சாத்தான்குளம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, அதன் விசாரணை குறித்த நிலவர அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தங்களது கடையை ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கூடுதல் நேரம் திறந்திருந்ததாக கூறப்படும் விவகாரத்தில், காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் உள்ளூர் காவலர்கள், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு, தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. முதலில் சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு, பிறகு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணன் - ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை இன்று மத்திய புலனாய்வுத் துறை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்களை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் சிபிஐ கூறியிருந்தது. மேலும், விசாரணை அதிகாரிகள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் அதனால் கால அவகாசம் தேவையென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த நீதிபதிகள், வழக்கு சரியான திசையில் செல்வதாகவும் விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் கூறினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் உத்தரவு ஏதும் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும் வழிமுறையை வகுக்க குழு அமைப்பது குறித்த நடவடிக்கை, எந்த கட்டத்தில் இருக்கிறது என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமென இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோர் கோரியிருந்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தொடரும் பாலியல் குற்றங்கள்: யோகியின் ராம ராஜ்ஜியத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
- குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவதை பெண்கள் எதிர்ப்பது ஏன்?
- ஃபேஸ்புக் விளக்கம்: பாஜகவுக்கு துணை போவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
- சீனாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்து படைப்புரிமைக்கு ஒப்புதல்
- இலங்கை 13ஆவது திருத்தம்: இந்தியாவுக்கு கட்சிகள் தரும் அழுத்தம் - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர
- பெலாரூஸ்: மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஆளும் அதிபருக்கு உதவுகிறதா ரஷ்யா?
- சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- பிபிசி தமிழ் ட்விட்டர்
- பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- பிபிசி தமிழ் யு டியூப்












