மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் எதிர் கட்சிகள் கோரிக்கை

அதிமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியதை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்து, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று (ஞாயிறுக் கிழமை) ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டிய நிலை உள்ளது என திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள விரிவான கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளதாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

துரைமுருகன் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய தாரணி மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அபு பக்கர் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்து கால தாமதம் ஏற்பட்டால் அதிமுகவில் மீண்டும் குதிரை பேரம் நடத்தப்படும் நிலை இருப்பதாக தெரிவித்தனர்.

கடந்த வாரம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்த பிறகு, தற்போதைய முதல்வரிடம் நம்பிக்கை இல்லை என டிடிவி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஆளுநரிடம் கடிதத்தை அளித்துள்ளனர்.

இந்த சூழலை சுட்டிக்காட்டி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

உடனடியாக ஆளுநர் எடப்பாடி அரசு மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால் மட்டுமே தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட அரசு, சட்டப்படி ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

''அதிமுக பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதற்கு அந்த கட்சியில் உள்ளவர்களே சாட்சியாக உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் அணியில் வெறும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நேரத்தில், சசிகலா அணியினர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ளார்,'' என்றர் துரை முருகன்.

தொடர்புடைய செய்திகள்:

''தற்போது டி டி வி அணியில் 22 சட்டமன்ற உறுப்பினர்கள், 23ஆக உயர்ந்துள்ளதாகக் கேள்விப்பட்டேன், இவர்கள் இணைந்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய பிறகும் மெஜாரிட்டி இல்லாமல் அரசாங்கம் செயல்படுவது சட்டத்திற்கு புறம்பானதாக இருக்கும்,'' என்று துரைமுருகன் கூறினார்.

அவர் மேலும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை ஆளுநர் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் குடியரசு தலைவரைச் சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் வகித்து வந்த சேலம் புறநகர் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :