அதிமுகவை நானே வழிநடத்துவேன்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு, ``2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார் செய்ய மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்"

கட்சியின் பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவருடைய அதிகாரத்தை தானே செயல்படுத்தும் நிலையில் இருப்பதாக அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டாகப் பிளவுபட்டது. சசிகலா தலைமையிலான பிரிவு அ.தி.மு.க. அம்மா பிரிவு என்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா பிரிவு என்றும் அழைக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றார்.

ஆனால், அதற்குப் பிறகு அ.தி.மு.கவின் இரு அணிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, சசிகலாவும் டிடிவி தினகரனும் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அணி நிபந்தனை விதித்தது. தமிழக அமைச்சர்களும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், Getty Images

தான் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக தினகரனும் கூறினார். ஆனால், அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, சில மாதங்கள் அவகாசம் கொடுக்கப்போவதாகவும் அதற்குள் இரு பிரிவுகளும் இணையாவிட்டால், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். அந்த அவகாசம் ஆகஸ்ட் நான்காம் தேதி முடிவடைகிறது.

இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாக பல சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, தினகரன் கட்சித் தலைமையகத்தில் தன் ஆதரவாளர்களைச் சந்திக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "எதற்காக கால அவகாசம் அளித்தேனோ அதில் எள்ளளவும் முன்னேற்றமில்லை. கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நான் என் பணியைச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் என்னை வந்து சந்தித்துச் செல்கிறார்கள். அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றும், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும் நோக்கிலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு பிறகு தனது திட்டங்களை வெளியிடப்போவதாகவும் தினகரன் கூறினார்.

"பொதுச் செயலாளர் செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான்தான் அவருடைய அதிகாரத்தைச் செயல்படுத்தும் நிலையில் இருக்கிறேன்" என்றும் தினகரன் தெரிவித்தார்.

கட்சியும் ஆட்சியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையில்தான் இருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்துக் கேட்டபோது, "கட்சியை வழிநடத்த வேண்டிய இடத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்ற இடத்தில் இருப்பதால் எனது பணியை நான் நிச்சயம் செய்வேன்" என்று மட்டும் கூறினார் தினகரன்.

அ.தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இணையக்கூடும் என்ற செய்திகள் வெளியாவது குறித்துக் கேட்டபோது, யூகத்தின் அடிப்படையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

கட்சியை பலப்படுத்தும் பணிகளில், பிரிந்துசெல்பவர்களை இணைப்பதும் அடங்கும் என்றும், ஏதோ அச்சத்தினால்தான் தான் ஒதுங்கியிருக்க வேண்டுமென அவர்கள் கூறினார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

தற்போது ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. அம்மா பிரிவுக்குள் தன்னை வலுப்படும் முயற்சிகளை முதலமைச்சர் பழனிச்சாமி மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் தினகரன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :