நீரில் பயணிக்கும் சைக்கிள் படகு: கிராமத்திற்கு நீர் கிடைக்க உதித்த புதிய யோசனை
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்டது பாலபட்டு கிராமம், இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் உள்ள மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்குவதற்காக நீரில் பயணம் செல்லும் சைக்கிள் படகு ஒன்றை குடிநீர் பணியாளரின் நலன் கருதி வடிவமைத்திருக்கிறார் பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன்.
பாலப்பட்டு கிராமத்தில் 542 குடும்பங்கள் என மொத்தம் 3167 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கிராமத்தில் உள்ள ஐந்து நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக தான் நீரானது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகள் மொத்தமாக 1லட்சத்து 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.
மேலும் நீர்த்தேக்க தொட்டிககள் அனைத்திற்கும் பாலப்பட்டு கிராமத்தின் பெரிய ஏரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து தான் நீரானது நிரப்பட்டு வருகிறது. அந்த கிணற்றில் இருந்து நீரை, நீர் தேக்க தொட்டிகளுக்கு செலுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஏரியின் மையப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே இருக்கும் அறைக்குச் சென்று மின்விசை மோட்டார் இயந்திரதை இயக்கி வருகின்றனர்.

குறிப்பாக வெயில் காலங்களில் ஏரி வற்றி இருக்கும் என்பதால் சுலபமாக நடந்து சென்று மின்விசை மோட்டார் இயக்கப்படும், ஆனால் மழைக்காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பி இருக்கும் என்பதால் மின்விசை மோட்டார் இயக்குபவர் லாரி டயர் டியூபை மாட்டிக்கொண்டு 25அடிகளுக்கு மேல் ஆழம் உள்ள ஏரியில், 300மீட்டர் தூரம் மிதந்து சென்று தான் மின்விசை மோட்டாரை இயக்கிய பிறகு மறுபடியம் கரைக்கு மிதந்து வரும் சூழல் நிலவி வந்தது. இவ்வாறு மோட்டரை இயக்குவதற்காக நீரில் பயணம் செய்யும் போது சில நாட்கள் ஏரியில் உள்ள முற்களால் டயர் டியூப் பஞ்சர் ஆகிவிடும் இதனால் மோட்டார் இயக்குபவர் பாதியிலே நீச்சல் தெரிந்த காரணத்தால் நீந்திக் கரை வந்துவிடுவார்.

இவ்வாறு மின்விசை மோட்டார் இயக்குவதற்காக ஏரியைக் கடந்து சென்று வந்த மோட்டார் இயக்குபவரின் பாதுகாப்பு நலன் கருதி பாலப்பட்டு ஊராட்சி செயலர் பாலமுருகன் தனது சொந்த முயற்சியில் சைக்கிள் வடிவிலான படகு ஒன்றை ஏரியில் பாதுகாக்க பயணம் செல்லும் விதமாக 13,600 ரூபாய் செலவில் தயார் செய்திருக்கிறார்.
இந்த சைக்கிள் விசைப்படகு நீரின் மேல் மிதப்பதற்கு ஏதுவாக பிவிசி பைப்புகள் பயன்படுத்தப்பட்டு, இதை இயக்குபவர் ஏற்ற திசையில் வளைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படகு முன்னும் பின்னும் நகர்வதற்கு ஏற்றாற்போல் பின்புறம் துடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்க தொட்டிகளை நிரப்புவதற்காக சைக்கிள் படகு மூலம் ஏரியில் சுலபமாக பயணம் செய்து மின்விசை மோட்டாரை இயக்கி வருகிறார் குடிநீர் பணியாளர்.
சைக்கிள் படகு வடிவமைத்தது குறித்து ஊராட்சி செயலர் பாலமுருகன் கூறுகையில், "மழைக் காலங்களில் ஏரி நிறையும் போது உள்ளே சென்று, மோட்டோரை இயக்குவது பெரிதும் சவாலாக இருந்தது. இதன் காரணமாக லாரி டயர் டியூபை மாட்டிக்கொண்டு 300மீட்டர் மிதந்து செல்லும் சூழல் இருந்தது, இதனால் சில நேரங்களில் டயர் பஞ்சராகி பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து தானியங்கி முறையை பயன்படுத்தினோம் ஆனால் அதுவும் ஒத்துழைக்கவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் மின்விசை மோட்டாரை இயக்குவதற்கு டயர் டியூபை மட்டுமே பயன்படுத்தி வந்தோம். மேலும் மோட்டார் பழுதடைந்தால் அதை சரி செய்வதற்கு எலெக்ட்ரீஷியன் உள்ளே வர அச்சம்படுவதால் அவர்களும் வருவதில்லை," என்கிறார் அவர்.

தொடர்ந்து, "மின்விசை மோட்டார் இயக்குபவரின் நலன் கருதியும்,கிராம மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் ஏரியில் பயணம் செய்யும் வகையில் படகு ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டேன். அதை தொடர்ந்து பிவிசி பைப்புகள் கொண்டு படகு செய்ய முடிவெடுத்து, பைப்புகள் மேலே மோட்டாரை பொருத்தினால் சுமைத் தாங்காமல் மூழ்கிவிடும் என்பதால் அதன் மீது எடைகுறைவான சைக்கிளை பொருத்தலாம் என்று தோன்றியது, பிறகு சைக்கிளை பிவிசி பைப்புகள் மீது பொருத்தப்பட்டு, அதை இயக்குவதற்கு ஏதுவாக சைக்கிள் பெடலில் வரும் செயினை பின்புறம் துடுப்பை சுழற்றுவது போல அமைக்கச்செய்தேன்.
இதனால் சைக்கிள் மிதிவண்டியில் பயணம் செல்லுவது போல ஏரியில் படகின் சைக்கிள் மிதியை(பெடல்) கால்களால் சுழற்றும்போது பின்புறம் துடுப்பானது இயங்க தொடங்குகிறது, இதன் மூலம் சைக்கிள் படகு உதவியுடன் சுலபமாக மின்விசை மோட்டாரை இயக்க முடிகிறது. இதனால் மோட்டாரை இயக்குபவர் பாதுகாப்பாக சென்றுவர முடிகிறது," என தெரிவித்தார்.
சைக்கிள் படகில் பயணம் செய்வது குறித்து மின்விசை மோட்டார் இயந்திரத்தை இயக்கம் குடிநீர் பணியாளர் கூறுகையில், "இதற்கு முன்பு மோட்டாரை இயக்குவதற்கு ஏரியில் லாரி டயர் டியூபை மாட்டிக்கொண்டு பயணம் செல்லும்போது ஏரிகளில் உள்ள முற்கள் பட்டு டியூப் பஞ்சராகிவிடும், சில நேரம் செல்லும் வழியில் பாம்புகள் மற்றும் பெரிய பல்லிகளால் பயந்து பயந்து செல்வேன். ஆனால் தற்போது ஊராட்சி செயலர் வடிவமைத்து கொடுத்த சைக்கிள் படகில் பயணம் செல்வதால் சுலபமாகவும் பாதுகாப்பாகவும் எங்களால் மின்விசை மோட்டாரை இயக்க முடிகிறது. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் சென்றுவர உதவுகிறது," என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













