குடியுரிமை திருத்த சட்டத்தால் வாய்ப்பு மறுக்கப்படும் இலங்கை அகதிகள்

இலங்கை அகதிகள்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இலங்கையிலிருந்து இடம்பெயர்த்து இந்தியாவில் அகதிகளாக வாழ்த்துவருகின்றனர். யுத்தம் முடிந்த பின்னர் சிலர் இலங்கை திரும்பியிருந்தாலும் பெரும்பாலோனோர் தொடர்ந்தும் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களிலே வாழ்ந்து வருகின்றனர்.

இந்திய அரசாங்கத்தினால் இப்போது நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழ அகதிகளுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு விதமான எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கின்றன.

சொந்த நாட்டில் இருக்க முடியாமல் வந்துள்ள நிலையில் இந்தியாவிலும் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதால் ஈழ அகதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற ஒரு திருத்தச்சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளமை இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகளுக்கு பெரும் நெருக்கடியினை தோற்றுவித்துள்ளதாக அகதியாக இருந்து அண்மையில் இலங்கை திரும்பிய சி. மகேந்திரம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மகேந்திரம்
படக்குறிப்பு, மகேந்திரம்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சொந்த வீடு, நிலம், தொழில் என்பவற்றை இழந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த என் போன்றோர் இன்னமும் அகதிகளாகவே இந்தியாவில் வாழ்கின்றனர். அவர்கள் தமது தாயகம் திரும்புவதற்கு தமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்படாமை மற்றும் தொழில் இன்மை போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. இதனால் அவர்கள் தொடர்ந்து இந்தியாவில் அகதிகளாகவே உள்ளனர். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஈழ அகதிகளுக்கான குடியுரிமையினை மறுத்துள்ளதால் மக்கள் தமது சொந்த நாட்டிற்கும் செல்லமுடியாமல் இந்தியாவிலும் உரிமைகள் மறுக்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு வாழும் அவலம் உருவாகியுள்ளதாக மகேந்திரம் தெரிவித்தார்.

”நான் இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கீரிமலை பகுதியில் வாழ்ந்து வந்தேன். அப்போது யுத்தம் காரணமாக சொந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்து ஒவ்வொரு பிரதேசமாக இருந்து இறுதியாக இந்தியா சென்றேன். அங்கு எனக்கு அகதி முகாம்களில் தஞ்சம் வழங்கப்பட்டது.

வருமானம் இன்மை, இடவசதி இன்மையினால் பெரிதும் கஷ்டப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து, பின்னர் எமது சொந்த நிலங்கள் பகுதியளவில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து எனது சொந்த இடத்துக்கு வந்துவிட்டேன். இதைப் போன்று ஏனைய மக்களின் நிலங்கள் வீடுகளை இலங்கை அரசு விடுவித்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கினால் மீதமுள்ள ஈழ அகதிகளும் நாடு திரும்புவார்கள்” என மகேந்திரம் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் உள்ள அகதிகளுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினையாக உள்ளது. சில முகாம்கனை விட்டு மக்கள் வெளியேற முடியாத நிலையும் உள்ளது. அவ்வாறு அவசர வேலையாக செல்வதாயின் பாதுகாப்பு அலுவலரின் அனுமதியுடனே செல்லமுடியும். ஒரு சாதாரண சிறிய தொழில் வாய்ப்பினை பெற்றுகொள்வதற்கே உரிமை மறுக்கப்படுகிறது. குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் குடியுரிமையும் மறுக்கப்பட்டால் மக்கள் பெரி்தும் துன்பப்படுவார்கள். இந்திய அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி உரிமைகளை வழங்கினால் அகதியாக வாழ்கிற மக்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வாழமுடியும் என மகேந்திரம் தெரிவித்தார்.

ம. யோகேஸ்வரி
படக்குறிப்பு, ம. யோகேஸ்வரி

"இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றவர்கள் அகதி முகாம்களில் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாகின்றனர். எமது நிலங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கபட்டதால் திரும்பி வந்துவிட்டோம். ஆனால் தமது சொந்த நிலங்கள் என்னமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படாததால் நாடு திரும்ப முடியாமல் நிறைய பேர் இந்தியாவில் அகதிமுகாம்களில் துன்பப்படுகின்றனர்" என ம. யோகேஸ்வரி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அகதி முகாமில் வழங்கப்படுகிற பணம் எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆகவே இலங்கை அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ இந்த மக்களுக்கு உழைப்பு, நில விடுவிப்பு வருமானம் என எதோ ஒரு உதவியை செய்தால் தான் மக்கள் வாழ முடியும் என யோகேஸ்வரி தெரிவித்தார்.

நாம் இந்தியா சென்றபோது அகதி முகாம்களில் தங்கவைத்து உணவு, பணம் தந்து எமக்கு அடைக்கலம் தந்தது இந்தியா. பின்பு மக்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க ஒரு குடியிருப்பில் பல குடும்பம் என தங்கவைத்தனர். இதனால் நாம் வெளிப்பதிவினை மேற்கொண்டு தனியாக வீடுகளை வாடகைக்கு பெற்று இருந்தோம். இவ்வாறு அனைவரும் செய்யும் அளவிற்கு வசதிகள் இருக்கவில்லை, தமது சொந்த நிலம் விடுவிக்கப்பட்டதை அறிந்து செஞ்சிலுவை சங்கத்துடன் கதைத்து அவர்கள் மூலம் நாடு திரும்பினோம். இந்தியவில் பிள்ளைகளின் எதிர்காலம், தொழில்வாய்ப்பு என சிக்கல்கள் உள்ளதால் நாம் நாடு திரும்பினோம். ஆனால் தமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்படாமையால் நாடு திரும்ப முடியாமல் நிறையபேர் போராடுகிறார்கள் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் யோகேஸ்வரி.

சயந்தினி
படக்குறிப்பு, சயந்தினி

"அகதியாக இந்தியா சென்ற நான் அங்கு எனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளேன் ஆனால் நான் நாடு திரும்பி மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் எனக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை" என எம். சயந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"எனது சொந்த இடம் கீரிமலை நான் சிறுவயதில் 1997ஆம் ஆண்டு எனது அம்மா, அப்பாவுடன் அகதியாக இந்தியா சென்றேன். ராமேஸ்வரம் முகாமில் இருந்து பின்பு மதுரைக்கு சென்றோம் அங்கு பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்தேன் பின்பு அம்மா சொந்த ஊருக்கு போகலாம் வீடு கட்டலாம் என கூறி அழைத்து வந்துவிட்டார். இங்கு வந்த பிறகு நிறைய வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்தும் எனக்கு இன்னமும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால் நல்லம் என நினைக்கிறேன்" என சயந்தினி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: