உல்லாச விடுதியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருப்பது ஏன்? டிடிவி தினகரன் புது விளக்கம்

தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, எதிர்த்தரப்பு வாங்கிவிடும் என்ற அச்சத்தால் அவர்கள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்படவில்லை என்றும் கட்சியை சசிகலாதான் வழிநடத்த முடியும் என்பதை உணர்த்துவதற்காகவே அவர்கள் அங்கு தங்கியிருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

தினகரன்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்த பிறகு, இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்காத டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"தியாகத்திற்கும் துரோகத்திற்குமான யுத்தத்தில் 19 பேர் அங்கே சென்றிருக்கிறார்கள் என்றால், அவர்களை வாங்கிவிடுவார்கள் என்பதற்காக பயந்துகொண்டு அங்கே செல்லவில்லை. இந்தியத் துணைக் கண்டமே தமிழக சூழலை கவனிக்கிறது. தங்கள் கோரிக்கையை ஆளுநர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார் தினகரன்.

மேலும், பணம் பாதாளம் வரை பாயும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைச் சுட்டிக்காட்டிய தினகரன், "எங்கள் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் பணம் பாதாளம் வரை பாயாது. கட்சியை பொதுச் செயலாளர்தான் வழிநடத்த முடியும் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தத்தான் அவர்கள் விடுதியில் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த போது
படக்குறிப்பு, டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தபோது

ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியும் விருத்தாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வனும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால், 135 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.கவில் 21 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தினகரனுக்கு இருக்கிறது.

இதற்கிடையில், சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டுமென குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ராமச்சந்திரன் கூறியிருக்கிறார்.

ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினராகிவிட்டு, அதே ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொல்வது வெட்கக்கேடாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :