இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி: அதிகாரங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், ANI
நேற்று திங்கள்கிழமை பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைகளுக்கான தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்கனவே இருக்கும் நான்கு துறையின் செயலாளர்களுடன் 5வது செயலாளராக உருவாக்கப்பட்ட பதவியே இந்த முப்படைகளின் தளபதி.
முப்படைத் தளபதி செய்யக்கூடியவை:
- பாதுகாப்பு அமைச்சருக்கு முப்படைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் முதன்மை ஆலோகராக செயல்படுவார். பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்புத்துறை திட்டமிடல் குழு ஆகியவற்றில் பங்காற்றுவார்.
- பாதுகாப்புத் அமைச்சகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராக, அதற்கு தலைமை வகிப்பார்.
- பிற படைகளின் தளபதிகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகளே இவருக்கும் கொடுக்கப்படும். ஆனால் பிற தளபதிகள் 62 வயதில் அல்லது பதவியேற்றதிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவடைவது, ஆகியவற்றில் எதற்கான தேதி முதலில் வருகிறதோ அன்று ஓய்வு பெறுவார்கள். ஆனால் முப்படைத் தளபதி 65 வயதில் ஓய்வு பெறுவார்.
- அனைத்து படைகளிலும் ஆள் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை ஒருங்கிணைத்து, கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவார்.
- ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை பிரிவுகளை உருவாக்கி ராணுவக் கட்டளைகளை மறுசீரமைப்பார்.
- முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பதுடன், அந்தமான் நிகோபாரில் உள்ள முப்படைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய படைப்பிரிவு, கேந்திர கட்டளைப்படைகள், புதிதாக உருவாகவுள்ள விண்வெளி, சைபர், சிறப்புப்படைப்பு ஆகியவற்றிற்கு நிரந்தர தலைவராக இருப்பார்.
- அணு ஆயுத தளவாட ஆணையத்தின் (Nuclear Command Authority) ராணுவ ஆலோசகராக செயல்படுவார்.
- ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்பு முதலீடு கொள்முதல் திட்டத்தையும் இரண்டு ஆண்டுகாலத்தில் வருடாந்திர கொள்முதல் திட்டங்களையும் செயல்படுத்தும் பணிகளை ஒதுக்குவார்.
- தேவையற்ற செலவினத்தை குறைத்து சீர்திருத்தம் செய்வதும் இவருடைய பொறுப்பாகும்.
- பாதுகாப்பு சேவை தொடர்பான கண்ணோட்டத்தில் நாட்டின் அரசியல் தலைமைக்கு ஆலோசனை வழங்குவார்.

பட மூலாதாரம், PIB
முப்படைத் தளபதி செய்ய முடியாதவை:
- ஆயுத உற்பத்தி மற்றும் அது குறித்த ஆய்வு, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் ஆகியவற்றுக்கு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்த செயலாளர்களைப் போல முப்படைத் தளபதி 5வது புதிய செயலாளர்.
- ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய ஒவ்வொரு படைக்கும் தனிப்பட்ட அளவில் இருக்கும் பிரச்சனைகளை அந்தந்த படைகளின் தளபதிகளே கவனித்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட படையின் உள்விவகாரத்தில் இவர் தலையிட முடியாது.
- முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்தாலும், இவருக்கு கீழ் பணியாற்ற எந்தவொரு தனிப்பட்ட படைப்பிரிவும் கிடையாது.
- தளபதிகளின் தலைவர் என குறிப்பிடப்பட்டாலும், அவர்களின் தலைவராக மாட்டார். அதனால் பிற தளபதிகளுக்கு உத்தரவு பிறபிக்க முடியாது.
- முப்படைத் தளபதி கொள்முதல் திட்டத்தின் செயல்பாடு அவரிடம் இருந்தாலும் எந்த கொள்முதல் திட்டத்தையும் குறிப்பாக மூலதனக் கொள்முதல்களை நிறுத்த முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








