அமெரிக்காவில் அதிகமாகும் 'திரள் கொலை' சம்பவங்கள் - காரணமும் பின்னணியும்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் மற்ற ஆண்டுகளைவிட 2019ஆம் ஆண்டுதான் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட திரள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
(ஒரே சமயத்தில் பலர் கொல்லப்படும் சம்பவங்கள் 'திரள் கொலைகள்' (mass killing) ஆகும். ஒரே கொலை குற்றத்தில் கும்பலாக பலர் ஈடுபடுவது 'கும்பல் கொலைகள்' (mob lynching) ஆகும்.)
அசோசியேடட் பிரஸ், யுஎஸ்ஏ டுடே மற்றும் நார்தீஸ்டன் பல்கலைகழகம் ஆகிய நிறுவனங்களில் தகவலின்படி இந்த ஆண்டு நடந்துள்ள 41 சம்பவங்களில் 211 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2019ல் நடந்த இந்த 41 சம்பவங்களில் 33 தாக்குதல்கள் துப்பாக்கி மூலம் நடந்துள்ளன. கலிஃபோர்னியா மாநிலத்தில்தான் அதிக சம்பவங்கள் நடந்ததாக பதிவாகியுள்ளது. அங்கே இதுவரை எட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
கொலை செய்பவர் இல்லாமல் ஒரே நிகழ்வில் நான்கு அல்லது நான்குக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிகழ்வுகளையே இந்த ஆய்வுக்காக கணக்கில் கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
2019ல் மே மாதம் வர்ஜினியா கடற்கரையில் 12 பேர் கொல்லப்பட்டதும் ஆகஸ்ட் மாதம் எல் பாசோவில் 22 பேர் கொல்லப்பட்டதுமே மிகவும் மோசமான சம்பவங்கள் ஆகும்.
அமெரிக்காவில் 2006லிருந்து இத்தகைய திரள் கொலைகள் சம்பந்தமான தகவல்கள் சேமிக்கப்படுகின்றன. ஆனால் 1970களிலிருந்து திரள் கொலைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதில் அதிக கொலை எப்போது நடந்தது எவ்வளவு நடந்தது என்ற தகவல் வெளிவரவில்லை என ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
2019ல் அதிக திரள் கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2006ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. 2006ஆம் ஆண்டு 38 சம்பவங்கள் நடந்துள்ளன.
2019ல் அதிக திரள் கொலைகள் நடந்திருந்தாலும் இறந்தவர்களில் எண்ணிக்கை 211 ஆகும். இது 2017-ஐ விட குறைவு. 2017ல் மொத்தம் 224 பேர் இறந்துள்ளனர். 2017ல் லாஸ் வேகஸில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டில் 59 பேர் இறந்தனர். இது அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடுரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
குடும்ப சண்டைகள், போதைப்பொருள் அல்லது கும்பல் தகராறு போன்ற காரணங்களால் ஏற்படும் திரள் கொலைகள் பெரும்பாலும் அமெரிக்காவில் வெளிவருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திரள் கொலைகள் அதிகரித்திருந்தாலும் தனிநபர் கொலைகள் குறைந்துள்ளது என குற்றவியல் நிபுணர் மற்றும் மினெஸ்டோனாவிலிருக்கும் மெட்ரொபாலிடன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் டென்ஸ்லி கூறியுள்ளார்.
ஏபியிடம் பேசிய அவர், "இந்த திரள் கொலைகளின் அதிகரிப்பு அமெரிக்க சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கோபம் மற்றும் எரிச்சலின் விளைவாக இருக்கும் என நான் நினைக்கிறேன்," என்று கூறினார்.
ஆனால் குற்றங்கள் குறுகிய காலத்தில் அதிக அளவு பெருகியுள்ளது எனவும் கூறிய ஜேம்ஸ் டென்ஸ்லி இது திரள் கொலைகள் அதிகம் நடந்த காலம் போலத் தெரிவதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தத்தில், துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உரிமை காக்கப்பட்டது. இந்த திரள் கொலைகளின் அதிகரிப்பு அமெரிக்க அமைச்சர்களை துப்பாக்கி பயன்பாட்டைக் கட்டுபடுத்தும் கொள்கைகளை புதுபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருக்கிறது.
ஆகஸ்ட்டில் டேடான், ஓஹியோ, எல் பாசோ, டெக்ஸாஸ் போன்ற இடத்தில் கொடூரமானத் தாக்குதல் நடந்தபிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் துப்பாக்கி வைத்திருப்பவர்களைக் குறித்து விசாரிப்பது தொடர்பாக அமைச்சர்களிடம் முக்கிய கலந்துரையாடல் நடக்கயிருப்பதாகக் கூறினார்.
ஆனால் துப்பாக்கிப் பயன்பாட்டு கட்டுப்பாட்டை எதிர்க்கும் தேசிய துப்பாக்கி அமைப்பின் தலைவர் வேன் லாபியரியுடன் நீண்ட நேர தொலைபேசி உரையாடலுக்குப்பின் இந்த துப்பாக்கி கட்டுபாட்டில் அளித்த உறுதியிலிருந்து பின் வாங்கினார் டிரம்ப்.
அந்த தொலைப்பேசி உரையாடலுக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், துப்பாக்கி உரிமையைப் பெறுபவர்களின் பின்னணியை அறிய இப்போது இருக்கும் முறையே சிறந்த விசாரணை முறை. இவ்வாறான தாக்குதல் நடத்துவது உளவியல் ரீதியான பிரச்சனை எனக் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் துப்பாக்கி பயன்பாட்டு கட்டுபாட்டை வெளிப்படையாக ஆதரித்தனர்.
டிசம்பர் தொடக்கத்தில், சாண்டி ஹூக் பள்ளி துப்பாக்கிச்சூட்டின் ஏழாவது நினைவுதினத்தில், முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் துப்பாக்கி கட்டுபாடு முறை வேண்டும் என வலியுறுத்தினார். ஆயுதங்கள் தயாரிப்புக்கு தடைவிதிக்கவும் துப்பாக்கி விற்பதற்கு, துப்பாக்கி உரிமம் பெறுபவர்களின் பின்னணியை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக வாய்ப்புள்ளவர்களில் ஒருவர் என நம்பப்படும் எலிசபெத் வாரென் துப்பாக்கிச்சூட்டினால் ஏற்படும் விளைவுகளை 80 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
துப்பாக்கி விற்பவர்கள் யாரேணும் விதியை மீறினால் அவர்களின் துப்பாக்கி உரிமைத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் எலிசபெத் வாரென் குறிப்பிட்டிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












