கொரோனா தடுப்பூசி: "10 கோடி பேருக்கு 225 ரூபாயில் கிடைக்கும்" மருந்து கம்பெனி அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - "10 கோடி பேருக்கு 225 ரூபாய் விலையில் கொரோனா தடுப்பூசி"

225 ரூபாய்க்கு விற்கும் வகையில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி டோஸ் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் போட்டுள்ளன என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சீரம் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"225 ரூபாய்க்கு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டவுடன் அதை 10 கோடி எண்ணிக்கையில் தயாரித்து இந்தியாவுக்கும் மற்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மையம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் நோக்கில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாடுகளுக்குத் தடுப்பு மருந்தை தயாரித்து வழங்குவதற்காக சீரம் நிறுவனத்துக்கு ரூ.1,125 கோடியை அந்த அறக்கட்டளை வழங்கவுள்ளது.

அஸ்த்ரா ஜெனிகா, நோவாவேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. அவற்றை சீரம் மையத்தில் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: "நான் ஒரு யோகி - அயோத்தி மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு போகமாட்டேன்"

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

மசூதி அடிக்கல் நாட்டு விழா பற்றிய கருத்து கூறியதற்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பின்னர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், "அயோத்தியில் நடைபெறும் மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "ஒரு முதலமைச்சர் என்ற முறையில் என்னிடம் நீங்கள் இந்த கேள்வியை கேட்டால் எந்த மதமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு யோகி என்ற முறையில் இந்த கேள்வியை எழுப்பினால், நான் ஒரு இந்து என்ற காரணத்தால் அங்கு போகமாட்டேன்" என்று கூறினார்.

யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியதற்கு, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் பாண்டே கூறுகையில், "யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தில் உள்ள இந்துக்களுக்கு மட்டும் முதலமைச்சர் அல்ல. இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் அவர்தான் முதலமைச்சர். அவரது கருத்து கண்ணியக்குறைவாக உள்ளது. எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: "ஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி"

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்கு கொள்கை அளவில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதையடுத்து, வீரர்களைத் தனிமைப்படுத்தி வைக்கும் பணியை 8 அணி நிர்வாகங்களும் தொடங்கியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"8 அணி நிர்வாகங்களும் வீரர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்த ஆயத்தமாகி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்தது.

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக ஐசிசி முறைப்படி அறிவித்ததை அடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்தது.

இதன்படி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.

இந்த நிலையில், அனைத்து அணி வீரர்கள், நிர்வாகிகள், அணி உறுப்பினர்கள் அனைவரும் வரும் 20-ம் தேதிக்குப் பின் இந்தியாவை விட்டுப் புறப்பட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 22-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: