்லர் பூடோவிச் கூறுகிறார். துணை அதிபரை குறிவைத்து 32 மில்லியன் டாலர் செலவில் தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்யப்படவுள்ளதாக அவர் கூறுகிறார்.

பைடனின் நடவடிக்கைகளிலிருந்து கமலா ஹாரிஸால் முற்றிலும் விலக்கிக் கொள்ள முடியாது என்றாலும் குடியரசு கட்சியின் விமர்சனத்தைத் தாண்டி இதை புதிய வழியில் வாக்காளர்களிடம் அவரால் விளக்க முடியும் என்று பென்னெட் கூறுகிறார்.

"எதிர்காலத்தைப் பற்றி 81 வயதான ஒருவர் (பைடன்) மிகவும் சவாலாகக் கருதும் விதத்தில், இதைச் செய்யும் திறன் ஹாரிஸிடம் உள்ளது" என்கிறார் அவர். “டிரம்ப் கடந்த காலங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக கமலா ஹாரிஸ் வாதிக்கலாம்.” என்பது அவரது கூற்று.

3. வழக்கறிஞராக ஹாரிஸின் நிலைப்பாடு மீது விமர்சனம்

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், EPA

அதிபர் வேட்பாளராக நடைபெற்ற முதல் பிரசார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அரசு வழக்கறிஞர் மற்றும் கலிபோர்னியாவின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றும் போது, தான் “அனைத்து விதமான குற்றவாளிகளையும் எதிர்கொண்டிருப்பதாக” கமலா ஹாரிஸ் கூறினார்.

“டொனால்ட் டிரம்ப் போன்றவர்களையும் நான் அறிவேன்” என அவர் தன் பிரசாரத்தை முடித்தார்.

ஜனநாயக பிரசார ஆலோசகர் மற்றும் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் துணை பயிற்றுவிப்பாளரான கிரெய்க் வரோகா, சட்ட அமலாக்கத்தில் கமலா ஹாரிஸின் அனுபவங்கள்தான் அவருடைய “சூப்பர் பவர்” என குறிப்பிடுகிறார். இந்த பலத்தை அவர் முன்பு 2019 பிரசாரத்தில் காவல்துறை சீர்திருத்தம் முக்கிய பிரச்னையாக இருந் தபோது, அவர் இந்த அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை.

ஆனால், டிரம்ப் பிரசார குழு இதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தென்பட தொடங்கியுள்ளன. டிரம்பின் பிரசார மேலாளர் கிரிஸ் லாசிவிட்டா, ஜனநாயக கட்சி வேட்பாளரின் சூப்பர் பவரை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவதன் வாயிலாக குடியரசு கட்சியில் தனக்கான நம்பகத்தன்மையை பெற்றவர்.

2004-ல் ஜனநாயக வேட்பாளர் ஜான் கெர்ரி, வியட்நாம் போர் அனுபவங்களை பயன்படுத்தி, இராக் போரின் போது நாட்டை தன்னால் திறமையாக வழிநடத்த முடியும் என்று வலியுறுத்திக் கூறினார். ஆனால் கெர்ரியின் தைரியம் மற்றும் தேசப்பற்றை சந்தேகிக்கும் வகையில் விமர்சித்து லாசிவிட்டா விளம்பரங்களை வெளியிட்டார். வியட்நாமில் உள்ள ஆறுகள் மற்றும் கரையோரங்களில் ரோந்து செல்லும் கடற்படை படகில் கெர்ரியுடன் பணியாற்றிய மாலுமிகள் இடம்பெற்றிருந்ததை அவர் மீதான தாக்குதல்களுக்கு லாசிவிட்டா பயன்படுத்தினார்.

இப்படி ஒருவரின் பலத்தை வைத்தே அவருக்கு எதிராக பயன்படுத்தி அவரை வலுவிழக்க செய்வதற்கு “ஸ்விஃப்ட்-போட்டிங்” என்ற பெயர் பிரபலமானது.

வழக்கறிஞராக துணை அதிபரின் செயல்களையும் விமர்சிக்க டிரம்ப்பின் பிரசார குழு தயாராகி வருகிறது.

