இலங்கை : மசூதிகள் மீது தொடரும் தாக்குதல்கள்
இலங்கையில் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியிருப்பதாக முஸ்லீம் சமூகத்தினரால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டம் நாரம்பல பிரதேசத்திலே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அந்த பிரதேசத்தில் ஒரு வார காலத்திற்குள் மூன்று இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நள்ளிரவு வேளைகளில் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸில் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு இரு வழிபாட்டு தலங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் வழிபாட்டு தலமொன்றின் உள்ளே சிறு நீர் கழித்தும் அசிங்க படுத்தியுள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பொல்கஹாயா பள்ளி வாசல் மீதும் கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குலில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்ற இவ்வேளையில், இது போன்ற தாக்குதல்கள் அந்த பிரதேச முஸ்லீம்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பள்ளிவாசல் மீதான தாக்குதல்களின் பின்னணி கண்டறியப்பட்டு சூத்திரதாரிகள் இனம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் " என்கின்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வட மேல் மாகாண துணை போலீஸ் மா அதிபதி ஜகத் அபேயசிறி குணவர்த்தனாவை தொடர்பு கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளதாக அமைச்சக ஊடகப் பிரிவு கூறுகின்றது.
இதனிடையே, இறுதியாக நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 4 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளிவாசலுக்கு அண்மித்த வியாபார நிலையமொன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா ஆய்வுக்கு உட்டுபடுத்தப்பட்ட பின்னர் இந்த கைதுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












