ஐபிஎல் 2022: புதிய அணிகள் முதல் புதிய விதிகள் வரை - முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ எதிர்கொள்கிறது முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
போட்டிகள் நடைபெறும் தேதி
மார்ச் 26 முதல் மே 22 வரையிலான 58 நாட்களில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மே 29ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறுகின்றன?
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை மற்றும் புனேவில் உள்ள 4 மைதானங்களில் 25% பார்வையாளர்களுடன் நடத்த மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
புதிய அணிகள் என்னென்ன?
ஐபிஎல் தொடரில் இந்த முறை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில், தற்போது புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ், குஜராத் டைடன்ஸ் என 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ வில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயந்த்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய விதிமுறைகள் என்ன?
10 அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் ஏராளமான மாற்றங்களை காண தயாராக இருக்க வேண்டும்.
இந்த சீசனில் புதியதாக 3 விதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் 2 முறை டி.ஆர்.எஸ். முறையீடு செய்யலாம்.
ஒரு வீரர் கேட்ச் கொடுத்தால், கேட்ச் பிடிக்கும் முன்பு மறுமுனையில் இருந்த ஆட்டக்காரர் மறுபக்க கிரிஸூக்குச் சென்றால் அவரால் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள முடியும். இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இப்போது புதிய ஆட்டக்காரர்தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஒருவேளை ஓவரின் கடைசிப் பந்தில் ஒருவர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள ஆட்டக்காரர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை எதிர்கொள்ளலாம்.
மூன்றாவது நாக் அவுட் ஆட்டங்களில் சூப்பர் ஓவரை முடிக்க முடியாமல் போனால், லீக் சுற்றில் எந்த அணி முன்னிலை பெற்றதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images
சென்னை அணியின் முகமாக திகழ்ந்த எம்.எஸ்.தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே களம் காண்கிறது. தொடக்க அட்டகாரராக களமிறங்கி ஜொலித்த டு பிளெசிஸ் இப்போது அணியில் இல்லை. புதிய வீரர்களை கையாளுவது அணியை கட்டமைப்பது என ஜடேஜாவுக்கு அதிக வேலைகள் உள்ளன.
சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் விளையாடுகிறாரா?
சென்னை அணியில் விளையாடி வந்த ரெய்னா இந்த ஏலத்தின் மூலம் அணியில் தக்க வைக்கப்படவில்லை. ரசிகர்களால் 'சின்ன தல' என்று அழைக்கப்படும் அவரை எடுக்காதது குறித்து சென்னை ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் இந்த சீசனில் வர்ணனையாளராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குகூடுதல் பலமா?

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய பலமே அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதுதான். இந்த முறை பெரும்பாலான ஆட்டங்கள் மும்பையில் நடைபெறுவது மும்பை இந்தியன்ஸ்க்கு சாதகமாக அமையும். ஆனால் 'இது எங்களுக்கு பெரிய அளவில் சாதாகமாக அமையாது' என்றும் 'அணியில் உள்ள 80% வீரர்கள் மும்பையில் இதுவரை விளையாடியதில்லை' எனவும் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ், போலார்ட், இஷான், பும்ரா ஆகியோர் மட்டுமே மும்பையில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏலத்தில் அதிக விலைக்கு போன இஷான் கிஷன்
15வது ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் எனும் பெருமை பெற்ற இஷான் கிஷன், மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் கூடுதல் வலு சேர்க்க கூடும். 23 வயதான இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் யார்?
ராயல் சேலஞ்ரஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக டு-பிளெசிஸ் தலைமை தாங்குகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த டு-பிளெசிஸை அணியில் தக்க வைக்கவில்லை என்று சென்னை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அணிக்கு வலு சேர்க்க கொல்கத்தாவின் முன்னாள் கேப்டனும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் உள்ளது கூடுதல் பலமாக அமையலாம்.
ரஷிப் பந்த் தலைமையில் டெல்ல் கேப்பிடல்ஸ்
ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சன் ரைசர்ஸ் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இணைந்துள்ளார்.
ஷ்ரெயஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷ்ரேயஸ் ஐயர், ரஹானே, ஆரோன் ஃபின்ச், பேட் க்யூமின்ஸ், ஆண்ட்ரே ரசல், டிம் சவுதி, சுனில் நரேன் என நட்சத்திர பட்டாளமே உள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டியில் கோப்பையை தரவ விட்ட கொல்கத்தா இந்த முறை ஷ்ரேயாஸ் தலைமையில் எப்படி செயல்படும் என்பது உற்று நோக்கப்படும்.
தமிழக வீரர் நடராஜன் எந்த அணியில்?
தமிழக வீரர் நடராஜன் ஐதராபாத் அணியில் களமிறங்குகிறார்.
டேவிட் வார்னர் இல்லாத வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏய்டன் மார்க்ரம் உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்கள் மீது நிரம்பியுள்ளது. பந்துவீச்சில் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மீதும் கவனம் படர்ந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் எந்த அணியில்?
2008ல் ஒரேயொரு முறை மட்டுமே கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி இந்த முறையாவது மீண்டும் கோப்பையை வெல்ல சஞ்சு சாம்சன் தலைமையிலான இளம் படை முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம். பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும் வீரர் யாரும் பஞ்சாப் கிங்ஸ்ல் இல்லை. இந்த முறை கோப்பையை வெல்வது பஞ்சாப்புக்கு கடினம் என சொல்லியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். இந்த கருத்தை ஆட்டத்திறன் மூலம் முறியடிக்க வேண்டிய பெரிய பொறுப்பு மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் வீரர்களுக்கு உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் குஜராத் டைடன்ஸும், கே.எல். ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயந்த்ஸ் அணியும் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை எடுத்திருந்தாலும் ஆடுகளத்தில் அவர்களின் மேஜிக் ஜொலிக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












