ஐபிஎல் 2022: தோனியின் நெத்தியடி - சிஎஸ்கே கடைசி பந்தில் நிகழ்த்திய சாகசம்

ஐபிஎல் தோனி பிசிசிஐ

பட மூலாதாரம், BCCI/ IPL

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

மகேந்திர சிங் தோனிக்கு வயதாகிவிட்டது, டெஸ்ட் மேட்ச் போன்று ஆடுகிறார் உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்களை தனது பேட்டால் அடித்து நொறுக்கியிருக்கிறார் எம்.எஸ்.தோனி

தோல்வியின் விளிம்பில் இருந்தாலும், தான் ஒரு 'பெஸ்ட் பினிஷர்' என்பதை 40 வயதிலும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார் தோனி. ஆட்டம் முடிந்ததும் தோனியை சக வீரர்கள் ஆரத் தழுவினர்.

ஆனால் கேப்டன் ஜடேஜாவோ தனது தொப்பியை கழற்றி தோனிக்கு தலை வணங்கிய செயல், ரசிகர்களை கரகோஷம் எழுப்பச் செய்தது.

'ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ' என வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த முறை ரன்களை வாரி வழங்கிய கிறிஸ் ஜோர்டன் இந்த முறை அணியில் இல்லை. அவருக்கு பதிலாக பிரிட்டோரியசும், மொயின் அலிக்கு பதில் மிட்செல் சான்ட்னரும் கொண்டு வரப்பட்டனர்.

டக் அவுட்டில் முதலிடம் பிடித்த 'ஹிட்மேன்'

ஐபிஎல் பிசிசிஐ

பட மூலாதாரம், BCCI/ IPL

முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ரோஹித் சர்மா டக் அவுட். இது ஐபிஎல்லில் அவருக்கு 14வது முறை. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 'டக் அவுட் ஆன வீரர்' எனும் மோசமான வரலாறையும் பதிவு செய்திருக்கிறார் உலகின் டாப் பேட்ஸ்மாக போற்றப்படும் ரோஹித் சர்மா.

மும்பை கேப்டனின் தொடர் சொதப்பல் அணியையும் கடுமையாக பாதித்திருக்கிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். சராசரி 16.28 மட்டுமே. ஒரு அரைசதம் கூட அவரது பேட்டில் இருந்து கிடைக்கவில்லை.

இதுதவிர, 15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இஷான் கிஷன் முதல் 2 போட்டிகளில் மட்டுமே ஜொலித்தார். இன்றைய ஆட்டத்தில் அவரும் டக் அவுட். அவரை தொடர்ந்து வந்த சூர்ய குமார் யாதவ், 32 ரன்களும் ஹிரிதிக் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தோனி அளித்த யோசையில் பொல்லார்ட்டிற்கு சிறப்பாக ஃபீல்ட் செட் செய்து 14 ரன்களில் காலி செய்தது சென்னை அணி. மறுமுனையில் நிதானமாக விளையாடிய திலக் வர்மா 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. பந்துவீச்சில் தடுமாறி வந்த சி.எஸ்.கே இந்த முறை துல்லிய தாக்குதல் மூலம் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றியதால் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

சூடுபிடித்த கடைசி ஓவர்

ஐபிஎல் பிசிசிஐ

பட மூலாதாரம், BCCI/ IPL

156 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது சி.எஸ்.கே. முதல் பந்திலேயே ருத்துராஜ் டக் அவுட். 11 ரன்னில் மிட்செல் சான்ட்னரும் அவுட். 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த உத்தப்பாவும் ராயுடுவும் நிதானத்துடன் ஆடத் தொடங்கினார். ராயுடு 40, உத்தப்பா 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்ட, ஆட்டம் இறுதி வரை சூடுபிடித்தது. கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டன.

பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை கொடுத்த பிரிட்டோரியஸ் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து உனத்கட் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இப்போது 5 பந்துகளில் 17 ரன்கள். பிராவோ சிங்கிள் எடுத்து தோனியிடம் ஸ்டிரைக் கொடுக்க, 4 பந்துகளில் சென்னை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன.

கடைசி ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டார் தோனி. அடுத்த பந்தை மெதுவாக போட முயன்ற உனத்கட்டிற்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. பவுன்சான பந்தை ஃபைன் லெக்கில் பவுன்டரிக்கு விளாச, 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார் தோனி. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டன.

பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் அடிக்கத் திணறும் யார்க்கர் பந்து அது. பெஸ்ட் பினிஷர் என பெயர் பெற்றவருக்கு கடைசி பந்து யார்க்கர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதை உணர்த்தும் விதமாக அதையும் பவுண்டரிக்கு விளாசி மும்பை அணியின் வெற்றிக் கனவை தகர்த்தார் எம்.எஸ்.தோனி.

13 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுன்டரிகளுடம் 28 ரன்கள் அவர் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சேசிங்கின்போது கடைசி பந்தில் 8 முறை வெற்றியை ருசித்து சாதனை படைத்திருக்கிறது சி.எஸ்.கே.

'தோனி இருக்க பயமேன்'

பிசிசிஐ ஐபிஎல் தோனி

பட மூலாதாரம், BCCI/ IPL

எல் கிளாசிகோ என போற்றப்படும் ஆட்டத்தில், மும்பையை இந்தியன்ஸை வீழ்த்தி 2வது வெற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு செய்திருக்கிறது

7 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்திருக்கிறது மும்பை. போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் பவுலர்கள் இந்த ஆட்டத்தை தக்க வைப்பார்கள் என நினைத்தேன்.

ஆனால் தோனி எவ்வளவு அமைதியானவர். அவர் என்ன செய்வார் என்பதை நாம் அறிவோம். நாங்கள் அவர்களுக்கு நெருக்கடி அளித்தோம், ஆனால் தோனியும் பிரிட்டோரியஸும் அமைதியாக இருந்து வெற்றியை வசப்படுத்திவிட்டதாக தெரிவித்தார்.

பின்னர் பேசினர் சி.எஸ்.கே கேப்டன் ஜடேஜா, ஆட்டம் நடந்த விதம் எங்களுக்கு பதற்றம் அளித்தது. ஆனால் சிறந்த ஃபினிஷர் இன்னும் களத்தில் இருந்தார், எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். அவர் இன்னும் இங்கே இருக்கிறார், எங்களுக்காக செய்கிறார் என தோனிக்கு புகழாரம் சூட்டினார்

மும்பை அணியின் டாஸ் 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்திய சென்னை வீரர் முகேஷ் சவுத்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பிளே ஆஃப் சுற்று - மும்பைக்கு சிக்கல்

நடப்பு தொடரில் மும்பை அணியின் நிலைமை மோசமாகியிருக்கிறது. இனி ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப்க்குள் நுழைவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. அதே சமயம் 2வது வெற்றியை சென்னை அணி பதிவு செய்திருந்தாலும் ஃபீல்டிங்கில் முக்கிய கேட்ச்களை கோட்டைவிட்டு தொடர்ந்து தவறு செய்து வருகிறது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா, ப்ராவோ உள்ளிட்ட அனுபவ வீரர்களே கேட்சை நழுவவிட்டனர்.

ருத்துராஜ் பேட்டிங்கில் வலு சேர்ப்பதும் மிடில் ஆர்டர்கள் பொறுப்புடன் விளையாடுவதும்தான் இனி வரும் போட்டிகளில் சி.எஸ்.கேவுக்கு பெரியளவில் கைக்கொடுக்கும்

தோனியின் மிரட்டலான பினிசிங் இனி வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்தால் சி.எஸ்.கேவுக்கு கூடுதல் பலமாக அமையும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :