பெலாரூஸ் போராட்டங்கள்: அதிபர் பிடிவாதம், கொந்தளிக்கும் பொதுமக்கள், ரஷ்யா தலையீடு - என்ன நடக்கிறது?

பெலாரூஸ் போராட்டங்கள்: பதவி விலக மறுக்கும் அதிபர், கொந்தளிக்கும் பொதுமக்கள்

பட மூலாதாரம், Reuters

பெலாரூஸ் நாட்டில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் நீடித்து வரும் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ பதவி விலக மறுப்பதையடுத்து, வார இறுதியில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

அங்கு கடந்த 9-ஆம் தேதி வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாகவும், காவல்துறையினரின் வன்முறை தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு எதர்கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போலீஸ் வன்முறை பற்றிய அறிக்கைகள் மற்றும் ஆகஸ்ட் 9 வாக்கெடுப்பில் வாக்கெடுப்பு மோசடி செய்ததாகக் கோபம் அதிகரித்ததால் எதிர்கட்சித் தலைவர்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறும் அதிபர், பதவி விலக மறுத்து வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நாட்டையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்படி தமது ஆதரவாளர்களுக்கு அதிபர் லூகஷென்கோ அழைப்பு விடுத்தார்.

எனினும், அதிபரின் எதிர்ப்பாளர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். "அமைதியாக நடைபெற்ற அந்த போராட்டம் சுதந்திர பெலாரூஸில் மிகப்பெரியது" என்று உள்ளூர் சுயாதீன செய்தி இணையதளமான Tut.by குறிப்பிட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

1994ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் நீடித்து வரும் லூகாஷென்கோ, நடந்து முடிந்த தேர்தலில் 80.1 சதவீத வாக்குகளையும், பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா 10.12 சதவீத வாக்குகளையும் பெற்றதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் பிறகு மக்களின் கோப அலை கடுமையாகியிருக்கிறது.

இதற்கிடையே, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த டிகோனோவ்ஸ்காயா, லிதுவேனியாவுக்கு சென்றுள்ளார். வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் முறையாக எண்ணப்பட்டிருந்தால், 60 முதல் 70 சதவீதம் வரையிலான வாக்குகள் தனக்கு கிடைத்திருக்கும் என்று அவர் கூறினார்.

பெலாரூஸ்: மக்கள் போராட்டங்களை ஒடுக்க ஆளும் அதிபருக்கு உதவுகிறதா ரஷ்யா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்காயா

திங்கட்கிழமை அவர் வெளியிடப்பட்டுள்ள காணொளி பதவில், அமைதியான மற்றும் இயல்பான தன்மையை மீட்டெடுப்பதற்கும், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், புதிய தேர்தல்களுக்குத் தயாராக இருப்பதற்கும் ஒரு "தேசிய தலைவராக" மாறத் தான் தயாராக இருப்பதாக டிகானோவ்ஸ்காயா கூறியுள்ளார்.

இதற்கிடையே, தேர்தலையொட்டி 6,700 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் விடுவிக்கப்பட்ட பலரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, பாதுகாப்பு படையினராகல் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்தது?

பெலாரூஸில் அதிபரின் எதிர்ப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். சுமார் 31 ஆயிரம் பேர் அந்த போராட்டங்களில் பங்கேற்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்ட வேளையில், உள்துறை அமைச்சகம், அந்த எண்ணிக்கை, 65 ஆயிரம் ஆக இருக்கலாம் என்று மதிப்பிட்டது. இருப்பினும் ஏஎஃப்பி செய்தியாளர், அந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியிருந்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் லூகஷென்கோ, நாட்டில் மறுதேர்தல் நடத்தப்படுமானால் அது, ஒரு நாடு இறந்து போவதாக கருதப்படும் என்றார்.

பெலாரூஸ் போராட்டங்கள்: பதவி விலக மறுக்கும் அதிபர், கொந்தளிக்கும் பொதுமக்கள்

பட மூலாதாரம், REUTERS

"இங்கு நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். கால் நூற்றாண்டு காலத்தில் முதல் முறையாக உங்கள் நாடு, உங்கள் சுதந்திரம், உங்கள் மனைவி, சகோதரிகள், பிள்ளைகளை உங்களால் பாதுகாக்க முடியும் என்பதால் இங்கு வந்திருக்கிறீர்கள்" என்று அதிபர் பேசினார்.

"இந்த நேரத்தில் எதிர்கட்சியினர் ஒடுக்கப்படாவிட்டால், அவர்கள் பொந்தில் எலிகள் ஊர்ந்து வருவது போல வருவார்கள்" என்று லூகஷென்கோ பேசினார்.

அதிபர் லூகஷென்கோ பேசிக்கொண்டிருக்கையில், மத்திய மின்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டாம் உலகப்போர் நினைவிடம் அருகே அதிபரின் எதிர்ப்பாளர்கள் சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டிருந்ததாக Tut.by இணையதளம் கூறுகிறது.

மறுபுறம் எதிர்கட்சி வேட்பாளர் டிகோனோவ்ஸ்காயாவின் ஆதரவாளர்கள் மற்ற நகரங்களில் பெருமளவில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

பெலாரூஸில் தற்போதைய நிலவரப்படி ஏராளமான அதிகாரிகள், பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஸ்லோவாக்கியாவுக்கான பெலாரூஸ் தூதர் இகோர் லெஷ்சென்யா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கும் அதே சமயம், அரசாங்கம் அவர்களின் பேச்சைக் கேட்க தயாராக இல்லாதது போலத் தோன்றுகிறது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் என்ன நடக்கிறது?

அதிபர் லூகஷென்கோ, பெலூரூஸ் நாட்டை கடந்த 26 ஆண்டுகளாக ஆட்சி செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு எதிரான நிலைப்பாட்டை பல ஐரோப்பிய நாடுகளும் எடுத்து வருகின்றன.

அதிபர் லூகஷென்கோ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அதிபர் லூகஷென்கோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மக்ரோங், அமைதியான முறையில், தங்களுடைய உரிமைகள், சுதந்திரம், இறையாண்மைக்காக போராடி வரும் லட்சக்கணக்கானோருக்காக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜெர்மன் ஆட்சித்துறை துணைத் தலைவர் ஒலஃப் ஷோல்ஸ், பெலாரூஸ் அதிபரை கெட்ட சர்வாதிகாரி என்று அழைத்தார். மக்களின் வெறுப்புணர்வை சம்பாதித்த பெலாரூஸ் அதிபர், அதிபர் பதவியை வகிக்கும் சட்டப்பூர்வ உரிமையை இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ப்ரேக் மற்றும் வார்சாவில் நூற்றுக்கணக்கானோர், அதிபர் லூகஷென்கோவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால் நாட்டில் தொடர்ந்து அமைதியின்மை தொடருவதால் ரஷ்யாவின் உதவியை அதிபர் லூகஷென்கோ நாடியிருக்கிறார்.

இரு தினங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் லூகஷென்கோ பேசியபோது, பெலாரூஸ் நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து ராணுவ உதவி தேவைப்படும் சூழல் எழும்போது, பிரத்யேகமாக உதவிகள் செய்யப்படும் என்று அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.

இரு தலைவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பேசினார்கள். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெலாரூஸில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், வெளியில் இருந்து அந்நாட்டு அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களையும் ரஷ்ய அதிபர் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: