ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? - வெற்றியை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

ஜடேஜா

பட மூலாதாரம், BCCI / IPL

படக்குறிப்பு, ஜடேஜா
    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

பெஸ்ட் ஃபினிசராக போற்றப்பட்ட தோனியால் கூட இந்த முறை போட்டியை முடித்துக் கொடுக்க முடியவில்லை. கடைசி ஓவரில் சி.எஸ்.கே வெற்றி பெற 27 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தை சிக்சருக்கு விளாசினார் தோனி. ஆனால், 3வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, சி.எஸ்.கேவின் தோல்வியும் உறுதியானது. அதுவரை 1 சிக்சர் கூட விளாசாத கேப்டன் ஜடேஜா, கடைசி 2 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் சிக்சர் விளாசினார். இருந்தாலும் என்ன பயன்?. பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சரிவில் இருந்து அணியை மீட்க போராடிய ராயுடுவின் முயற்சியும் வீண்போனது.

மும்பை வான்கடேவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் விடைபெற்றாலும் ஷிகர் தவான் - பனுகா ராஜபக்ஷ ஜோடி நிதானம் காட்டியது. ராஜபக்ஷ 1 ரன் எடுத்திருந்த சமயத்தில் கெய்க்வாட் அவரது கேட்சை தவறவிட்டார். விளைவு ராஜபக்ஷ சிறப்பாக விளையாடி 42 ரன்கள் சேர்த்தார்.

கேட்ச்சில் கோச்சிங் தேவை

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை கோட்டைவிட்ட அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 13 கேட்ச்களை நழுவவிட்டிருக்கிறது சி.எஸ்.கே. இதற்காக சில வெற்றிகளையும் தாரைவார்த்திருக்கிறது. மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 37 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஐபிஎல்லில் இது அவருக்கு 46வது அரைசதம். களத்தில் நங்கூரமிட்ட அவர், 59 பந்துகளில் 2 சிக்சர் 9 பவுன்டரி விளாசி 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் மைல்கல்லை எட்டியிருக்கிறார் ஷிகர் தவான்.

இதில் அதிகபட்சமாக சி.எஸ்.கேவுக்கு எதிராக மட்டும் அவர் 1029 ரன்கள் விளாசியுள்ளது கவனிக்கத்தக்கது. தனது பங்குக்கு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியம் லிவிங்ஸ்டன் வெறும் 7 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுன்டரி என 19 ரன்கள் எடுத்து விடைபெற்றார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளேயில் தடுமாறும் சென்னை

188 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது சி.எஸ்.கே. 10 ரன்களுக்கு முதல் விக்கெட், 30 ரன்களுக்கு 2வது விக்கெட் 40 ரன்களுக்கு 3வது விக்கெட் என அடுத்தடுத்து சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் நடையைக்கட்டினர். பவர் பிளேயில் சி.எஸ்.கேவின் பேட்டிங் சராசரி வெறும் 20.50 மட்டுமே. நடப்பு தொடரில் இதுவரை பவர்பிளேயில் மட்டும் 16 விக்கெட்களை இழந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை எந்த அணியும் செய்திராத மோசமான சாதனை இது. மொயின் அலிக்கு பதில் களமிறக்கப்பட்ட சான்ட்னர், 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் குவிக்க கடுமையாக திணறினார். 1 டவுனில் சான்ட்னர் களமிறக்கப்பட்டது சென்னையின் சேசிங் வேகத்தை வெகுவாக பாதித்தது.

தோனி - ஜடேஜா

பட மூலாதாரம், BCCI / IPL

படக்குறிப்பு, தோனி - ஜடேஜா

ரன் மழை பொழிந்த ராயுடு

7 ஓவர்கள் முடிவில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த சி.எஸ்.கே.வை ருத்துராஜும் ராயுடுவும் இணைந்து மீட்கத் தொடங்கினர். அதிரடியாக விளையாடிய ராயுடு 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. ருத்துராஜ் 30 ரன்களுடன் விடைபெற, மனம் தளராமல் மறுமுனையில் ரன் மழை பொழிந்தார் ராயுடு. சந்தீப் சர்மா வீசிய அவரது கடைசி ஓவரை குறிவைத்து ராயுடு துவம்சம் செய்ய, ஹாட்ரிக் சிக்சர் 1 பவுன்டரியுடன் அந்த ஓவரில் மட்டுமே 22 ரன்கள் சேர்ந்தன. மெல்ல மெல்ல ஆட்டம் சி.எஸ்.கேவின் பக்கம் திரும்பிய சமயத்தில்தான் 18வது ஓவரில் ரபாடாவின் பந்துவீச்சில் 78 ரன்களில் ஆட்டமிழந்தார் ராயுடு. 39 பந்துகளில் 6 சிக்சர் 7 பவுன்டரி என ராயுடுவின் அதிரடியான ஆட்டம் சி.எஸ்.கேவை சரிவில் இருந்து மீட்டது. இருந்தாலும் கடைசி 2 ஓவர்களில் சி.எஸ்.கேவுக்கு 35 ரன்கள் தேவைப்பட்டன.

ராயுடு

பட மூலாதாரம், BCCI / IPL

படக்குறிப்பு, ராயுடு

ஏமாற்றிய ஜடேஜா - தோனி இணை

களத்தில் தோனியும் ஜடேஜாவும் இருந்தனர். இருவருமே அனுபவம் வாய்ந்த வீரர்கள். ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதில் வல்லவர்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங். டெத் ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் 19வது ஓவரில் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இப்போது கடைசி ஓவரில் சி.எஸ்.கேவுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்து சிக்ஸ், 2வது பந்து வைட். பிறகு அதே பந்து டாட். 3வது பந்தில் தோனி ஆட்டமிழக்க, சென்னை அணி வெற்றியையும் நழுவவிட்டது.

கெய்க்வாட்

பட மூலாதாரம், BCCI / IPL

படக்குறிப்பு, கெய்க்வாட்

ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

ஜடேஜா 16 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரேயொரு பவுன்டரியும் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஒரேயொரு சிக்சரும் மட்டுமே விளாசினார். ராயுடுவின் மிரட்டலான ஆட்டத்திற்கு பிறகும் ஜடேஜா ரன் குவிக்க தடுமாறியது சி.எஸ்.கேவின் தோல்விக்கு முக்கிய காரணம். அதேசமயம் பஞ்சாப்பின் துல்லியமான பந்துவீச்சு அவர்களுக்கு சிறப்பான முடிவை தந்திருக்கிறது. டெத் ஓவர்களில் பஞ்சாப் அணி வீசிய யார்க்கர் பந்துகள் சென்னைக்கு கூடுதல் நெருக்கடியை அளித்தது. ரபாடாவும் அர்ஷ்தீப் சிங்கும் தலா 4 ஓவர்களை வீசி வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் இதுவரை நல்ல தொடக்கத்தை அளிக்காதது, கேட்ச்களை பிடிக்க தொடர்ந்து திணறுவது உள்ளிட்ட செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்வது சென்னைக்கு பின்னடைவு தந்திருக்கிறது. 8 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றிகண்டு புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :