ஜி.சி. முர்மு: புதிய சிஏஜி ஆக பதவியேற்றார் - 50 ஆண்டுகளாக மீறப்படும் அரசியலமைப்பு மரபு

முர்மு

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், எம்.ஏ. பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆக கிரிஷ் சந்திர முர்மு சனிக்கிழமை பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.

இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ஜம்மு காஷ்மீர் புதிய யூனியன் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட அவர், அந்த யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட முதலாவது நிறைவு நாளில் தமது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

மறுதினமே டெல்லி வந்த அவர், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த சில மணி நேரத்தில் ஜி.சி. முர்முவை தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவிக்கு நியமிக்கும் அறிவிப்பை குடியரசு தலைவர் மாளிகை அறிவித்தது.

மரபுகள் மீறப்படுவதாக தொடரும் சர்ச்சை

முர்மு

பட மூலாதாரம், ANI

ஆனால், இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய பதவிகளில் ஒன்றான இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவிக்குரிய நியமனம், அதன் அடிப்படை தகுதியாக வரையறுக்கப்பட்ட மரபுகள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மீறப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்து வருகிறது.

இதனால், இந்திய பொதுப்பணித்தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இந்திய கணக்குத் தணிக்கை பணியில் (IA&AS) சேர்ந்த பல கணக்காளர்கள், தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவியை வகிக்க முடியாமல் அதற்கு கீழ் நிலையில் உள்ள பதவிகளுடனேயே ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.

இந்தப்போக்கு, கடந்த 1978-ஆவது ஆண்டில் முதல் முறையாக அசாதாரண முறையில் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு அப்போது ஐஏஎஸ் உயரதிகாரியாக இருந்த கியான் பிரகாஷ் நியமனமிக்கப்பட்ட காலம் முதல் தொடர்வதை பிபிசி அறிந்துள்ளது.

சிஏஜி பதவி எதற்கு?

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவியின் அவசியம் குறித்து 1949-ஆவது ஆண்டு, மே 30-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பேசினார்.

"இந்திய அரசியலமைப்பில் மிகவும் மதிப்புவாய்ந்த பொறுப்பு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவி என்பது எனது கருத்து. அந்த பொறுப்புக்கு வருபவரின் பணி, நீதித்துறைக்கு இருக்கும் சுதந்திரத்தை விட மேலும் சுதந்திரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். நிச்சயமாக நீதித்துறைக்கு உள்ளது போன்ற சுதந்திரத்தை அவரது பொறுப்புகள் கொண்டிருக்க வேண்டும்" என்று அம்பேத்கர் விளக்கினார்.

முர்மு பதிவியேற்பு
படக்குறிப்பு, முர்மு பதிவியேற்பு

அந்த காலகட்டத்திலேயே வாழ்ந்தவரும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவருமான கே.டி. ஷா, அப்போதே, தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு இந்திய சிவில் சர்வீஸ் (ஐசிஎஸ்) பணியில் இருப்பவர்கள் நியமிப்பதற்கு எதிராக இருந்தார்.

அந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர், கணக்குத்தணிக்கையாளராக இருக்கும் வகையில் தகுதி வரையறுக்கப்பட வேண்டும் என்று கே.டி. ஷா கோரினார்.

காற்றில் மறைந்த வாக்குறுதிகள்

அப்போது அரசியலமைப்பு வரைவுக்குழுவில் இடம்பெற்ற டி.டி.கிருஷ்ணமாச்சாரி அந்த குழுவின் சார்பில் அரசியல் நிர்ணய சபையில் அளித்த வாக்குறுதியில், நாட்டின் பல்வேறு இடங்களில் ஏராளமான சிறந்த பொது கணக்குத்தணிக்கையாளர்கள் சிறந்த நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அந்த வாக்குறுதி பின்பற்றப்பட்டு, ஐஏஏஎஸ் பணியில் இருந்த வி. நரஹரி ராவ் (1948-54), ஏ.கே. சந்தா (1954-60) மற்றும் ஏ.கே. ராய் (1960-66) தலா ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை வகித்தார்கள்.

அவர்களின் பதவிக்காலத்தில் அரசுத்துறைகளின் பொது கணக்கு தணிக்கைக்கான அடித்தளம், வழிமுறைகளை அவர்கள் வகுத்தார்கள்.

அரசுத்துறைகளின் செலவின நடைமுறை, செலவின திட்டங்கள் பற்றி நாடாளுமன்றம் அறிந்து முடிவெடுக்கவும், கருத்து தெரிவிக்கவும், நாடாளுமன்றத்துக்கு அவர்களின் அறிக்கைகள் உதவியாக அமைந்தன. பல அறிக்கைகள், நாடாளுமன்றத்தில் அரசுத்துறைகளின் நிர்வாக குளறுபடிகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தன.

ஆனால், 1966-ஆவது ஆண்டு முதல் ஐஏஏஎஸ் பணி அதிகாரிகள், தலைமை கணக்குத்தணிக்கையாளர் பணிக்கு நியமிக்கப்படும் வழக்கத்துக்கு முடிவு காணப்பட்டது.

வயது வரம்பு நிர்ணயம்

தற்போதைய மத்திய அரசின் பணியாளர் துறை சட்ட விதிகளின்படி, அரசுப்பணியில் இருப்பவரின் ஓய்வூதிய வயது 60. அந்த வகையில், சிஏஏஜி பணிக்கு நியமிக்கப்படும் உயரதிகாரி ஓய்வு பெறும் நிலையில் இருந்தாலோ, அவர் ஓய்வுக்கு பிறகு சிஏஏஜி பணிக்கு அவர் நியமிக்கப்படுவதாக இருந்தாலோ, அவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டுவதாகவோ இதில் எது முதலில் வருகிறதோ அதன் அடிப்படையில் அவரது பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டது.

சில நேரங்களில் 59 வயதை கடந்த ஓர் ஐஏஎஸ் அரசு உயரதிகாரி செயலாளர் அந்தஸ்தில் இருக்கும்போதோ அல்லது அறுபது வயதை எட்டும் தருணத்திலோ சிஏஏஜி பதவிக்கு நியமிக்கப்பட்டால், அவரால் அரசியலமைப்பு பொறுப்பை மேலும் 6 ஆண்டு காலத்துக்கு வகிக்க இயலும்.

2-வது நிலையிலேயே ஓய்வுபெறும் கட்டாயம்

இதனால் ஐஏஏஎஸ் பணியில் சேர்ந்து கூடுதல் துணை கணக்குத் தணிக்கையாளர், துணை கணக்குத் தணிக்கையாளர், முதுநிலை கணக்குத் தணிக்கையாளர், முதன்மை கணக்குத்தணிக்கையாளர், கூடுதல் துணை முதன் கணக்குத் தணிக்கையாளர், துணை தலைமை கணக்குத் தணிக்கையாளர் போன்ற பதவிகள் வரை பதவி உயர்வு பெறும் ஐஏஏஎஸ் அதிகாரிகள், தலைமை கணக்கு தணிக்கையாளர் பதவிக்கு உயர முடியாமலேயே பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்.

ஆனால், மறுபுறம், துறை செயலாளர் அளவில் ஒரு துறையை நிர்வகித்த ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை ஒட்டுமொத்த நாட்டின் அரசுத் துறைகள், பொதுத்துறைகள், அவற்றுடன் தொடர்புடைய அலுவலகங்களின் கணக்குத் தணிக்கை பணியை நிர்வகிக்கவும் அந்த பணிகளை மேற்கொள்ளும் கணக்கு தணிக்கையாளர்களின் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்படும் வழக்கம் குறித்த அதிருப்தி கடந்த அரை நூற்றாண்டாக நீடித்து வருகிறது.

இதே வழக்கம்தான் சமீபத்திய தலைமை கணக்குத்தணிக்கையாளர் நியமன நடவடிக்கைகளிலும் கடைப்பிடிக்கப்படுவதாக சர்ச்சை தொடருகிறது.

ஆட்சியை உலுக்கிய சிஏஜி அறிக்கைகள்

1948-ஆவது ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆட்சியில், பிரிட்டனுக்கான இந்திய தூதராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன், நடைமுறை விதிகளை மீறி இந்திய ராணுவ தேவைகளுக்காக ரூ. 80 லட்சம் மதிப்பிலான 2,000 ஜீப்புகள் வாங்கும் வெளிநாட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவரது செயல்பாடு அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர் லால் நேருவின் அரசுக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியது.

சமூக இடைவெளியுடன் முர்மு பதவியேற்றபோது
படக்குறிப்பு, சமூக இடைவெளியுடன் முர்மு பதவியேற்றபோது

1984-ஆவது ஆண்டில் பிரதமராக ராஜீவ் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்த ஏ.பி.ஏ. கானி, சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அவரது துறை சார்ந்த குறைபாடுகள் காரணமாக பதவி விலகினார்.

சமீபத்திய தசாப்தங்களில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சிஐஜி ஆக 2008-2013-ஆவது ஆண்டுவரை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத் ராய் பணியாற்றியபோது, அவர் குறிப்பிட்ட 2ஜி அலைக்கற்றை வருவாய் இழப்பு தொடர்பான அறிக்கை, அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா பதவி விலகியதுடன் சிபிஐ வழக்கை ஏழு ஆண்டுகள்வரை எதிர்கொள்ளும் நிலைக்கு வழிவகுத்தது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரிளோ, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளோ நியமிக்கப்படும்போது, அவர்கள் தங்களுக்கு அப்பதவி கிடைக்க வழிவகுத்த முந்தைய அரசின் பரிந்துரை அல்லது யோசனை காரணமாக, அந்த அரசுக்கு சாதகமாக செயல்படாலம் என்ற சந்தேகம் பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது.

சமீபத்திய சர்ச்சை என்ன?

சமீபத்தில் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஆக நியமிக்கப்பட்டுள்ள ஜி.சி. முர்மு, 1985-ஆவது ஆண்டு குஜராத் மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர்.

அரசுப்பணியில் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை பெற்ற அவர், மத்தியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்டு நிதித்துறையில் செலவினங்கள், வருவாய்த்துறை ஆகியவற்றில் உயர் பொறுப்புகளை வகித்தார்.

அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில மாதங்களிலேயே ஜி.சி. முர்மு புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், ஓராண்டை மட்டுமே அவர் தனது பதவிக்காலத்தில் எட்டிய நிலையில், அதில் இருந்து விலகிய அவர், தற்போது இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பின் 148-ஆவது விதி, தலைமை கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு தகுதியானவரை இந்திய குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்றும், ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் நிலையில், அந்த பதவியின் காலம் நிறைவுபெறும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அந்த பதவிக்காலத்துக்கு பிறகு, வேறெந்த அரசுப்பொறுப்பை மத்திய, மாநில அரசுகளில் அவர் வகிக்க முடியாது என்றும் இந்திய அரசியலமைப்பின் 148-ஆவது விதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: