வினி ராமன்: கிளென் மேக்ஸ்வெல் கரம்பிடித்த தமிழ் பெண் - இந்தியர்களை மணம் முடித்த மற்ற வீரர்கள் யார்?

தமிழ்நாட்டு பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Glenn Maxwell/Twitter

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது காதலியான வினி ராமன் உடன் மார்ச் 18-ஆம் தேதியன்று திருமணம் நடந்துள்ளது.

அவர்களுடைய திருமண விழாவின் புகைப்படங்களை கிளென் மேக்ஸ்வெல் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படத்தில், கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் இருவரும் தம்பதிகளாக நிற்கின்றனர்.

வினி ராமன் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். மெர்ல்போர்னில் மருந்தாளராக இருக்கும் அவர், மருத்துவமும் படித்துக் கொண்டிருக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல், வினி ராமன் இருவரும் 2017-ஆம் ஆண்டு முதல் பழகி வந்தனர். இருவரும் பல பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்வது வழக்கம்.

அவர்கள் பழகத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

திருமண உடையில் கைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கும் படத்தைப் பதிவிட்டிருந்த மேக்ஸ்வெல், "காதல் என்பது நிறைவுக்கான தேடல், உன்னுடன் நான் அதை முழுமையாக உணர்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

தவறவிட்ட பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

மேக்ஸ்வெல் மார்ச்-ஏப்ரலில் ஆஸ்திரேலியாவின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வாரா என்ற கேள்வி, அவருடைய திருமணம் நிச்சயமான நேரத்தில் எழுந்தது. மேக்ஸ்வெல், வினி ராமன் இருவருக்கும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் நிச்சயமானது. ஆனால், கோவிட்-19 ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுடைய திருமணத் தேதியைப் பலமுறை மாற்ற வேண்டியிருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திருமணம் முடிவான போது, பாகிஸ்தான் உடனான தொடரில் பங்கெடுப்பாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் செல்கிறேனா இல்லையா என்பது என் வருங்கால மனைவியின் முடிவைப் பொறுத்து இருக்கலாம். ஏனெனில் அந்த நேரத்தில் என் திருமணம் நடக்க வேண்டும். எனவே அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் சரியான நபர் இல்லை," என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டது.

தமிழ்நாட்டு பெண்ணை கரம் பிடித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்

பட மூலாதாரம், Glenn Maxwell/Twitter

அதற்கு, அவருடைய வருங்கால மனைவி திருமணத் தேதியை மாற்றுவதைக் கருத்தில் கொள்வாரா என்று கேட்டபோது, "அதற்கு வாய்ப்பே இல்லை. நாங்கள் ஏற்கெனவே இரண்டு முறை தேதியை மாற்றிவிட்டோம்," என்று கூறியுள்ளார்.

தற்போது மெல்போர்னில் இருவருக்கும் நடந்த திருமணத்தால், மேக்ஸ்வெல் பாகிஸ்தான் உடனான ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தைத் தவறவிட்டார்.

அவர்களுடைய திருமணம், நெருங்கிய நண்பர்கள் 350 பேர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் முறைப்படி அவர்களுடைய திருமணம் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறபடுகிறது.

மேக்ஸ்வெல்லை போலவே இந்திய பெண்களை திருமணம் செய்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சிலருடைய குறிப்புகள் இங்கே:

ஷோயிப் மாலிக்

இந்திய பெண்களை திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீரர்களில் அதிகமாகப் பேசப்படும் பெயர்களில் ஷோயிப் மாலிக்கும் ஒருவர். பாகிஸ்தானின் மூத்த ஆல்-ரவுண்டரான ஷோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஷோயிப் மாலிக் - சானியா மிர்சா

பட மூலாதாரம், Getty Images

முத்தையா முரளிதரன்

இலங்கையின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்தியாவைச் சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்பவரை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மதிமலர், சென்னையிலுள்ள மலர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார்.

ஹஸ்ஸன் அலி

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்ஸன் அலியும் இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஹஸ்ஸன் 2019-ஆம் ஆண்டு துபாயில் இந்தியாவைச் சேர்ந்த சாமியா அர்ஜுவை மணந்தார்.

ஷான் டெய்ட்

கிளென் மேக்ஸ்வெல்லை போலவே, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர கிரிக்கெட் வீரரும் இந்திய பெண்ணை மணந்துள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் மற்றும் மாடல் அழகி மஷூம் சிங் உடன் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணம் மும்பையில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: