ISWOTY - பலக் முதல் அவ்னி வரை: இந்தியாவின் மாற்றுத்திறனாளி பெண் வீராங்கனைகளின் முன்னேற்ற பயணம்

- எழுதியவர், வந்தனா
- பதவி, தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி இந்திய மொழிகள்
முதல் பார்வையில், 19 வயதான பலக் கோலி எந்த ஒரு சாதாரண இளம் பெண்ணைப்போலவே தெரிகிறார். சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான - சமூக ஊடகங்களில் நிபுணராக திரையில் ஸ்க்ரோல் செய்யும் ஒரு பெண்.
ஆனால் பாட்மின்டன் மைதானத்தில் பலக்கைப் பார்க்காத வரையில் மட்டுமே உங்களின் இந்த என்ணம் இருக்கும்.
(பிபிசியின் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வாக்களிப்பு முடிந்தது. முடிவுகள் மார்ச் 28 அன்று அறிவிக்கப்படும்)
பாட்மின்டன் மைதானத்தில் பலக்கைப் பார்ப்பது, அவரது ஃபோர்ஹேண்ட், பேக்ஹேண்ட் மற்றும் அவரது ரேலிகளை பார்ப்பது ஒரு மாயாஜால வித்தை போல இருக்கும். கண்ணிமைக்கும் நேரத்தில் பலக் வேறொருவராக மாறுகிறார்.
இந்த மாற்றத்தை உள்வாங்க உங்களுக்கு சிறிது நேரம் ஆகும்.
அவரது ஒரு கை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. அவர் ஒரு கையால் மட்டுமே விளையாடுகிறார். டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் மூன்று பிரிவுகளில் விளையாடிய ஒரே இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் 19 வயதான பலக்.
இவ்வளவு இளம் வயதில் பாரா ஒலிம்பிக் வரை சென்றது பலக்கிற்கு பெரிய விஷயமாக இருந்தது. சாதனை பெரியதாக இருந்தால் போராட்டமும் பெரியதாகவும் கடினமாகவும் இருந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா-ஸ்போர்ட்ஸ் பற்றி பலருக்கும் தகவல்கள் தெரிவதில்லை. பலக்கும், அவரது பெற்றோரும் ஜலந்தர் போன்ற ஒரு நகரத்தில் வசித்த போதிலும் கூட 2016ஆம் ஆண்டு வரை இந்த வார்த்தையை அவர்கள் கேட்டதில்லை.
முன்பின் தெரியாத ஒருவர் தன்னை சாலையில் தடுத்து, நீ ஏன் பாரா பாட்மின்டன் விளையாடக்கூடாது என்று சொன்னது ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலக் கோலி கூறுகிறார். 2016இல் முதல்முறையாக பாரா பேட்மின்டன் பற்றி அவர் அறிந்து கொண்டார்.
அந்த 'முன்பின் தெரியாத நபர்' சொன்னபடி பலக் 2017 இல் முதல் முறையாக பாட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து விளையாடத் தொடங்கினார். இந்த முன்பின் தெரியாத நபர் (கௌரவ் கன்னா) அவரது பயிற்சியாளராக ஆனார் மற்றும் இரண்டு ஆண்டுகளில் பலக் உலக அளவில் போட்டிகளில் வெற்றிபெறத் தொடங்கினார்.
"எல்லோருமே ஊனத்தை பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறார்கள். சிறுவயதில் யாராவது என்னை முதன்முதலில் சந்திக்கும் போதெல்லாம், உங்கள் கைக்கு என்ன ஆனது என்று ஒரே ஒரு கேள்வியைக் கேட்பார்கள். இது 'பை பர்த்' அதாவது பிறந்ததில் இருந்து இப்படித்தான் என்று நான் சொல்வேன். நான் அப்போது குழந்தையாக இருந்தேன். பை பர்த் என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்குத் தெரியாது. யாரேனும் கேட்டால் நான் ஒப்பிக்க வேண்டிய பதில் இது என்பது மட்டும் எனக்கு தெரியும்," என்று பலக் குறிப்பிட்டார்.
