உணவு: கொத்து பரோட்டாவிற்கு காப்புரிமை வாங்க இலங்கையில் பெருகும் ஆதரவு

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையிலுள்ள உணவகங்களில் பிரதான உணவாக விற்கப்படும் 'கொத்து' இன்று பேசு பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் கொத்து பரோட்டா என்று பரவலாக இந்த உணவு அறியப்படுகிறது.
இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் இந்த 'கொத்து' என்ற உணவிற்கு, சர்வதேச காப்புரிமை பெற வேண்டும் என அண்மையில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை அடுத்து, கொத்து தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
''நாங்கள் பீசா உணவகத்தில், பீசாவை கொள்வனவு செய்தாலும், அதன் காப்புரிமை இத்தாலி வசமே காணப்படுகின்றது. எனினும், எமது நாட்டில் எம்மால் உருவாக்கப்பட்ட பல்வேறு உணவுகள் காணப்படுகின்றன. அதில் கொத்து என்ற ஒன்றும் காணப்படுகின்றது. இது மிக முக்கியமான விடயமாகும். உலகிலுள்ள மக்கள் பீசா சாப்பிடுவதை போன்று, கொத்தும் அமையலாம். எமது நாட்டின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், இந்த உணவிற்கான காப்புரிமையை இதுவரை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை.''
''இன்று பல்வேறு விதமான கொத்துக்கள் காணப்படுகின்றன. பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. உலகிலுள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இது உள்ளது. இதற்கான காப்புரிமை இலங்கை வசம் கிடையாது. வேறு நாடு பெற்றுக்கொண்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. சர்வதேச ரீதியில் இதற்கான உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கொத்து, இன்று ஐஸ்கீரிம் கொத்து வரை முன்னேறியுள்ளது" என நாடாளுமன்ற உறுப்பினர் ஷரித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து உணவகங்களிலும் கொத்து பிரதான உணவாக காணப்படுகின்றது.
குறிப்பாக அதிகளவில் இரவு வேளைகளில், அதிகளவானோர் கொத்தை பிரதான உணவாக உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டி, அதில் மரக்கறி வகைகளை சேர்ந்து, இந்த கொத்து தயாரிக்கப்படுகின்றது.
இவ்வாறு தயாரிக்கப்படும் கொத்து தற்போது பல்வேறு பரிமாணங்களில் மாற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மரக்கறி கொத்து, முட்டை கொத்து, கோழி இறைச்சி கொத்து, மீன் கொத்து, பன்றி இறைச்சி கொத்து, சீஸ் கொத்து என பல்வேறு விதமான கொத்து வகைகளை இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் காணக்கூடியதாக உள்ளது.
உள்நாட்டவர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய ஓர் உணவாக இந்த கொத்து மாற்றம் பெற்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில் தயாரிக்கப்படும் கொத்து என்ற உணவை, இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவர்கள் உண்ணாமல் மீண்டும் நாடு திரும்ப மாட்டார்கள் என்பதே அவதானிக்கக்கூடிய ஒன்றாகும்.

உணவகத்திலுள்ள வியாபாரியான லோரிட்ஸ், கொத்து தொடர்பில் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.
கொத்து என்ற உணவு வகைக்கு இலங்கைக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்ததொரு விடயம் என உணவக வியாபாரியான லோரிட்ஸ் தெரிவிக்கின்றார்.
''எல்லா நாட்டிலயும், அவங்க அவங்க நாட்டுக்கு சொந்தமான உணவு ஒன்று இருக்குது. கொத்து என்கிறது எங்க நாட்டுக்கான உரிமையை பெறுவதா இருந்தால், அது உண்மையில் வரவேற்கத்தக்கது. நாம எல்லாம் பெருமை பட வேண்டும்" என அவர் கூறுகின்றார்.
நாட்டில் இன்று சமையல் எரிவாயு இல்லாதமையினால், உணவகங்கள் பாரிய இழப்பை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு இழப்பை எதிர்நோக்குவதற்கு பிரதான காரணம், கொத்து தயாரிக்க முடியாமையே எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
''இப்போ கேஸ் இல்ல. கேஸ் இல்லாதநால கொத்து ரொட்டி போட முடியல. பராட்டவும் போடல. பிரைட் ரையிஸ் மட்டும் தான் போடுறோம். கொத்து இல்லனு சொன்னா, எங்கள பிஸ்னஸ் என்லாம் நெரைய லொஸ்ட். கொத்துங்குறது இப்போ முக்கியமான சாப்பாடு. நைட் டைம்ல கொத்துலயே நல்ல வருமானத்தை தேடலாம்" என அவர் கூறுகின்றார்.
நாளாந்தம் கொத்தை உணவாக உட்கொள்ளும் கையடக்கத் தொலைபேசி வர்த்தக நிலையமொன்றை நடத்தும் முலிப், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

''கொத்து காப்புரிமை உணவாக எடுக்குறது வந்து சந்தோஷம்தான். ஏனா இலங்கைக்கு ஒரு காப்புரிமை உள்ள உணவு கிடைச்சா நாங்க அதுல பெருமைபடுறோம்" என கூறினார்.
கொத்து வெளிநாடுகளில் மாறுப்பட்ட பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், இலங்கையில் கொத்து என்ற உணவுக்கு கிடைத்துள்ள வரவேற்பானது, மிக அதிகம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பிரதான உணவாகவும் கொத்து தற்போது மாறியுள்ளது.
சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு வகையிலான கொத்தை காண முடிகின்றது.
இலங்கைக்கு கொத்துக்கான காப்புரிமை கிடைக்குமாக இருந்தால், அது வரவேற்கத்தக்கது என்பதே, இலங்கையர்களின் கருத்தாக காணப்படுகின்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












