கனடா போட்டியில் 13 கோல், பெல்ஜியத்துடன் வெற்றி: இந்திய ஜுனியர் ஹாக்கி அணி உலக கோப்பை வெல்லுமா?

இந்திய ஹாக்கி அணி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்.

ஆண்களுக்கான FIH (Fédération Internationale de Hockey) ஜுனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிசாவில் கடந்த 24ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நான்கு பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின. கடந்த 2016ம் ஆண்டு ஜுனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடின.

அப்போது 2:1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைக் 2வது முறையாக கைப்பற்றியது. எனவே மீண்டும் இரு அணிகளும் உலகக் கோப்பை அரையிறுதியில் மோதிய ஆட்டம் என்பதால், இறுதிப் போட்டி போலவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, போட்டியும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது.

வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வேகத்தில் இரு அணி வீரர்களும் களத்தில் சுழன்றனர். ஆட்டத்தின் முதல்பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணியின் சர்தா நந்த் திவாரி கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்க பெல்ஜியம் வீரர்கள் கடும் முயற்சி எடுத்தனர். ஆனால், இந்திய அணியின் தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தால்,கடைசிவரை முயன்றும் பெல்ஜியம் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் 1:0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நாளை (டிசம்பர் 3) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் மோதுகின்றன.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கடந்த 1979ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா 2 முறையும் ஜெர்மனி 6 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 7வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஜெர்மனியும் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்று தக்க வைக்கும் உத்வேகத்தில் இந்திய அணியும் போட்டியை எதிர்கொள்கின்றன.

கனடாவுக்கு எதிராக 13 கோல்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக க்ரூப் சுற்றில், கனடாவிற்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தால், 13:01 என்கிற கோல் கணக்கில் இந்தியா வென்றது. உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது அதிக கோல் அடித்து இந்திய அணி சாதனை படைத்தது.

இந்திய அணியின் துணைக் கேப்டன் சஞ்சய், அராஜீத் சிங் ஹுண்டல் ஆகியோர் ஹாட் ரிக் கோல் அடித்தனர். அதேநேரத்தில் சார்தானந்த் திவாரி, உத்தம் சிங் அகியோர் தலா 2 கோல் அடித்தனர். கேப்டன் விவேக் சாகர் பிரசாத், மனீந்தர் சிங், அபிசேக் லக்ரா ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து அசத்தினர். மற்றொரு போட்டியில் போலந்து அணியை 8:2 என்கிற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 21 வயதிற்கு உட்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த இளம் படையே விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் உள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பதக்கம் வென்றது. இது, அனைவரையும் உற்று நோக்க வைத்தது. இதையடுத்து இந்தியாவில் ஹாக்கி புது உத்வேகம் பெற்றுள்ளது. இதன்படி, ஜூனியர் உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.

இந்நிலையில், வலிமையான ஜெர்மனி அணியையும் வென்று இறுதிப் போட்டிக்கு செல்லுமா, ஒலிம்பிக் பதக்கத்தைத் தொடர்ந்து, ஜூனியர் உலகக் கோப்பையையும் வெல்லுமா, என்கிற எதிர்பார்ப்பு ஹாக்கி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :