அப்போது கடனாளி, இப்போது கோடீஸ்வரர்: வெங்காயத்தால் இவரது வாழ்க்கை மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - வெங்காயத்தால் மாறிய வாழ்க்கை
சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி.
42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம் லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட்.
அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள்.
கடந்த காலங்களில் அதிகம் நஷ்டத்தையே சந்தித்த தான், மேலும் ஐந்து லட்சம் கடன் வாங்கியே தனது நிலத்தில் பயிரிட்டதாகத் தெரிவிக்கிறார் அந்த விவசாயி.

தினமணி - மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு செய்தி

பட மூலாதாரம், Getty Images
மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்கிறது தினமணியின் செய்தி.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் முழு விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முகமையின் (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் வருகைப் பதிவு விவரமும் தினமும் எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர்களால் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே மாணவர்களின் வருகைப் பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கல்வித் துறை திட்டமிட்டது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் விடுப்பு எடுக்க முடியாது என்கிறது அச்செய்தி.

தினகரன் - அறிமுகமாகும் ஃபாஸ்டேக்

பட மூலாதாரம், Getty Images
நாடு முழுவதும் உள்ள தேசிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 'பாஸ்டேக்' கட்டண முறை கட்டாயமாகிறது என்கிறது தினகரன் செய்தி.
இந்த திட்டத்தினால், பஸ் மற்றும் லாரிகள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் வேகமாக செல்லும் என்பதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் சுமார் 540 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில், நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தானியங்கி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை (பாஸ்டேக்) அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்தமுறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடியிலும், தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்யேகமாக 'பாஸ்டேக்' என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், செல்வதற்கு 'பாஸ்டேக்' என்ற கார்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த கார்டை அனைத்து சுங்கச்சாவடியிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக பாஸ்டேக் கார்டுகள் சில ஏஜென்ஸிகள் மூலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு பெற்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். பிறகு வங்கியின் மூலமாக முன்னரே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி புக், உரிமையாளரின் போட்டோ, லைசென்ஸ், பான் கார்டு விபரங்கள் கேஓய்சி படிவமாக இருக்க வேண்டும். பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பிறகு அந்த கார்டை தமது வாகனத்தில் உள்ள கண்ணாடியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரீசார்ஜ் செய்யப்பட்ட கார், சுங்கச்சாவடியில் நுழைந்த உடன், அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒரு இயந்திரம் கண்ணிமைக்கும் நொடியில் வாகனத்தின் வருகையை கண்டறிந்து பதிவு செய்து விடும் என்று விவரிக்கிறது அச்செய்தி.

இந்து தமிழ் திசை - சென்னையில் நீராவி ரயில்

பட மூலாதாரம், இந்து தமிழ் திசை
சென்னையில் 164 ஆண்டுகள் பழமையான நிராவி இன்ஜின் எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
இந்திய ரயில்வேக்கு சொந்தமான இந்த ரயில், நீராவியால் இயங்கும் பழமையான தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இந்த ரயிலில் பயணிக்கும் அனுபவத்தை சென்னை மக்களுக்கு அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, நீராவி இன்ஜின் ரயில், எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று காலை 11 மணிக்கு தன்னுடைய முதல் பயணத்தைத் தொடங்கியது. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த ரயில் ஒரே நாளில் 4 முறை இயக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- இந்தோனீசிய குகையில் 44,000 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
- போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் மோதி என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
- இலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா? - இருவர் கைது
- 300 ஆண்டுகள் பழமையான ஆண்குறி வடிவ மீன்கள் தென்பட்டது எப்படி?
- சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனை எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












