இலங்கை: நாடு முழுவதும் 9 மணி நேரத்தை கடந்த மின் தடை - காரணம் என்ன?

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA
இலங்கை முழுவதும் சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12:30 அளவில் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைபட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
நாடு முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் நாட்டின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைபட்டது.
வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், மின்சாரம் தடைபட்டுள்ளமையினால் வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ளன.
வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்துள்ளமையினால், நாடு முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரம் தடைபட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணைகளை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கை முழுவதும் 9 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபட்டமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.7 மணித்தியாலங்களின் பின்னர் நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.இலங்கையில் இதற்கு முன்னர் 2009, 2015 ஆகிய ஆண்டுகளில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைபட்டதுடன், 2016ம் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாட்டின் சுமார் 80 சதவீத பகுதிகளில் ஏற்பட்ட மின் தடங்கல், தற்போது சீர்செய்யப்பட்டதாக சிலோன் மின்சார வாரிய தலைவர் விஜீத ஹெராத் தெரிவித்தார்.
தற்போது மின் பழுது ஏற்பட்டுள்ள கெரவவபிட்டி மின் நிலைய கட்டுமானப்பணிகள் 2007, நவம்பர் மாதம் தொடங்கி இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டன. முதலாவது கட்ட திட்டம், 10 மாதங்களிலும், இரண்டாவது கட்ட திட்டம், 2010-ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டன.
எண்ணெய் பயன்பாட்டுடன் எரியூட்டப்படும் அனல் மின் நிலைய மின்னுற்பத்தி மூலம் தினமும் 424 மெகா வாட் மின் திறன் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் கிட்டத்தட்ட 12 சதவீத மின் தேவையை இந்த மின் நிலைய உற்பத்தி பூர்த்தி செய்து வருவதாக அறியப்படுகிறது.
பிற செய்திகள்:
- சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலவரம் என்ன?
- இந்தியாவில் "எலும்புக்கூடு ஏரி": இமயமலை பள்ளத்தாக்கில் உறையவைக்கும் ரகசியம்
- தொடரும் பாலியல் குற்றங்கள்: யோகியின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
- விநாயகர் சிலையை உடைத்த பஹ்ரைன் பெண் மீது நடவடிக்கை
- உயிரை பணயம் வைத்து விமான விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்
- ராகுல் காந்தி Vs ரவிசங்கர் பிரசாத்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












