இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உயிரிழப்புகள் – இந்தியாவிலிருந்து பயணிகள் வரத் தடை

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் அதிகளவிலான மரணங்கள் கடந்த 4ம் தேதி பதிவாகியிருந்தது.
இதன்படி, கடந்த 4ம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் 13 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இவ்வாறான நிலையில், கடந்த 4 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இரட்டிப்பாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் இதுவரை கோவிட் தொற்றினால் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 734 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 75 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
16,720 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் சிலர் தமது வீடுகளிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கட்டில்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே, சிலர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் முதலில் கட்டம் கட்டமாக விடுமுறை வழங்கப்பட்டு, பின்னர் அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.
- திருமண நிகழ்வுகள், கூட்டங்கள், பேரணிகள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மது அருந்தும் இடங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், ஸ்பாக்கள் அனைத்தும் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.
- மதத் தலங்களுக்குள் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மாத்திரமே செல்ல முடியும்.
- இந்தியாவிலிருந்து பயணிகள் வர தடை விதித்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
- திரையரங்குகள், அரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகம், கசினோ, பந்தய நிலையங்கள் ஆகியனவும் மூடப்பட்டுள்ளன.
- ஹோட்டல்கள், ஏனைய தங்குமிடங்களில் 50 வீதமானோரை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்பதுடன், இரவு 10 மணிக்கு பின்னர் அவை செயற்படக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்பொருள் அங்காடிகள், பிரமாண்ட விற்பனை நிலையங்கள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சிறு வர்த்தக நிலையங்கள் ஆகியன முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்றம், முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட வேண்டும் என்பதுடன், நீதிமன்றத்திற்கு மக்கள் வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- அதிமுகவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி
- தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க. ஸ்டாலின் - பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சி
- கேரளாவில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை; பினராயி விஜயன்
- கமல்ஹாசனை வீழ்த்த வானதிக்கு உதவிய கடைசி 4 சுற்றுகள்
- பிரசாந்த் கிஷோர்: "இத்துடன் போதும்... நிறுத்துகிறேன், விலகுகிறேன்"
- தமிழ்நாடு தேர்தல்: "வாருங்கள் சேர்ந்து உழைக்கலாம்" - மு.க. ஸ்டாலினுக்கு மோதி அழைப்பு
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