"ஆரம்பத்தில் நான் விளையாட்டில் பங்கேற்பது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனென்றால் நான் விளையாடச் செல்லும் போதெல்லாம் நீ மாற்றுத்திறனாளி. இந்த விளையாட்டு உனக்கானது அல்ல என்று சொல்வார்கள்."
மக்களின் எதிர்மறையான அணுகுமுறை இருந்தபோதிலும், தனக்குத்தானே சவால் விடுக்க தான் உறுதி பூண்டதாக பலக் கூறுகிறார்.
"எனது இயலாமையை சூப்பர் திறனாக மாற்றினேன். பாரா பேட்மின்டன் என் வாழ்க்கையை மாற்றியது."
பாராலிம்பிக்கில் சாதிக்கும் வீராங்கனைகள்
பலக் மட்டுமல்ல, இவரைப் போன்று பல மாற்றுத்திறனாளி இந்தியப் பெண் வீராங்கனைகள் விளையாட்டில் முத்திரை பதித்து வருகின்றனர்.
பலக் தனது விளையாட்டின் மூலம் சரித்திரம் படைப்பதோடு மட்டுமல்லாமல் பதக்கங்களையும் வென்று வருகிறார். மேலும் முக்கியமாக, மாற்றுதிறனாளிகள் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளும்படி தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவித்து, கட்டாயப்படுத்துகிறார்.
இன்றும் இந்தியாவில் பல விளையாட்டு வீரர்களுக்கு தங்கள் சொந்த குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியுள்ளது. வறுமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த மக்களின் அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் பாதையை இன்னும் கடினமாக்குகிறது.
மேலும் அந்த வீரர் ஒரு பெண்ணாக இருந்தால், சிரமங்கள் இரட்டிப்பாகின்றன.
23 வயதான சிம்ரன், டோக்யோ பாரா ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார்.
அவர் 'முழு கர்ப்ப காலத்திற்கு' (pre mature) முன்பே பிறந்தவர். குழந்தை பருவத்திலிருந்தே அவரது கண்களில் பிரச்னை இருந்தது.
டோக்யோ பாரா ஒலிம்பிக்குக்கு முன் நடந்த உரையாடலில் சிம்ரன், "என் கண்கள் சரியில்லை. அதாவது என்னால் ஒரு பொருள் மீது சரியாக ஃபோக்கஸ் செய்ய முடியாது. சிறுவயதில் என் சொந்தக்காரர்கள் என்னை கேலி செய்தார்கள். இந்தப் பெண் வேறு எங்கேயோ பார்த்துக்கோண்டு பக்கத்தில் இருப்பவரிடம் பேசுகிறாள் என்று அடிக்கடி சொல்வார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்."
ஆறு வயதில் சாதித்த சிம்ரன்
சிம்ரனின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில், அவர் சிறுவயதில் இருந்தே மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனை. ஆனால் பெற்றோரிடம் பணம் இல்லை. சிம்ரனுக்கு 18 வயதில் திருமணம் நடந்தது.
ஆனால் அவரது பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ், சிம்ரனுக்கு திருமணத்திற்குப் பிறகு தனது கனவுகளை நனவாக்கவும், தான் நினைத்த வாழ்க்கையை வாழவும் மற்றொரு வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் பயிற்சியாளர் அவருடைய கணவர்தான். ஆனால் வீட்டை கவனிப்பதற்குப் பதிலாக, புது மணப்பெண் வெளியே சென்று ஓடுவது குறித்து அவரது கணவரின் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சிம்ரனும் அவரது கணவரும் யாரையும் பொருட்படுத்தவில்லை. 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், உலக பாரா தடகள போட்டிகளில் சிம்ரன் தங்கப் பதக்கம் வென்றார்.
தன் ஊனத்திற்காக தன்னை கேலி செய்த குடும்பத்தினர் இன்று தன்னை பாராட்டுகிறார்கள் என்று சிம்ரன் கூறுகிறார்.
மெதுவாக ஆனால் நிச்சயமாக, மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் தங்கள் இடத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்.
பாரா சூட்டிங் நாயகி
பாரா ஷூட்டர் அவ்னி லேகரா பற்றி இப்போது அனைவருக்கும் தெரியும். 19 வயதான அவ்னி பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
அவ்னி , 2021ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
10 வயதில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் சக்கர நாற்காலியில் இருந்து வருகிறார். பாராஷூட்டிங் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தது.
இருந்தபோதிலும், அவர் வழக்கமாகச் செல்லும் ஷூட்டிங் ரேஞ்சில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான சாய்வுப்பாதை (Ramp) கூட இல்லை. அவரே அதை நிறுவினார்.
ஆரம்பத்தில், பாரா ஷூட்டர்களுக்குத் தேவையான பிரத்யேக உபகரணங்களை எப்படி, எங்கிருந்து பெறுவது என்பது கூட அவருக்கும் அவரது பெற்றோருக்கும் தெரியாது.
சக்கர நாற்காலி அவ்னியை நடக்க விடாமல் தடுத்திருக்கலாம், ஆனால் அவரது கனவுகளை தடுக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஜெய்பூரில் உள்ள ஷூட்டிங் ரேஞ்சில் அவ்னி விளையாடுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது அவர் ஏன் பாரா ஷூட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
அற்புதமான ஒருமுக சிந்தனை, எப்பொழுதும் கச்சிதமாக இருக்க முயல்வது மற்றும் சாந்தமான நடத்தை. இவை அனைத்தும் அவரை தனித்து நிற்க வைக்கிறது.
"மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடுவது எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.ஆனால் சாதாரண வீரர்களைப் போல நாங்களும் கடுமையாக உழைக்கிறோம் . எங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்."என்று அவ்னி கூறுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மாற்றுத்திறனாளி வீரர்கள், குறிப்பாக பெண் வீரர்கள், ஊடகங்களில் அந்த அளவுக்கு ஊடக கவனத்தைப் பெறவில்லை.
பேசுபொருளான மாறுபட்ட வெற்றிகள்
ஆனால் இப்போது மெதுவான மாற்றம் தெரிகிறது. குஜராத்தின் பாருல் பர்மார் உலக பாரா பேட்மிண்டன் சாம்பியனானபோது, சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
2019ல் இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பை வென்றார். அதே நேரத்தில், இந்திய பாரா பாட்மின்டன் வீராங்கனை மான்சி ஜோஷியும் உலக சாம்பியனானார். அப்போது மக்கள் பாரா பாட்மின்டன் மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்கள் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.
சாலை விபத்தில் சிக்கிய மான்சியின் காலை துண்டிக்க வேண்டியதாயிற்று.
சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பாரா ஸ்போர்ட் பற்றிய தகவல் இல்லாதது, பாலினம் என்ற பெயரில் பெண் வீரர்களுக்கு எதிரான பாகுபாடு, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான வசதிகளுடன் கட்டப்பட்ட மைதானங்கள் அவ்வளவாக இல்லாதது போன்ற சில காரணங்களால் மாற்றுத்திறனாளி பெண்கள் விளையாட்டில் பின்தங்கியுள்ளனர்.
பயிற்சியாளர்கள் பற்றாக்குறையும் பெரும் தடையாக உள்ளது. மான்சி ஜோஷியின் பயிற்சியாளராக இருந்த கோபிசந்த் பிபிசிக்கு அளித்த பேட்டியில், "மாற்றுத்திறனாளி வீரருக்கு பயிற்சி அளிக்க சிறந்த வழி என்ன என்பதைப் புரிந்துகொள்ள நான் பல வீடியோக்களைப் பார்க்க வேண்டியிருந்தது. புரிந்து கொள்வதற்காக ஒற்றைக் காலால் விளையாட முயற்சித்தேன். பின்னர் நான் எனது ஊழியர்களுடன் சேர்ந்து மான்சிக்காக ஒரு சிறப்பு பயிற்சி தொகுதியை உருவாக்கினேன்,"என்று குறிப்பிட்டார்.
சவால்கள் அதிகம். ஆனால், சரியான வாய்ப்புகளும், சரியான வசதிகளும் கிடைத்தால் தாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் நிரூபித்துள்ளனர்.
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மல்லிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். 2016ல் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
2021-ம் ஆண்டு வருவதற்குள், மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் இந்த வெண்கலத்தை, வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களாக மாற்றியுள்ளனர்.
34 வயதில் பதக்கம் வென்றவர்
34 வயதான பவீனா ஹஸ்முக்பாய் படேல் டோக்யோ பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
பவீனா 13 வருடங்களாக டேபிள் டென்னிஸ் விளையாடி வருகிறார். வேலைக்குச்செல்வதோடு கூடவே திருமணத்திற்குப் பிறகு தனது வீட்டையும் கவனித்துக் கொள்கிறார். இது குறிப்பிடத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது என்று அவரது பயிற்சியாளர் லலன்பாய் தோஷி கூறுகிறார்.
மாற்றுத்திறனாளி வீரர்களைப் பற்றி எதிர்மறையான சிந்தனை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மாற்றத்தின் அலையை பார்க்க முடிகிறது.
சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் பவீனாவுக்கு கணவர் மற்றும் தந்தை இருவரின் முழு ஆதரவும் கிடைத்தது.
21 வயதான ருபீனாவின் கதையும் ஏறக்குறைய இதேதான். ருபீனாவின் தந்தை ஜபல்பூரில் மெக்கானிக், தாயார் நர்ஸ்.
கடந்த ஆண்டு பெருவில் நடந்த பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் ருபீனா தங்கப் பதக்கம் வென்றார்.
"பணப்பற்றாக்குறை மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் சிறுவயதில் என்னால் சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் நான் நிரந்தரமாக மாற்றுத்திறனாளி ஆனேன். எங்களுடைய பொருளாதார நிலை நன்றாக இல்லை ஆனாலும் என் பெற்றோர் என்னை இளவரசி போல வைத்திருக்கிறார்கள். பாரா ஷூட்டிங்கில் முன்னேற வேண்டும் என்ற என் கனவு, என் கணவருக்கு மிக முக்கியமானதாக இருந்தது. துப்பாக்கி சுடல், என் வாழ்க்கையை மாற்றிவிட்டது," என்கிறார் ருபீனா.
நான் பேசிய மாற்றுத்திறனாளி வீராங்கனைகளில் பெரும்பாலானோர் பாரா ஸ்போர்ட் தங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டதாக கருதுகின்றனர்.
"உண்மையில் பாரா ஸ்போர்ட் என் உயிரைக் காப்பாற்றியது. எனக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. மாற்றுத்திறனாளியாகவும், ஒரு பெண்ணாகவும் இருக்கும் எனக்கு இந்த விளையாட்டு, ஆணாதிக்கம் நிலவும் சமூகத்தில் மரியாதையை அளித்துள்ளது,"என்கிறார் பக்கோல் சிம்ரன்.
கடந்த ஆண்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களை விட பெண் வீரர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் அவ்னி லேக்ரா இதிலும் புதிய நம்பிக்கையைப் பார்க்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"பெண் வீராங்கனையாக இருப்பது சற்று கடினம். பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்களை தனியாக செல்ல குடும்பத்தினர் அனுமதிப்பதில்லை. இதனால் செலவும் அதிகரிக்கிறது. அதனால் பெண் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்களுக்கு என்ன வாய்ப்புகள் கிடைத்தாலும், மாற்றுத்திறனாளிகள் உட்பட எல்லா இந்திய வீராங்கனைகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்," என்று அவர் கூறினார்.
" வரும் நாட்களில், ஆண்களும் பெண்களும் சமமான எண்ணிக்கையில் பதக்கங்களுடன் வருவார்கள். சாலை நெடியது. ஆனால் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்."
அவ்னியின் இந்த வார்த்தைகள் மனதில் ஓர் இனிய நம்பிக்கையை எழுப்புகிறது.
"நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் அல்லது நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் உங்கள் கனவுகளை அடைய முடியாது என்று உலகம் முழுவதும் சொன்னாலும், இந்த உலகத்தில் எல்லாமே சாத்தியம் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். என்னால் செய்ய முடிந்தால், உங்களாலும் செய்ய முடியும்,"என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலக் கோலி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












