ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையப்போவது யார்? சூடுபிடிக்கும் இறுதிக்கட்டம்

ஐபிஎல்

பட மூலாதாரம், IPL

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' எனும் வசனத்திற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தை தந்து கொண்டிருக்கிறது ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர்.

ஐபிஎல் போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் அணிகள் ஒருசேர பிளே ஆஃப்க்குள் நுழைய முடியாமல் போனது இதுவே முதல்முறை

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், பேர் சொல்லும் அளவுக்கு வீரர்கள் இல்லை, 'கத்துக்குட்டி அணி' என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட அறிமுக அணிகளான குஜராத் டைடன்சும், லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸும் புள்ளிப்பட்டியலில் கோலோச்சும் அதே நேரத்தில் ஃப்ளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்திருக்கின்றன.

10 அணிகளில் 5 அணிகளின் முடிவு தெரிந்துவிட்ட நிலையில் எஞ்சிய 5 அணிகள் ஃப்ளே ஆஃப்க்குள் நுழைய தீவிரமாக போராடுகின்றன. ஒவ்வொரு அணியும் ஃப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய பிற அணிகளையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பிளே ஆஃப் படிக்கட்டுகளில் ஏற ஒவ்வொரு அணிகளின் வெற்றி தோல்வியும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் நெட் ரன் ரேட்டிலும் சிறந்து விளங்குவதோடு 16 புள்ளிகளை வைத்திருக்கிறது. நாளை (மே 20) நடைபெறும் சி.எஸ்.கேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றால் ராஜஸ்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

அதேசமயம், ப்ளே ஆஃப்க்குள் நுழையப் போகும் 4வது அணியை தீர்மானிப்பதற்கான போட்டி சூடுபிடிக்கும்.

பிளே ஆஃப்க்குள் நுழைய டெல்லிக்கு அதிகபடியான வாய்ப்பு இருக்கிறது. தற்போது 4வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ், 14 புள்ளிகளுடன் பாசிடிவ் ரன் ரேட் வைத்திருக்கிறது.

மே 21ஆம் தேதிபதஹ நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றிபெறும் பட்சத்தில் ஃப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும். ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் எஞ்சிய ஆட்டங்களில் தோல்வியடைந்தால் டெல்லியின் ஃபிளே ஆஃப் வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது.

ஐபிஎல்

பட மூலாதாரம், BCCI/ IPL

ஒருவேளை டெல்லி தோல்வியடைந்தால், அது பெங்களூருக்கு சாதகமாக அமையும். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைடன்ஸ்-ஐ இன்று (மே 19ம் தேதி) எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. ஏற்கனவே குஜராத்திடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது பெங்களூரு அணி.

இதற்கு பதிலடி கொடுப்பது மட்டுமின்றி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் ஃப்ளே ஆஃப்க்குள் நுழைய முடியும். பலம் மிக்க அணியாக பெங்களூரு திகழ்ந்தாலும் நெகடிவ் ரன் ரேட் அந்த அணிக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. குஜராத்திற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில், கூடுதல் ரன் ரேட்டை ஈட்டுவதோடு, ராஜஸ்தான், டெல்லி அணிகள் எதிர்வரும் ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினால் பெங்களூருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இந்த இரு அணிகள் தவிர, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய சிறியளவில் வாய்ப்பு இருக்கிறது.

இரு அணிகளும் தங்கள் எஞ்சிய ஆட்டங்களில் அபார வெற்றியை பதிவு செய்து அதிக நெட் ரன் ரேட்டுடன் புள்ளிகள் பெற வேண்டும். டெல்லி, பெங்களூரு அணிகள் படுதோல்வி அடையும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழைய வாய்ப்புள்ளது. ஆனால் இது சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல. எது எப்படியோ, ஃப்ளே ஆஃப் விளையாடப் போகும் அணிகளை அடுத்த 3 நாட்களில் அறிந்து கொள்ளலாம். மும்பை, சென்னை என இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாத பிளே ஆஃப் ஆட்டங்களும் இறுதிப்போட்டியும் எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

காணொளிக் குறிப்பு, சிஎஸ்கே அதிரடி வெற்றி - ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: