மகளிர் உலகக் கோப்பை தொடர்:“ட்ரெஸிங் அறையில் ஒரு குழந்தை சூழலையே மாற்றிவிட்டது”

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்டீபன் ஷெமில்ட்
- பதவி, கிரிக்கெட் எழுத்தாளர், க்ரைஸ்ட்சர்ச்.
மகளிர் உலகக் கோப்பை மீது நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், இந்த தொடரில் அதிக கவனத்தை பெற்ற ஒரு நட்சத்திரத்துக்கு இன்னும் ஏழு மாதங்கள் கூட ஆகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃபின் மகள் பாத்திமாவை சூழ்ந்துகொண்டு கொஞ்சிய காட்சிகள் வைரலாகின. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தக்காட்சியின் முக்கியத்துவத்தை அனைவருமே கவனித்தனர்.
உலகக் கோப்பையில் தனது நாட்டை வழிநடத்தும் நெருக்குதலுடன் கூடவே, ஒரு தாயின் கடமைகளையும் பிஸ்மா சரிவர நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது மட்டுமல்லாமல் பாராட்டுக்குரியதுமாகும். ஆகஸ்ட் மாதத்தில் தான் அவர் பாத்திமாவை ஈன்றெடுத்தார்.
2020 இன் பிற்பகுதியில் அவர் கர்ப்பமானபோது, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக மட்டை வீச்சில் பிளந்துகட்டும் பிஸ்மா நினைத்தார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கொண்டு வந்த மகப்பேறு கொள்கையின் உதவியுடன் மற்றும் பயிற்சியாளர் டேவிட் ஹெம்ப்பின் ஊக்கத்துடன், பிஸ்மா ஒரு உத்வேகத்துடன் திரும்பி வந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"இது என் வாழ்க்கையில் ஒரு அழகான தருணம். ஆனால் தொழில்முறை பார்வையில் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக அது அச்சத்தை தந்தது," என்று பிஸ்மா பிபிசி உலக சேவையிடம் கூறினார்.
"என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று தோன்றியது."
தான் எட்டு வார கர்ப்பமாக இருப்பதாக பிஸ்மா, பயிற்சியாளர் ஹெம்பிடம் கூறியபோது, அவர் உள்நாட்டு டி20 போட்டிகளில் அப்போதுதான் விளையாடி முடித்திருந்தார்.
ஆடவர் உலகக் கோப்பையில் பெர்முடாவுக்காக விளையாடிய, கிளாமோர்கன் மற்றும் வார்விக்க்ஷயர் கவுண்டிகளின் முன்னாள் மட்டை வீச்சாளருமான ஹெம்ப், " பிஸ்மா வருத்தமடைந்தார்," என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
"ஒருபுறம் அவர் உற்சாகமாக இருந்தார். ஆனால் ஒரு வீரராக அவருக்கு சில முடிக்கப்படாத பணிகள் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம்."
அந்த நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,' பெற்றோர் கொள்கையை' செயல்படுத்தும் திட்டங்கள் வைத்திருப்பதை பிஸ்மா அறிந்திருக்கவில்லை. ஒரு வருடத்திற்கான தற்போதைய சம்பளம் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு உதவ கூடுதல் நபருடன் பயணம் செய்வதற்கான விதிமுறைகள் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும்.
அந்த ஆதரவுகள் இருக்கும்போதிலும்கூட, 30 வயதான பிஸ்மா கடந்த ஏப்ரலில் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு எடுப்பதாக அறிவித்தபோது, தான் உலகக் கோப்பைக்குள்ளாக திரும்பி வரமுடியும் என்று கருதவில்லை.
"உலகக் கோப்பை இலக்காக இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன், ஆனால் அவர் கவலையுடன் இருந்தார்," என்று ஹெம்ப் கூறினார்.
"தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், ரன் குவிப்பில் பங்களிக்கவும் தன்னால் முடியுமா என்று அவர் கேட்டார். அதுபற்றி எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. கண்டிப்பாக மீண்டும் விளையாடும் அளவிற்கு அவரிடம் திறமை உள்ளது என்பது எனக்குத்தெரியும்." என்கிறார் ஹெம்ப்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிஸ்மா, பாத்திமா பிறந்ததை அறிவித்தபோது, அவரது சமூக ஊடக இடுகை 30,000 க்கும் மேற்பட்ட பதில்களை பெற்றது.
ஹெம்ப் பிஸ்மாவை ஒரு மாதத்திற்குப் பிறகு பார்த்தார். அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை ஜிம் செல்லத்தொடங்கி இருந்தார்.
"அவர் எப்போது பந்துகளை அடிக்கத் தொடங்கப்போகிறார் என்று நான் கேட்டேன், ஆனால் தான் உடல் ரீதியாக சரியாக உணரும் வரை அதைச் செய்யப் போவதில்லை என்று பிஸ்மா பதில் சொன்னார்," என்று ஹெம்ப் கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் தோனி
- விளம்பரப்பட இயக்குநர் முதல் ஆர்ஆர்ஆர் வரை – ராஜமெளலியின் வெற்றிப் பயணம்
- இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கனைகளின் முன்னேற்ற பயணம்"அவர் டிசம்பரில் பேட்டிங் செய்யத் தொடங்கினார். ஆனால் அப்போதும்கூட அவர் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பது பற்றி உறுதியாக இருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்."
ஜனவரியில் சில பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்ற பிஸ்மா, குழந்தைக்கு பாலூட்ட மைதானத்தை விட்டு வெளியே சென்று திரும்பி வந்து மீண்டும் விளையாடுவார். அந்த நேரத்தில் உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பது யதார்த்தமான ஒன்றாக மாறத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரியில் நியூசிலாந்திற்குப் புறப்படும் நேரம் வந்தபோது, பிஸ்மா தனது தாயை உடன் அழைத்துச்சென்றார். உலகக் கோப்பை போட்டிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். பிஸ்மாவின் கணவர் ஒரு பொறியாளர். அவரால் இத்தனை அதிக விடுப்பு எடுக்க முடியாது.
போட்டியில் பங்கேற்கும் எட்டு தாய்மார்களில் இவரும் ஒருவர். பெண்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையை குடும்ப வாழ்க்கையுடன் இணைப்பதற்கான வளர்ந்து வரும் வாய்ப்பை இது வலியுறுத்துகிறது. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் லிசெல் லீக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்வது, மினி கோல்ஃப் விளையாடுவது போன்ற குழு நிகழ்வுகளில் பங்கேற்பது , அணியின் மற்ற உறுப்பினர்களின் பராமரிப்பில் இருப்பது ஆகியவை பாத்திமாவின் உலகக் கோப்பை அனுபவங்கள்.

பட மூலாதாரம், Getty Images
"வீரர்கள் பாத்திமாவுடன் நன்றாகப்பழகினர்," என்று ஹெம்ப் கூறினார். "பிஸ்மாவிற்கு சிறிது நேரம் ஓய்வு அளிக்க அவர்கள் பாத்திமாவை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார்கள். சில சமயங்களில் ஒருவர் மாற்றி ஒருவர் பாத்திமாவை கொண்டு செல்வார்கள்."
" டிரஸ்ஸிங் ரூமில் ஒரு குழந்தை இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படுமோ என்று நான் பயந்தேன். ஆனால் அது அப்படி இருக்கவில்லை. அது ஒரு அமைதியையும் இயல்பான தன்மையையும் கொண்டு வந்து, பதற்றத்தையும் குறைக்கிறது."என்றார் ஹெம்ப்.
உண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான தோல்விகளை பாகிஸ்தான் சமாளிக்க பாத்திமாவின் இருப்பு உதவியது.
"இது விஷயங்களை பார்க்கும் பார்வையில் மாற்றங்களை கொண்டு வந்தது ," என்று ஹெம்ப் கூறினார். "ஒரு குழந்தை சிரிக்கும் போது அது விரக்தியையும் ஏமாற்றத்தையும் போக்கிவிடும்."
பாத்திமா அணியில் இருப்பதில் நன்மைகள் இருந்தாலும், புதிய பெற்றோர்கள் அனைவரும் அடையாளம் காணக்கூடிய ஒரு சவாலை பிஸ்மாவும் எதிர்கொள்கிறார். அதுதான் தூக்கம்.

பட மூலாதாரம், Getty Images
"அவருக்கு தூக்கக் கோளாறு இருந்தது. ஆனால் எந்த பாதிப்பும் இருக்கவில்லை," என்று ஹெம்ப் கூறினார். "காலை உணவின் போது பிஸ்மா சிறிது சோர்வாக இருப்பதை பார்க்க முடியும். நன்றாக தூங்கினீர்களா என்று கேட்டால் அவர் பதில் எதுவும் சொல்ல மாட்டார். அப்போது நமக்கு புரிந்துவிடும்."
இருந்த போதிலும் பிஸ்மா, பாகிஸ்தான் அணியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வெற்றி பெறச்செய்தார். இது 13 ஆண்டுகளில் அந்த அணி பெற்ற முதல் உலகக் கோப்பை வெற்றியாகும். மேலும் அந்த அணி வியாழக்கிழமை க்ரைஸ்ட்சர்ச்சில் இங்கிலாந்தின் மறுஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும்.
இங்கிலாந்து வீராங்கனை ஃசோபியா டன்க்லி அரையிறுதியில் இடம்பிடிக்க விரும்புவதாகவும், தான் பாத்திமாவை சந்திப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
"குட்டி பாத்திமாவை நான் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருக்கிறாள்," என்று டன்க்லி கூறினார். "ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு திரும்பி வந்து கிரிக்கெட் விளையாடுவது எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கர்ப்பமாக இல்லாமல் இருக்கும்போதே அது மிகவும் கடினம்."என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பாத்திமாவை சந்திக்கும் ஆசையில் இருப்பது டங்க்லி மட்டும் அல்ல.
"ஒரு ஆட்டம் முடிந்த 15 அல்லது 20 நிமிடங்களுக்குள், எதிரணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு வந்து குழந்தை எங்கே என்று கேட்கிறார்கள்," என்று ஹெம்ப் கூறினார்.
"நாங்கள் விளையாடிய ஒவ்வொரு விளையாட்டிலும், எல்லோரும் குழந்தை பாத்திமாவுடன் படம் எடுக்க விரும்பினார்கள்."
இதற்கிடையில், பாத்திமா தனது புதிய புகழில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.
"அவள் கேமராக்களை ரசிக்கிறாள்" என்று பிஸ்மா கூறினார். "அவள் பெரியவளான பிறகு இந்தப்படங்களை பார்க்கும்போது, உலகக் கோப்பை போட்டிகளின்போது தான் அம்மாவுடன் இருந்ததைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைவாள்.'அவள் ஒரு நட்சத்திரம்.' என்கிறார் பிஸ்மா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












