சமந்திகா குமாரசிங்க: ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

பட மூலாதாரம், SAMANTHIKA
2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார்.
மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
21 நாடுகளை சேர்ந்தோர் இம்முறை போட்டியில் போட்டியிட்டுள்ளனர்.
வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரே சமந்திகா குமாரசிங்க, ஒரு பிள்ளையின் தாயாவார்.
2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக அழகு கலை கலைஞராக முதல் முதலில் இந்த துறைக்குள் சமந்திகா குமாரசிங்க பிரவேசித்தார்.

பட மூலாதாரம், SAMANTHIKA
அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பல முன்னணி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
விளம்பரங்கள் மாத்திரமன்றி சில தொலைக்காட்சி நாடகங்களிலும் சமந்திகா குமாரசிங்க நடித்துள்ளார்.
இந்த நிலையில், ''கொழும்பு பேஷன் வீக்" நிகழ்ச்சியில் அழகு கலைஞராக பங்கு பெற்றிருந்த நிலையிலேயே, சமந்திகா குமாரசிங்க திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
அதன்பின்னர், அழகு கலைத்துறையிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்ற அவர், 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை திருமதி அழகி போட்டியில் பங்குப்பற்றியுள்ளார்.
எனினும், அந்த போட்டியில் அவருக்கு எந்தவித இடமும் கிடைக்காத நிலையில், 2019 ஆசிய திருமதி அழகி போட்டிக்குள் பிரவேசித்துள்ளார்.
இந்த போட்டியிலேயே ஆசிய திருமதி அழகி மற்றும் சிறந்த பாரம்பரிய ஆடை அழகியாகவும் சமந்திகா குமாரசிங்க தெரிவாகி, இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பட மூலாதாரம், SAMANTHIKA
இலங்கையை சேர்ந்த ஸ்ரீமாலி பொன்சேகா (2015 - 2016 ) மற்றும் நிலு சேனாரத்ன( 2016 - 2017 ) இதற்கு முன்னர் ஆசிய திருமதி அழகி கிரீடத்தை வென்றுள்ளனர்.
2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கீரிடத்தை இலங்கையைச் சேர்ந்த கெரோலின் ஜுரி கடந்த 6ஆம் தேதி வெற்றிக்கொண்டிருந்தார்.
அமெரிக்கா - லெக்வேகாஸ் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியிலேயே அவர் இந்த கீரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

பட மூலாதாரம், SAMANTHIKA
35 வருடங்களின் பின்னரே இலங்கைக்கு இந்த கீரிடம் கிடைத்துள்ளது.
1984ஆம் ஆண்டு முதற்தடவையாக இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அந்த முதல் போட்டியிலேயே இலங்கைக்கு திருமதி உலக அழகி கிரீடம் கிடைத்திருந்தது.
கொழும்பு மேயராக கடமையாற்றும் ரோஸி சேனாநாயக்க 1984ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கிரீடத்தை தனதாக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












