ஜெனரல் பிபின் ராவத்: இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைவராக பொறுப்பேற்றபின் ஏற்பட்ட மாற்றம் என்ன?

பட மூலாதாரம், @ADGPI
- எழுதியவர், ஜுகல் புரோஹித்,
- பதவி, பிபிசி நிருபர்
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கூகுள் கூட அதிகம் உதவாது. நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன்.
ஆனால், இந்தியாவின் ராணுவ வரலாற்றில் இந்த தினம் மகத்துவம் வாய்ந்தது என்பது உறுதி.
கேரளாவில் கொச்சிக்கு மேற்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரபிக் கடலின் வெதுவெதுப்பான நீரில் இராணுவ சக்தியின் கண்கவர் காட்சி நடைபெற்றது. 60 போர் விமானங்கள், முப்பது போர்க்கப்பல்கள் மற்றும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றாக இருந்தன.
இவற்றின் மையத்தில் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கம்பீரமாக நின்றது. கூட்டுப்படைத் தளபதிகளின் முதல் மாநாடு அங்கு நடந்தது. இந்த வருடாந்தர மாநாட்டில், இந்திய அரசியல் தலைமை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை உயர் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும்.
டெல்லிக்கு வெளியே நடைபெற்ற முதல் கூட்டுப்படைத் தளபதிகள் மாநாடு இதுவாகும். இதில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பட மூலாதாரம், @ADGPI
'முப்படைகளின் கூட்டுத் தலைமை என்பது நீண்ட காலத் தேவையாக இருந்து வந்துள்ளது. முப்படைகளின் உயர் தலைமைக்கு மூன்று படைகளின் அனுபவமும் இருக்க வேண்டும். பாதுகாப்பு நிர்வாகத்தில் மூத்த பதவிகளிலும் சீர்திருத்தங்கள் தேவையாக உள்ளன. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் இப்போது வரை செயல்படுத்தப்படாமலே இருந்துள்ளது என்பது வருத்தமளிக்கிறது.' என்றார் பிரதமர்,
கடந்த ஆண்டு இதே நாளில், பிரதமர் மோதி தான் தவறு என்று நினைத்ததை சரிசெய்ய மிகப்பெரிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைவர் பதவியை அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு 24 டிசம்பர் 2019 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு, அப்போதைய ராணுவத் தலைவர் பிபின் ராவத் கூட்டுப் படைகளின் முதல் தலைவராக (Chief of Defense Staff, CDS) நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த நியமனம் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் விதிகளுக்குட்பட்டுப் பணியாற்ற வேண்டிய ஒரு பதவியே.

பட மூலாதாரம், ANI
சி.டி.எஸ் பதவியை உருவாக்குவதற்கான விதிகளுக்கான குறிப்பில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான கடற்படையின் முன்னாள் தலைவர் ஜெனரல் சுனில் லான்பா என்னிடம் கூறுகையில், "அந்தக் குறிப்பில் சி.டி.எஸ்-ன் பங்களிப்பு மற்றும் பொறுப்புகள் குறித்த விவரம் இருந்தது. அதில் உள்ள பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன." என்று தெரிவித்தார்.
இதனால் என்ன மாறிவிட்டது?
படைத் தலைமையுடன் தொடர்புடைய சிலருடன் நான் பேசிய வரை, இது குறித்து இவ்வளவு விரைவாக எதுவும் கருத்து தெரிவிக்க இயலாது என்றே கூறுகிறார்கள்.
ஓய்வு பெற்ற லெஃப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா மிகவும் விவரமறிந்தவர்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றவர் இவர். இந்த அமைப்புக்கு பிபின் ராவத் தலைமை வகிக்கிறார்.
"ஆறு அல்லது எட்டு மாதங்கள் என்பது இவ்வளவு பெரிய விஷயத்தை மதிப்பிடுவதற்கான போதுமான காலம் இல்லை. தொடக்கப் பணிகள் முடிவடையவே காலம் பிடிக்கும். தற்போதுள்ள படையினரின் பலத்திற்கு இது அழுத்தம் தருவது போலிருக்கும். விதிகள் தெளிவாக விதிக்கப்பட்டுள்ளன. காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் இதை ஆதரிக்கிறேன்" என்று துவா கூறுகிறார்.

பட மூலாதாரம், @ADGPI
இந்த சி டி எஸ்-இடமிருந்து அரசு என்ன எதிர்பார்க்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
இது தொடர்பாக நீங்கள் பல அரசாங்க உத்தரவுகளையும் வெளியீடுகளையும் படிக்கலாம். ஆனால் சுருக்கமாக, இது ஒற்றை சேவை அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். கூட்டாகப் பொருட்களைக் கொள்முதல் செய்தல், ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில், தற்போதுள்ள இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் கட்டமைப்பைச் சீர்செய்வது, உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளித்தல் ஆகியன இதன் நோக்கமாகும்.
ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சுதர்ஷன் ஸ்ரீகண்டே அவர்கள், "சி.டி.எஸ்-க்கு பொறுப்புகள் அதிகம் உள்ளன. தியேட்டர் (எல்லையில் உள்ள ராணுவ கட்டமைப்பு நிலைகள்) மற்றும் செயல் கமாண்டு பற்றி அலோசிக்கப்படவேண்டும். அவற்றின் வடிவம், பொறுப்பில் வரும் துறைகள், கட்டமைப்பு மற்றும் கூறுகள் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் எல்லோரும் இதில் திருப்தியடையவில்லை" என்றார்.
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சைத், "நிச்சயமாக கோவிட் -19 நெருக்கடி மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவை இந்தக் கூட்டுப்படைத் தலைமை அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து நமது கவனத்தைத் திசை திருப்பியுள்ளன. ஆனால் பதவியை உருவாக்கி எட்டு மாதங்களுக்குப் பிறகு, விஷன் ஆவணம் வெளி வரப்போகிறது. பணிகள் நடக்கின்றன என்று நான் நிச்சயமாக நம்புகிறேன், ஆனால் இதுவரை நடந்திருக்க வேண்டிய பல விஷயங்களுக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை." என்று கூறுகிறார்.
என்ன மாறவில்லை?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இராணுவத்தின் பட்ஜெட் அதிகரித்து வருகிறது. பட்ஜெட்டில் அறுபது சதவீதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுகிறது. ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலுக்கும் புதிய கொள்முதலுக்கான முதலீடுகளுக்கும் பட்ஜெட் குறைக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், PIB
மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசிஸ்-ன் ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மன் குமார் பஹெரா கூறுகையில், "இராணுவ நவீனமயமாக்கல் மற்றும் மனித வள செலவினக் குறைப்பு ஆகிய மேம்பாடுகள் இன்னும் சீர் படுத்தப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், சீனாவுடனான எல்லை மோதல் நமது கவனத்தைத் திசை திருப்பியுள்ளது. இராணுவம் தனது பட்ஜெட்டில் 60 சதவீதத்தை சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்காகச் செலவிட வேண்டியுள்ளது. இது செயல்திறனைப் பாதிக்கிறது. அதை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. குறுகிய கால, மற்றும் இடைக்கால தீர்வு என்றால் அது பட்ஜெடை அதிகரிப்பது ஒன்று தான் வழி. ஆனால் நீண்டகாலத் திட்டமாக, ஓய்வூதிய விதிகள் மற்றும் ஊழியர்களின் சேவை தொடர்பான விதிகளை மதிப்பாய்வு செய்யலாம்." என்று கருத்து தெரிவித்தார்.
எந்த திசையில் செல்வது சரி?
பதவி ஏற்றுக்கொண்ட மூன்றாம் நாளில், சிடிஎஸ் பிபின் ராவத், 2020 ஜூன் 30க்குள் வான் பாதுகாப்பு கட்டளை உருவாக்கும் திட்டம் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பதவியேற்ற ஒரு மாதத்துக்குப் பிறகு, பிப்ரவரி 17 அன்று, தி இந்து பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது, "தீபகற்ப இந்தியாவின் பாதுகாப்பு ஒரு தளபதியின் பொறுப்பாக இருக்க வேண்டும். கிழக்கு மற்றும் மேற்குக் கடற்படைக் கட்டளைகளை ஒருங்கிணைத்து அதை தீபகற்பக் கட்டளை என்று அழைக்கலாமா? மார்ச் 31க்குள் தீபகற்பக் கட்டளை (Peninsular command) உருவாக்குவதற்கான ஆய்வுகளைத் தொடங்குவோம். ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை, (International Border, IB) பகுதியை உள்ளடக்கிய ஒரு தனி தியேட்டராகவும் மேற்கத்திய தியேட்டர்களின் சமநிலை ஒரு தனி கட்டளையாகவும் இருக்க வேண்டும்." என்று அந்த அறிக்கை கூறியது.
"ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்கள் சீனாவுடனான எல்லையைக் கண்காணிக்கும்" என்று அவர் கூறியிருந்தார். அவரது அறிக்கை, குறிப்பாக இந்தியக் கடற்படையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி, "இந்தியக் கடற்படை வெறும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மட்டுமே அல்ல, பசிஃபிக் கடலிலும் எங்கள் சேவை பரவியுள்ளது என்ற உண்மை நிலைக்கு, அவர்கள் தேர்ந்தெடுத்த பெயர் பொருத்தமாக இல்லை. தனது கண்ணோட்டத்தை இன்னும் பரவலாக்கவும் அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய நிலைப்பாட்டை எடுக்கவும் சி.டி.எஸ் மீது நம்பிக்கை உள்ளது" என்று கூறுகிறார்.
சிலர் இந்த முடிவெடுக்கப்பட்டதில் காட்டப்பட்ட வேகம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பட மூலாதாரம், ADGPI
"இந்த முடிவுகள் சீரிய ஆய்வின் அடிப்படையில் அமைந்ததா அல்லது ஒருவரின் சொந்த சிந்தனையின் அடிப்படையில் உள்ளதா? நாங்கள் நீண்ட கால மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறோம், இங்கு சிந்தனையுடன் நடவடிக்கை எடுப்பது முக்கியம்." என்கிறார் ஒரு அதிகாரி.
ஒரு நபர் சார்ந்த அணுகுமுறையிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஜெனரல் சைத், "தொழில்முறை மாற்றங்களுக்கு, நிறுவன முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம், ஒரு நபர் சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடாது. மாற்றங்கள், தொலைநோக்குடனும் நிலையானதாகவும் இருப்பதை இது உறுதி செய்யும். சி.டி.எஸ்-க்கு முன் உள்ள மிகப்பெரிய சவால் அவர் ஒரு தலைவராக மாறிச் செயல்படவேண்டுமேயன்றி வெறும் செயல்பாட்டாளராக இருக்கக்கூடாது என்பது தான்.. ஏனெனில் இந்தப் பொறுப்பில் மோதல்களை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்." என்று கூறுகிறார்.
உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
பொது உரைகளில், ஜெனரல் ராவத்தின் அணுகுமுறை எப்போதும் ஒருதலைபட்ச நவீனமயமாக்கலைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது. அனைத்துச் சேவைகளும் ஒரே சீராக முன்னேற வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். அதிகரித்து வரும் ஓய்வூதியச் செலவுகள், ஒத்திசைந்த ஆற்றல், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு பற்றி அவர் பேசி வருகிறார்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஏனெனில் சி.டி.எஸ் பதவியை உருவாக்கும் நேரத்தில், அதன் முக்கிய நோக்கமாக 'மூன்று ஆண்டுகளுக்குள் செயல்பாடு, தளவாடங்கள், பயிற்சி, ஆதரவு சேவைகள், தகவல் தொடர்பு, பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒருங்கிணைப்பைக் கொண்டு வருவதை'த் தான் மத்திய அமைச்சரவை குறிப்பிட்டது.
கூட்டு என்றால் ஒன்றாக இயைந்து செயல்படுவது என்று பொருள்.
"ஊடகங்கள் ஏர் டிஃபென்ஸ் கமாண்ட், தீபகற்ப கட்டளை பற்றி பேசுகின்றன, ஆனால் மற்ற விஷயங்களிலும் நிறைய வேலைகள் உள்ளன, அதைப் பற்றி அதிகம் பேசவில்லை. சைபர், ஸ்பேஸ், சோஷியல் மீடியா போன்ற அம்சங்களும் முக்கியமானவை, இங்கு விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வேலை நடைபெறும் மற்றொரு பகுதி லாஜிஸ்டிக்ஸ். இந்தப் பணிகள் அதிகம் கவர்ச்சியானவை அல்ல, ஆனால் அவை முக்கியமானவை" என்று கருத்து தெரிவிக்கிறார் ஜெனரல் துவா..
பொதுமக்கள் எவ்வளவு தகவல்களைப் பெறுகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும் வகையில், சி.டி.எஸ் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்த அறிவுள்ள ஒரு அதிகாரி, 'இந்த அலுவலகத்தில், செய்ய வேண்டிய அனைத்து முக்கிய விஷயங்களையும் நாங்கள் செய்கிறோம். ஒவ்வொரு பணியையும் வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது தான் கேள்வி" என்று கூறுகிறார்
சி.டி.எஸ் நியமனம் ஒரு பெரிய படி என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள், ஆனால் அதைவிடப் பெரிய படி இராணுவ விவகாரங்கள் துறை ( Department of Military Affairs, டி.எம்.ஏ) உருவாக்கம் என்றும் கூறப்படுகிறது.
அட்மிரல் ஸ்ரீகண்டே 'இது பலரால் எதிர்பார்க்கப்படாத ஒரு நடவடிக்கை. தற்போது வரை இராணுவச் சேவைகள் ஒரு தீர்மானத்தை முன்வைப்பதும், சிவில் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்வதும், செயல்படுத்துவதும், நிராகரிப்பதும் அல்லது அரசியல் முடிவெடுப்பவர்களுக்கு அனுப்புவதும் என்று தான் செயல்முறை இருந்தது. டி.எம்.ஏவின் பொருள் என்னவென்றால், இப்போது இராணுவச் சேவைகள் திட்டங்களை கவனமாக கவனித்து உள்ளுக்குள்ளேயே சீர்தூக்கிப் பார்க்க முடியும்." என்று கூறுகிறார்.
தற்போது, டி எம் ஏ-வில் 160 சிவிலியன் பணியாளர்களும் நூற்றுக்கணக்கான படையினரும் உள்ளனர்.
டி எம் ஏ-வின் தலைவர் ஜெனரல் ராவத். மேலும் அவர் இணைச் செயலாளர் மட்டத்திலான ஒரு சிவில் ஊழியர்.
ஆகஸ்ட் 15, 2019 அன்று, பிரதமர் பாதுகாப்புப் பணியாளர் தலைவர், சிடிஎஸ் பதவியை உருவாக்கி நாட்டை ஆச்சர்யத்துக்குள்ளாக்கினார்.
39 விநாடிகளில், பிரதமர் இந்தப் பதவியை அமைப்பதாக அறிவித்தது மட்டுமல்லாமல், அது குறித்த தனது பார்வையையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அவரது உரையின் முடிவில், அப்போதைய விமானப்படைத் தலைவரின் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது, கடற்படைத் தலைவர் ஆம் என்று தலையசைத்தார், ஆனால், இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் ராவத் அமைதியாக அமர்ந்திருந்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
- மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - கமலா ஹாரிஸின் தமிழக நாட்கள்
- மகேந்திர சிங் தோனியின் இடத்தை யார் நிரப்புவார்? - நிபுணர்கள் கூறுவது என்ன?
- உத்தர பிரதேசம்: 13 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