அவருடைய ஆதரவு தளத்தை குறைக்கும் முயற்சியாக, கமலா போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் கருப்பினத்தவர்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதாக டிரம்ப் கட்சியினர் விமர்சிக்கின்றனர். மறுபுறம், கமலா ஹாரிஸ் மீண்டும் மீண்டும் குற்றங்களை புரிபவர்களுக்கு பரோல் வழங்குவதாகவும் அவர்கள் மீது வழக்கு தொடர மறுத்ததாகவும் சில சம்பவங்களை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

2004-ம் ஆண்டு ஜான் கெர்ரிக்கு எதிரான விமர்சனங்களை ஜனநாயக கட்சி தவறாக கையாண்டதாக ஒப்புக்கொண்ட வரோகா, அதிலிருந்து தாங்கள் பாடம் கற்றதாகவும் தாக்குதல்களுக்கு கமலா ஹாரிஸ் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஜனநாயக கட்சி முழுமையையும் லாசிவிட்டா மீண்டும் முட்டாளாக்க நினைத்தால், அவர் அதே மாயையிலேயே இருந்து தோல்வியை சந்திப்பார்,” என தெரிவித்தார்.

கமலா ஹாரிஸ் யார் என்பதை வரையறுப்பதில் நிலவும் போட்டி

கமலா ஹாரிஸின் கனவை தகர்க்க டிரம்ப் கையாளும் மூன்று வழிகள்

பட மூலாதாரம், Reuters

“தான் யார் என்பதையோ அல்லது தான் என்ன செய்தேன் என்பதையோ கமலா ஹாரிஸால் மாற்ற முடியாது” என கூறுகிறார் ஃபப்ரிஸியா. வாக்காளர்கள் விரைவில் கமலா ஹாரிஸை “பைடனின் கூட்டாளி”யாக பார்ப்பார்கள் என்றும் அவருடைய “ஆபத்தான தாராளவாத முடிவுகள்” குறித்தும் அவர்கள் அறிவார்கள் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

பொதுவெளியில் டிரம்ப் கூறும் கருத்துகள் மற்றும் பிரசாரங்களில் அவருடைய விமர்சனங்களுடன், விரைவில் வெளியாகவுள்ள அதிகளவிலான விளம்பரங்கள் இதில் திருப்புமுனையாக அமையக் கூடும்.

வேட்பாளர் மற்றும் அவருடைய கொள்கைகள் குறித்து வாக்காளர்கள் அறியும் வண்ணம் கமலா ஹாரிஸ் மற்றும் அவருடைய பிரசார குழு பணியாற்றும்.

தன் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் தேர்வின் வாயிலாக கமலா ஹாரிஸ் இதனை சிறப்பாக செய்ய முடியும் என வரோகா கூறுகிறார்.

“இதுதான் அதிபர் வேட்பாளர் பொதுமக்களுக்கு புலப்படும் வகையில் மேற்கொள்ளும் முதல் முக்கியமான முடிவு,” என்கிறார் அவர். “என்ன மாதிரியான எதிர்காலத்தை அவர் தருவார் என்பதை மக்கள் புரிந்துகொள்வதில் இது முக்கிய பங்காற்றும்.”

மையவாத கொள்கை கொண்ட ஒருவரை அவர் தேர்ந்தெடுத்தால், கமலா ஹாரிஸ் குடியரசு கட்சியினர் சித்தரிப்பது போன்று இடதுசாரி வேட்பாளராக அல்லாமல் மையவாத நிலைப்பாட்டுடன் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவார் என வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள வழிவகுக்கலாம்.

கமலா ஹாரிஸின் வார்த்தைகள், கடந்த கால பிரசாரங்கள் வாயிலாக அவர் யார் என்பதை வரையறுப்பதற்காக வரும் வாரங்களில் நடக்கும் போராட்டம், வாக்காளர்கள் அவரை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும்.

அதுதான், ஜனநாயக கட்சியினரின் இதயத்தை நொறுக்குமா அல்லது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஆட்சியை வழங்குமா என்பதை வடிவமைக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)