கோழிக்கோடு விமான விபத்து: உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்

கோழிக்கோடு விமான விபத்து: உயிரை பணயம் வைத்து பிறரை காப்பாற்றிய கேரள ஹீரோக்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அஷ்ரஃப் பதன்னா
    • பதவி, பிபிசிக்காக

கேரளாவில், 190 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சமீபத்தில் விபத்தில் சிக்கியபோது, உள்ளூரில் இருந்த மக்கள் விரைந்து சென்று உதவி செய்தனர். விபத்தில் சிக்கியிருந்த பயணிகளை அவர்கள் மீட்டு, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது என்று அதிகாரிகள் கூறினர். சில தன்னார்வலர்களுடன் செய்தியாளர் அஷ்ரஃப் பதன்னா பேசினார்.

சமீபத்தில் எதிர்பாராத ஒரு விருந்தாளி வந்தபோது, 32 வயதான ஃபசல் புதியகத் மற்றும் அவருடைய எட்டு நண்பர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை முகாமில் இருந்தனர்.

அந்தக் காவல் துறை அதிகாரி தன் பெயர் நிசார் என அறிமுகம் செய்து கொண்டார். தொலைவில் நின்று அவர்களுடன் பேசிய அந்த அதிகாரி, துணிச்சலுடன் சேவை செய்ததற்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகக் கூறினார்.

"உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் உங்களுக்குத் தருவதற்கு நான் எதையும் கொண்டு வரவில்லை. இந்த ஒன்றைத்தான் என்னால் உங்களுக்கு அளிக்க முடியும்,'' என்று கூறி, அவர்களுக்கு சல்யூட் செய்தார்.

துபாயில் இருந்து இந்தியா திரும்ப விரும்பியவர்களை அழைத்துக் கொண்டு வந்த விமானம் கோழிக்கோடில் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தபோது, உதவிக்குச் சென்ற டஜன் கணக்கான உள்ளூர் மக்களில் புதியகத் மற்றும் அவருடைய நண்பர்களும் இருந்தனர். அந்த விபத்தில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தார்கள்.

Banner image reading 'more about coronavirus'
Banner

சிக்கியிருந்த பயணிகளை இந்தக் குழுவினர் மீட்டனர். அவர்களிடம் இருந்து கோவிட்-19 பரவி இருக்கலாம் என்ற எச்சரிக்கை காரணமாக இப்போது அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையத்தின் வெளியே முற்றத்தில் அவர்கள் நின்றிருக்கும் நிலையில், காவல் துறை அதிகாரி ஒருவர் அவர்களுக்கு எதிரில் நின்று சல்யூட் செய்யும் படம் சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவியது.

மீட்புப் பணியில் ஈடுபட்ட பொது மக்கள் சேவகர்களுக்கு காவல் துறை அதிகாரி சல்யூட் செய்யும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
படக்குறிப்பு, மீட்புப் பணியில் ஈடுபட்ட பொது மக்கள் சேவகர்களுக்கு காவல் துறை அதிகாரி சல்யூட் செய்யும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

தங்களுக்கு நிறைய செல்போன் அழைப்புகள் வருவதாகவும், பெரும்பாலும் காப்பாற்றப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதாகவும், தங்களுடைய நேசத்துக்கு உரியவர்களைக் காப்பாற்றியதற்கு அவர்கள் நன்றி கூறுவதாகவும் இந்த தன்னார்வலர்கள் கூறினர்.

விமான நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புதியகத் வசிக்கிறார். விபத்து நடந்ததும் முதலில் சென்ற சிலரில் தாமும் இருந்ததாக அவர் தெரிவித்தார். "விபத்து நடந்த சில நிமிடங்களுக்குள் நாங்கள் சுமார் ஆறு பேர் அந்த இடத்தை அடைந்துவிட்டோம். கதவுகள் மூடப்பட்டிருந்தன.

மக்கள் உதவிக்காக அழுகுரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்,'' என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார். "விமானத்தின் மீது நீரை தீயணைப்புத் துறையினர் பீய்ச்சிக் கொண்டிருந்ததால், பாதுகாப்பு அலுவலர்கள் முதலில் நுழைவு வாயிலைத் திறக்க மறுத்துவிட்டனர்'' என்றார் அவர்.

தீ அணைந்த பிறகு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காட்சி இதயத்தை உருக்குவதாக இருந்தது என்று புதியகத் தெரிவித்தார்.

"பல பயணிகள் சுயநினைவை இழந்திருந்தார்கள். சிலர் தங்களுடைய இருக்கைகளின் அடியில் சிக்கி இருந்தார்கள். அவர்களுடைய சீட் பெல்ட்களை அவிழ்த்துவிட்டு விமானத்தில் இருந்து வெளியே தூக்கி வர வேண்டியிருந்தது,'' என்று அவர் கூறினார்.

சீட் பெல்ட்களை அறுத்து பயணிகளை மீட்பதில், மீட்புக் குழுவினருக்கு உதவி செய்து, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்பட்டார்கள் என்று மண்டல தீயணைப்பு அதிகாரி கே. அப்துல் ரஷீத் தெரிவித்தார்.

"விபத்து நடந்த உடனேயே தீ பிடிக்காமல் தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் சிறிய தீப்பொறியோ அல்லது குறைபாடோ ஏற்பட்டிருந்தால் பெரிய துயரம் நிகழ்ந்திருக்கும்'' என்று அவர் கூறினார்.

ஆம்புலன்ஸ் எண்ணிக்கை குறைவு. எனவே பொது மக்கள் தனியார் வாகனங்களில் விமானப் பயணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆம்புலன்ஸ் எண்ணிக்கை குறைவு. எனவே பொது மக்கள் தனியார் வாகனங்களில் விமானப் பயணிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் வாட்ஸப் மூலம் அந்தப் பகுதியில் இந்த விபத்து பற்றிய தகவல் வேகமாகப் பரவியது. மேலும் பலர் அங்கே விரைந்து சென்று, தங்களால் எப்படி உதவ முடியும் என்று பார்த்தனர்.

மீட்புப் படையினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வருவதற்குள், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நிறைய தனியார் வாகனங்கள் தயாராகக் காத்திருந்தன. மருத்துவமனைகளில் குறைவான ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்தன. இப்படி தனியார் வாகனங்களை அளிக்க மக்கள் முன்வந்த காரணத்தால்தான் நிறையப் பேரைக் காப்பாற்ற முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

33 வயதான ஃபசல் கரலில் என்பவரும் அந்த இடத்துக்கு முதலில் சென்றவர்களில் ஒருவர். கொரோனா வைரஸ் பாதிக்குமே என்பது பற்றிய அச்சம் அந்த நேரத்தில் தனக்கு வரவே இல்லை என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார். அவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.

``எந்த வாகனம் கிடைத்தாலும், வாரி, ஆட்டோ ரிக்சா என எது கிடைத்தாலும் அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஆம்புலன்ஸ் வரும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்'' என்றார் அவர்.

இந்த வகையில் 30 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த 20 மருத்துவமனைகளுக்கு பயணிகளை அவர்கள் கொண்டு போய் சேர்த்தனர்.

``ஆம்புலன்ஸ்கள் வரும் வரை காத்திருக்காமல், பயணிகளை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தன்னார்வலர்கள் அழைத்துச் சென்றனர். தங்கள் பாதுகாப்பு பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை'' என்று ரஷீத் தெரிவித்தார்.

இந்த மக்களின் செயல்பாடுகள் காரணமாக குறைந்தது 10 உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று கோழிக்கோட்டில் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு இயக்குநராக உள்ள மருத்துவர் பி.பி. வேணுகோபாலன் கூறினார்.

``அவசர கால சிகிச்சை குறித்தும், இதுபோன்ற சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அருகில் வசிக்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது'' என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

``விமான விபத்து நடந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து 2012ல் மாவட்ட நிர்வாகம் ஒரு ஒத்திகை நிகழ்வை நடத்தியது. அதில் சுமார் 650 பேர் பங்கேற்றனர். அதுதான் இந்தியாவில் மிகப் பெரிய ஒத்திகையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ அதே இடத்தில்தான் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியுள்ளது'' என்றும் அவர் தெரிவித்தார்.

``வாடகைக் கார் ஓட்டுநர்கள் உள்பட, சமுதாய மக்களுக்குப் பயிற்சி தருவதற்கு ஒரு மாத காலம் தேவைப்பட்டது. எல்லோருக்கும் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதிர்ச்சியில் உள்ளவர்களை எப்படி கவனிப்பது, எப்படி மீண்டும் சுவாசிக்க வைப்பது என்பது குறித்து கேரளாவில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சமுதாய தன்னார்வலர்கள் இப்போது தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளனர்.
படக்குறிப்பு, சமுதாய தன்னார்வலர்கள் இப்போது தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்ட காரணத்தால், தாங்கள் அனுப்பிய ஆம்புலன்ஸ்கள் காலியாகத்தான் திரும்பி வந்தன என்று தெரிவித்த வேணுகோபாலன், அந்த அளவுக்கு உள்ளூர் மக்களின் செயல்பாடு வெகுசிறப்பாக இருந்தது என்று கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை கிடைக்கச் செய்தது மட்டுமின்றி, அவர்களுக்காகக் காத்திருந்தவர்களுக்கு பயணிகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவும் உள்ளூர் மக்கள் உதவிகரமாக இருந்துள்ளனர்.

``மீட்புக் குழுவினருக்கு நாங்கள் உடனடியாக ஒரு வாட்ஸப் குழுவை ஏற்படுத்தினோம். எங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களையும் அந்தக் குழுவில் பகிர்ந்தோம். அதன் மூலம் தங்கள் நேசத்துக்குரியவர்கள் எந்த மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்பதை குடும்பத்தினர் எளிதாக அறிந்து கொள்ள முடிந்தது'' என்று புதியகத் தெரிவித்தார்.

அவர் வீட்டுக்குத் திரும்பியபோது நேரம் அதிகாலை 3.30 மணி. சில மணி நேரம் கழித்து, விபத்து நடந்த பகுதியில் காவல் துறையினரிடம் ஆஜராகி, பிறகு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

பல பயணிகளை இருக்கையில் இருந்து வெளியேற்ற சீட் பெல்ட்களை அறுக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

அப்போதிருந்து, அவர்கள் ஹீரோக்களைப் போல, நடத்தப்படுகிறார்கள். பிரபல செய்தியாளர்கள் மற்றும் முக்கிய நபர்களின் சமூக ஊடக பக்கங்களில் இவர்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

``கட்டாயான 14 நாள் தனிமைப்படுத்தலில் நாங்கள் உள்ள நிலையில், மக்கள் எங்கள் மீது அன்பையும் பாசத்தையும் பொழிகின்றனர். தினமும் எங்களுக்கு நல்ல உணவுகளை அனுப்புகிறார்கள்'' என்று சிரிக்கிறார் கரலில்.

உள்ளூர் தன்னார்வலர்களுக்கு சட்டம் தொடர்பான விஷயங்களுக்கான செய்தி முனையத்தில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் வாழ்த்துப்பா எழுதியுள்ளார்.

``நேற்று சொர்க்கத்தில் இருந்து கடவுள்கள் இறங்கி வந்திருந்தார்கள்.

தங்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாத, ஆனால் அனைவர் மீதும் அன்பு கொண்ட சாதாரண மனிதர்களாக.

கோவிட் பற்றிய அச்சம் இல்லாமல், மிகுந்த துன்பத்தில் இருந்தவர்களைக் காப்பாற்ற சேவை செய்தார்கள்'' என்று அவர் எழுதியுள்ளார்.

``இந்த தீரம் மிகுந்த தூய்மையான ஆன்மாக்களின் கைகளில் கேரளா பாதுகாப்பாக இருக்கிறது"' என்று நீதிபதி கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: