ஐபிஎல் 2022 - CSK Vs GT: வெற்றியை கோட்டைவிட்ட சி.எஸ்.கே - தோல்விக்கு யார் காரணம்?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
கிறிஸ் ஜோர்டன் வீசிய அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. டேவிட் மில்லரின் வெறித்தனமான ஆட்டம் ரஷீத் கானுக்கும் தொற்றிக் கொண்டது. 18வது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். முதல் 2 பந்துகள் சிக்சருக்கு பறந்தன. 3வது பந்து பவுண்டரி; 4வது பந்து சிக்சர். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை வாரி வழங்கியிருந்தது சி.எஸ்.கே.
தனி ஆளாய் போராடிக் கொண்டிருந்த மில்லருக்கு மினி ஹெலிகாப்டர் ஷாட்கள் மூலம் 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பெற்ற கேப்டன் பொறுப்பை கச்சிதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஷூத் கான். 51 பந்துகளில் மில்லர் விளாசிய 91 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
கடைசி ஓவர் வரை போராடிய குஜராத் அணி சி.எஸ்.கேவை வீழ்த்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
ஸ்பார்க்குடன் விளையாடிய ருத்து
புனேவில் நடைபெற்ற 29வது ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விளையாடாததால் அவருக்கு பதிலாக ரஷீத் கான் குஜ்ராத் அணியை வழிநடத்தினார்.
சென்னை அணி வீரர் உத்தப்பா 3 ரன்னிலும் மொயின் அலி 1 ரன்னிலும் விடைபெற்றனர். பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வந்த ருத்துராஜ் கெய்க்வாட் இந்த முறை அதிரடி காட்டினார். அவருடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் கணிசமான ரன்களை குவிக்க 3வது விக்கெட்டிற்கு சி.எஸ்.கே 92 ரன்கள் விளாசியது. ராயுடு 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ருத்துராஜ் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு விடைபெற்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கடைசி 5 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணி, சி.எஸ்.கேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தியது. கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா - துபே இணை 2 சிக்சர் 1 பவுன்டரி விளாச சென்னை அணி 169 ரன்கள் சேர்த்தது
170 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைடன்ஸ்.
பந்துவீச்சில் மிரட்டிய தீக்ஷனா, சவுத்ரி
சவுத்ரி வீசிய முதல் ஓவரில் ஷுப்மன் கில் டக் அவுட் ஆனார். தீக்ஷனா வீசிய 2வது ஓவரில் விஜய் சங்கர் டக் அவுட் ஆனார். பவர் பிளேயில் விக்கெட் எடுப்பதில் சிரமப்பட்ட சென்னை அணி இந்த முறை துல்லியமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றியது. 13வது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக் கொண்டிருந்தது குஜராத். சென்னை அணியின் வெற்றி மெல்ல மெல்ல உறுதியாகிக் கொண்டிருந்த சமயத்தில்தான், அதை தலைகீழாக புறப்பட்டிப் போடத் தொடங்கினார் டேவிட் மில்லர்
டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம்
தனி ஆளாக ரன் குவிக்கத் தொடங்கிய மில்லர் சிக்சரும் பவுன்டரியுமாக விளாசி 28 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். மில்லரை கட்டுப்படுத்த சி.எஸ்.கேவும் ஏதேதோ முயன்று பார்த்தது. ஆனால் ரன் மழை நின்றபாடில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
குஜராத் வெற்றி பெற கடைசி 6 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்டன. மில்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஷீத் கான் தொடக்கத்தில் சிங்கில்ஸ் மட்டுமே எடுத்து தடுமாறினாலும், கிறிஸ் ஜோர்டன் வீசிய 18வது ஓவரை குறி வைத்து பொலந்து கட்டினார். 21 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுன்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்து ஆட்டமிழந்தார் ரஷீத் கான்
வெற்றியை நழுவவிட்ட சி.எஸ்.கே
ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி ஓவர் வரை நகர்ந்தது. 6 பந்துகளில் குஜராத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. வேறு வழியின்றி கிறிஸ் ஜோர்டன் கடைசி ஓவரை வீச முதல் 2 பந்துகள் டாட் பாலாக மாறின. ஆடுகளத்தில் பரபரப்பு நிலவியது. 3வது பந்தில் சிக்சர். 4வதாக போடப்பட்ட புல்டாஸ் பந்து கேட்சாக மாறியது. ஆனால் அது நோ பால். 5வது பந்தில் 2 ரன்கள் ஓடி ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பித்தது குஜராத். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து சென்னை அணிக்கு ஷாக் கொடுத்தது குஜராத் டைடன்ஸ்.
தனி ஆளாக போராடி 6 சிக்சர், 8 பவுன்டரிகளுடன் 94 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மில்லரின் அதிரடி ஆட்டத்தால் சி.எஸ்.கேவின் வெற்றிக்கனவு தகர்க்கப்பட்டது.
மோசமான பந்துவீச்சால் தோல்வி

பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய சென்னை அணி வீரர்களில் இன்றைய ஆட்டத்தின் மூலம் கிறிஸ் ஜோர்டன் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். 4 ஓவர்கள் வீசி 58 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார் கிறிஸ் ஜோர்டன்.
போட்டியை வெல்ல வேண்டிய நிலையில் இருந்த சென்னை அணி, கடைசி ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதே தோல்விக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கின்போது டெத் ஓவர்களை ஜடேஜாவும் துபேவும் சரியாக பயன்படுத்தவில்லை. பேட்டிங்கில் கணிசமான ரன்களை குவித்திருந்தாலும் பந்துவீச்சில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாதது சி.எஸ்.கேவின் வெற்றியை கை நழுவுச் செய்திருக்கிறது. வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இனி வரும் ஆட்டங்களில் வெற்றிக் கணக்கை தொடர்ந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












