பாத்திமா லத்தீப் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

பாத்திமா

பட மூலாதாரம், Twitter

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதாக பதிவான வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் 9ம் தேதி ஐஐடி வளாகத்தில் அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு பதிவானது.

பாத்திமாவின் இறப்புக்கு ஒரு பேராசிரியர் கொடுத்த அழுத்தம் காரணம் என அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதேநேரம், இந்த வழக்கை முறையாக விசாரிக்கவேண்டும் என பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர். பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல்கட்சியினர், பாத்திமாவின் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் அவரது மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஆணையர் விஸ்வநாதன் நவம்பர்15ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். விசாரணைக் குழுவில் ஒரு பெண் அதிகாரி உள்பட, சிபிஐ-யில் பணிபுரிந்த இரண்டு உயரதிகாரிகளான ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.

தனது மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள் என உறுதியாக நம்புவதாக கூறிய தந்தை லத்தீப் தமிழக முதல்வர், தமிழக டிஜிபி உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்புகளில் தனக்கு நம்பிக்கைஇருப்பதாக தெரிவித்திருந்தார்.

டிசம்பர் மாத தொடக்கத்தில், கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் லத்தீப் குடும்பத்தினர், பிரதமர் மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவர்களைச் சந்தித்து சிபிஐ விசாரணை தேவை என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

'சிபிஐ விசாரித்தால் மகிழ்ச்சியே'

இதுகுறித்து பாத்திமாவின் தந்தை லத்தீப்பிடம் கேட்டபோது, "நான் எனது மகளின் இறப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தபோது, அவர்கள் இதுகுறித்து நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதாக கூறப்படுகிறது; ஆனால், அதுகுறித்து எனக்கு எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: