பாத்திமா லத்தீப் மரணம்: தொடரும் ஐஐடி தற்கொலைகள் - சாதி மதப் பாகுபாடுதான் காரணமா?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
பாத்திமா லத்தீப், ரஞ்சனா குமாரி, ஷாஹுல் கொரநாத்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறியப்பட்ட நபர்கள் இவர்கள்.
சென்னை ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் தற்கொலை முடிவுகளை ஏன் எடுக்கிறார்கள்? அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என தெரிந்துகொள்ள மாணவர்களிடம் பேசினோம். பெயரை வெளியிட விரும்பாத மாணவர்கள் பேசுவதற்கு முன்வந்தார்கள். ஒரு சிலர் அலைபேசியில் பேசுவதைவிட தகவலை மட்டும் இணையத்தில் அனுப்பினார்கள். இன்னும் சிலர் சமூகவலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
'குறைவான மதிப்பெண் அல்லது குறைவான வருகைப் பதிவே தற்கொலைக்கு காரணம் என்று சிலர் ஒட்டுமொத்தப் பிரச்னையை திசை திருப்பப் பார்க்கிறார்கள்' என்று சில மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ''மாணவர்கள் மட்டுமல்லாமல் சமீபத்தில் துணைப் பேராசிரியர் ஒருவர் கூட தற்கொலை செய்துகொண்டார், அவருக்கு மதிப்பெண் பிரச்சனை இல்லை. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சூழல் மோசமாகிவருகிறது என்பதைத்தான் இந்த மரணங்கள் காட்டுகின்றன,''' என்கிறார்கள் மாணவர்கள்.
சமீபத்தில் இறந்த முதலாமாண்டு மானுட வாழ்வியல் (humanities) துறை மாணவி பாத்திமா லத்தீப் குடும்பத்தினர் ஊடகங்களில் பேசும்போது பாத்திமா தற்கொலை செய்துகொண்டது போல தெரியவில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட பேராசிரியரின் பெயரை சொல்லி அவர்தான் தங்களது மகளின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறிவருகிறார்கள்.

பிபிசி தமிழிடம் பேசிய பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், பாத்திமா மிகவும் நேசித்துதான் சென்னை ஐஐடி வந்து சேர்ந்ததாக குறிப்பிட்டார். ''என் மகள் ஐஐடி-யில் படித்துவிட்டு குடிமைப் பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெல்லவேண்டும் என்ற இலக்கு வைத்திருந்தாள். அவள் தற்கொலை செய்துகொள்ள கயிறு எங்கிருந்துவந்தது? செல்போனில் பல குறிப்புக்கள் நிச்சயமாக இருக்கும். அவளது செல்போனை எங்கள் முன்னே திறக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறேன்,'' என்றார்.
மேலும், ''பாத்திமா துன்புறுத்தல்களை சந்தித்துள்ளது உண்மை. என் மகள் எப்போதும் கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவள் என்பதால் கட்டாயமாக தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்பதை எழுதிவைத்திருப்பாள். இது தற்கொலை போலத் தெரியவில்லை,''என்றார் லத்தீப்.
பாத்திமாவின் தாய் ஊடகங்களில் பேசும்போது தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால்தான் சென்னை ஐஐடி-யை தேர்வு செய்ததாக கூறினார். ''நாட்டில் உள்ள நிலையை கருத்தில் கொண்டு, தமிழகம் பாதுகாப்பானது என்று முடிவுசெய்து, இஸ்லாமியர் என்ற அடையாளம் வெளிப்படையாக தெரியாமல், முக்காடு அணியாமல்தான் பாத்திமா வகுப்புக்கு சென்றாள்,''என்று கூறியுள்ளார்.
ஐஐடி சென்னை மாணவர்கள் சிலர் வளாகத்தில் சாதி, வர்க்கம் மற்றும் மத ரீதியான ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய மாணவர்கள் சிலர் மாணவர்களின் மேம்பாட்டிற்காக, நிர்வாகத்திற்கு வெளியே செயல்படும் வல்லுநர்கள் கொண்ட குழுவை உருவாக்கவேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். ''முறையாக தேர்தல் நடத்தி மாணவர் அமைப்பை தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது தேர்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பு ஒரு மாநிலத்திற்கு சட்டமன்றம் எவ்வளவு முக்கியமோ அதனைப்போல முக்கியத்துவம் பெற்றது.
அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்களின் நலனுக்காக ஒரு கோரிக்கை வைத்தால், அதனை எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்திவைக்கிறார்கள். சாதிரீதியான, மதரீதியான ஒடுக்குமுறைகள் ஏராளம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்,'' என்கிறார்கள் மாணவர்கள். (பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாணவர்கள் விரும்பவில்லை)
பெயர் குறிப்பிடாமல் இரங்கல்
மாணவர்கள் இறந்துபோனால், அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடாமல் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது என இரங்கல் செய்தி ஈமெயில் வரும் என்கிறார் ஒரு மாணவர்.
''பாத்திமா விவகாரம் பெரும் சர்ச்சையாகிவிட்டதால் ஐஐடி நிர்வாகம் செய்திஅறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூட தற்கொலைக்கு காரணமானவர்கள் தெரிந்தால் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிடவில்லை. நிர்வாகத்தில் உள்ள பேராசிரியர்கள் நேர்மையானவர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் எந்த விதத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என இதில் இருந்து புரிந்துகொள்ளுங்கள்,'' என்கிறார்கள் மாணவர்கள்.
மன நல மருத்துவர் டாக்டர் ஷாலினி கருத்து
ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் பலருக்கு சிகிச்சை அளித்துள்ளதாக கூறும் மனநல மருத்துவர் ஷாலினி தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில், சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை மாணவர்கள் சந்தித்ததாக கூறுகிறார்.
''என்னிடம் ஆலோசனைக்காக வந்த மாணவர்கள் எந்தவித காரணமும் சொல்லாமல் தங்களுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதாகவும், அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். தங்களால் முடியாத நிலையில்தான் எங்களிடம் வருகிறார்கள். மாணவர்களின் சாதி, உணவு, மொழி பேசும் விதம் பிரச்சனையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஐஐடி வளாகம் தங்களுக்கான இடம் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்கிறார்கள். பாத்திமாவின் தற்கொலை குறித்து விசாரணை நடந்துவருவதால், அவரின் மரணத்திற்கு என்ன காரணம் என தெளிவாக சொல்லமுடியவில்லை. ஆனால் தொடர்ந்து தற்கொலைகள் நடப்பதற்கு என்ன காரணம் என ஆராயவேண்டும்,'' என்கிறார் ஷாலினி.

பட மூலாதாரம், SHALINI / FACEBOOK
நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி சென்னை ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 72 புகார்கள் பதிவாகியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ஒத்துக்கொண்டுள்ளார் என குறிப்பிட்டார். ''நாம் மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறோம்?" என்று கேள்வி கேட்டார்.


இதுவரை யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாம் வெட்கப்படவேண்டும். பாத்திமாவின் மரணத்திற்கு யார் காரணம் என பெற்றோர் தெளிவாக கூறுகிறார்கள். இது வரை முதல் தகவல் அறிக்கை கூட பதியவில்லை. யாரை காப்பாற்றப் பார்க்கிறது அரசு,'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
''இந்த கல்வி நிறுவனங்களில் காட்டப்பட்டுவரும் பாகுபாடுகளால் மாணவர்கள் தற்கொலை செய்யப் போகிறார்கள் என்றால், அந்த கல்வி நிறுவனம் அவ்வாறு செயல்பட அனுமதிக்கக் கூடாது. உயர்கல்வி நிறுவனங்கள் பாரபட்சம் காட்டும் இடமாக செயல்படக் கூடாது. நாம் இந்த தலைமுறையினருக்கு கல்வி என்று எதனை கற்பிக்கிறோம்," என்றும் அவர் பேசினார்.
பதில் தர விரும்பவில்லை என்கிறது ஐ.ஐ.டி.
இந்திய அரசின் உயர் கல்வித் துறை செயலாளர், ஆர்.சுப்ரமண்யம், சென்னை ஐ.ஐ.டி. வந்து ஃபாத்திமா லத்தீஃப் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாத்திமாவின் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் தற்போது விசாரணை நடந்துவருவதால், எந்த தகவலையும் தெரிவிக்கமுடியாது என்கின்றனர். இந்த வழக்கில் சிபிஐயில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னர் தெரிவித்திருந்தார்.
மாணவர்கள் கூறிய புகார்களை முன்வைத்து, தற்கொலைகளைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மாணவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா என்றும் கேட்டு சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான புகார் குழுவின் தலைவராக உள்ள ஹேமா மூர்த்தி ஆகியோருக்கு மின்னஞ்சல் செய்தோம். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சென்னை ஐஐடி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம்.
பிபிசி தமிழிடம் பேசிய துணைப் பதிவாளர் ரேஷ்மி,'' சென்னை ஐஐடி நிர்வாகம் தற்போது பதில் தர விரும்பவில்லை,'' என்று தெரிவித்தார் .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













